நீங்கள் முயற்சித்தும் முடியவில்லையென்றால் மாத்திரம் குழந்தைகளுக்கான மாப்பாலை அல்லது பசுப்பாலை ஊட்டுங்கள். தாய்ப்பால் எத்தனை தடவை ஊட்டுவது, மாப்பால் எத்தனை தடவை ஊட்டுவது என்று கணக்கு வைக்காதீர்கள். ஒவ்வொரு நேரமும் தாய்ப்பாலையே ஊட்டுங்கள். அது போதாவிட்டால் மாத்திரம் தேவைக்கு ஏற்ப மாப்பாலை அல்லது பசுப்பாலைக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் தாய்ப்பால் சுரப்பதைக் குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
பழச்சாறு
உங்கள் குழந்தைக்கு 3 மாதம் நிறைந்துவிட்டது எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். நான்கு மாதத்தில் அவனுக்கு நீங்கள் பழச் சாற்றை அறிமுகப்படுத்தலாம். முதலில் தோடம்பழச் சாறு கொடுக்கலாம். உடனே வெட்டிப் பிழிந்த தோடம்பழச் சாற்றில் ஒரு கரண்டி மட்டும் ஆரம்பத்தில் கொடுங்கள். சீனியோ நீரோ சேர்க்க வேண்டியதில்லை. வெறும் சாறாகவே கொடுக்கலாம். காலை 8, 9 மணியளவில் இதைக் கொடுக்கலாம். ஒரு தேக்கரண்டியில் ஆரம்பித்துப் படிப்படியாக அதிகரியுங்கள். சிறிது காலத்தில் அரைப் பழத்தின் சாற்றைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
தோடம்பழத்திற்குப் பதிலாக எலுமிச்சம் பழச்சாறு கொடுக்கலாம். இதில் புளிப்பு அதிகமாக இருப்பதால் சிறிது கொதித்து ஆறிய நீரும், சீனியும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
பப்பாசிப் பழத்தையும் சாறாக கொடுக்கலாம். முன்புபோல ஒரு தேக்கரண்டியில் ஆரம்பித்துப் படிப்படியாக அதிகரிக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்குப் பின் பப்பாசிப் பழத்தை மசித்து உண்ணக் கொடுங்கள். திராட்சைப் பழங்களும் உங்கள் குழந்தைக்குக் கொடுக்க உகந்தவை. நல்ல பழங்களாகத் தேர்ந்தெடுத்து நன்கு கழுவிய பின்னரே சாறாக்க வேண்டும். நசிந்து பழுதடைந்த பழங்களையும் தண்டு கழன்ற பழங்களையும் கொடுக்க வேண்டாம்.
வாழைப்பழமும் கொடுக்க ஏற்றது. ஏனைய பழங்களைப் போல கொடுக்கலாம்.
பழங்கள் குளிர்மையானவையா?
பழவகைகள் குளிர்மையானவை, இருமல் சளியை ஏற்படுத்தும் என பெற்றோர் பலரும் பயப்படுவதுண்டு. இது தவறான நம்பிக்கையாகும். இவற்றிற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. உலகின் பெரும்பாலான நாடுகளில் குழந்தைகளுக்கு முதலில் பழச்சாற்றை, பழ மசியலைத்தான் மேலதிக உணவாக கொடுக்கிறார்கள். இதனால் அக்குழந்தைகள் நோய்வாய்ப்படவில்லை. மாறாக நல்ல ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள்.
அத்துடன் பழவகைகளில் நிறைய விற்றமின்கள் அதாவது உயிர்ச்சத்துக்கள் இருக்கின்றன. முக்கியமாக விற்றமின்வியும் தியும் நிறைய இருக்கின்றன. இவை தடிமன் காய்ச்சல் வருவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை என்றே மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
அத்துடன் பழவகைகளில் நிறைய நார்ப்பொருளும் உள்ளது. இது மலச்சிக்கல் ஏற்படாது தடுத்து குழந்தைகளுக்குச் சுலபமாக மலம் வெளியேறுவதை உறுதிப்படுத்தும். எனவே எந்தவித தயக்கமுமின்றிப் பழவகைகளை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
வேறு கெட்டியான உணவுகள்
நான்கு மாதத்தில் குழந்தையின் சத்துணவுத் தேவை அதிகரிக்கின்றது. தாய்ப்பால் மாத்திரம் போதுமானதல்ல. எனவே தான் மேலதிக உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் குழந்தைக்கு மேலதிக உணவு என்பது ஒரு புதிய அனுபவம். குழந்தை அதை விரும்பி ஏற்றுக் கொள்ளும் வண்ணம் சிறிய அளவில் ஆரம்பித்து சிறிது சிறிதாக அதிகரியுங்கள். புதிய உணவை ஒரு வாரம்வரை தொடர்ந்து கொடுத்து குழந்தை அதற்குப் பழக்கப்பட்டபின் இன்னுமொரு உணவை ஆரம்பியுங்கள்.
திட உணவுகளை ஆரம்பிக்கும் நேரத்தில் நீங்கள் எவ்வளவு ஊட்டுகின்aர்கள் என்பது முக்கியமானது அல்ல. அதை குழந்தை எவ்வளவு தூரம் விரும்புகின்றான் என்பதே முக்கியமானதாகும்.
அரிசிக் கஞ்சி
அரிசிக் கஞ்சி அல்லது பாயாசம் ஆரம்பத்தில் கொடுப்பதற்கு ஏற்றதாகும். எமது வழமையான உணவு சோறு என்பதால் குழந்தைக்கு அரிசிக்கஞ்சியை முதலில் அறிமுகப்படுத்துவது நல்லது. முதலில் வடித்த கஞ்சியில் ஒரு அவுன்ஸ் அளவு கொடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துப் பின் 3 தொடக்கம் 4 அவுன்ஸ் கஞ்சி கொடுக்கவும். ஆரம்பத்தில் அதில் கட்டிகள் இல்லாமல் திரவமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சில நாட்களின்பின் சோற்றை மசித்து, வடித்துக் கொடுங்கள். 5 மாதமளவில் மசித்த சோற்றுடன் கலந்த கஞ்சியை வடிக்காமலே கொடுக்கலாம்.
ஆறு மாதமளவில் நன்கு கரையக் காய்ச்சிய சோற்றை நேராகவே கொடுக்கலாம்.
பாலுக்குப் பழகியிருந்த குழந்தை திட உணவை ஏற்க மறுத்தால், அதற்காக கவலைப்படாதீர்கள். அவன் மறுத்தால் கட்டாயப்படுத்தி ஊட்டாதீர்கள். புரிந்துணர்வோடு அணுகுங்கள். குழந்தை உணவைத் துப்பும்போது அச்சுவை அவனுக்குப் பிடிக்கவில்லை என எண்ணாதீர்கள். அவன் உணவை நன்றாக மெல்லுவதாலும், நாக்கினால் ருசியை அனுபவிப்பதாலும் கூடத் துப்பலாம்.
உணவை உங்கள் குழந்தை விரும்பவில்லை என்பதற்காக அதிகமான இனிப்பையும், உப்பையும் சேர்த்து ஊட்ட முயலாதீர்கள். ஏனெனில் குழந்தையின் சுவை உறுப்புக்கள் வளர்ந்தோர்கள் உடையவற்றைவிட நன்றாக வேலை செய்யக்கூடியவை. எனவே அவனுக்கு அதிகப்படியான இனிப்பும், உப்பும் தேவையில்லை. ஆரோக்கியத்திற்கு ஏற்றதுமல்ல.
தயாரிக்கப்பட்ட தானிய மா உணவுகள்
இவற்றைத் தவிர பலவிதமான தானிய மா பைக்கற்றுக்கள் தயாரிக்கப்பட்ட உணவுகளாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. திரிபோஷா, அரச வைத்தியசாலைகளில் போஷாக்குக் குறைந்த குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. ஏனைய பல வகை தானிய மா ஆகாரங்கள் (விலீrலீals) விற்பனைக்குக் கிடைக்கின்றன. எமது முன்னோர்கள் பொரித்த அரிசி மாவைக் கொடுத்தார்கள். அதையே கொடுங்கள். வாங்குவதாயிருந்தால் நல்லதாக இருக்கிறதா என்பதை அவதானித்து வாங்குங்கள். விலை உயர்வானதுதான் நல்லது என நினைத்துவிடாதீர்கள். விளம்பரத்திற்குச் செலவிடப்படும் பணமும் உங்களிடம்தான் அறவிடப்படுகிறது என்பதை மறந்து விடாதீர்கள். எனவே முக்கியமாக தரமானதாகப் பார்த்து வாங்குங்கள்.
ஆரம்பிக்கும்போது ஒரு தேக்கரண்டியில் ஆரம்பியுங்கள். ஒரு தேக்கரண்டி தானியப் பவுடரை சிறிது சுடு நீருடன் கலந்து கொடுங்கள். அல்லது சுடு பாலுடனும் கலந்து கொடுக்கலாம். குழந்தைக்கு ஆறு மாதமாகும்போது ஆறு தேக்கரண்டி அளவு தானியப் பவுடரைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். ஐந்து மாதமளவில் ‘ரஸ்க்’ கொடுக்க ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் தூளாக்கிக் கொடுங்கள். பின் முழுமையாகவே கொடுக்கலாம்.
5 மாதத்தில் ‘சூப்’ கொடுக்கலாம். ஆரம்பத்தில் கரட், உருளைக் கிழங்கு, வெங்காயம், தக்காளி சேர்த்து சூப் செய்யுங்கள். ஒரு வாரத்தின் பின் சூப்பில் இலை வகைகளையும் சேருங்கள். அதன்பின் பயிற்றை, போஞ்சி, பூசணி, லீக்ஸ் போன்றவற்றையும் சேருங்கள். ஓரிரு வாரங்களின் பின் பருப்பு, பயிறு, கெளபீ ஆகியவற்றையும் சூப்பில் சேர்க்கலாம். மீன் அல்லது இறைச்சியை ஆறு மாதத்தின் பின் சூப்பில் சேருங்கள்.
ஆறு மாதமளவில் குழந்தையின் ‘சூப்’பிற்கு சுவையையும், சக்தியையும் கொடுப்பதற்காக சிறிதளவு பட்டர், மாஜரீன் அல்லது தோங்காய் எண்ணெய் சேர்க்கலாம். இந்நேரத்தில் பாணில் அல்லது ரஸ்கில் சிறிது பட்டர் அல்லது மாஜரினை பூசிக்கொடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக