தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினமும் ஆரம்பங்களில் ஒட்டுறவாகவே இருந்தனர்.
இருவரும் தமிழ் நாட்டில் ஒரு முகாமில் தங்கி இருந்த நாட்களும் இருந்தன. இறைச்சிக் கறி சமைக்கின்றமையில் சிறீ சாபாரத்தினம் கை தேர்ந்தவர். அதை சுவைக்கின்றமையில் பிரபாகரனுக்கு அலாதிப் பிரியம்.
ரெலோ பிரமுகர்களான தங்கண்ணா என்று அழைக்கப்படும் தங்கத்துரையும், குட்டிமணியும் 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் திகதி தமிழ் நாட்டுக்கு தப்பி செல்கின்றமைக்காக வடமாராட்சி மணற்காடு கடற்கரையில் ஒரு நாள் காத்திருந்தனர்.
ஆனால் மர்ம மனிதர் ஒருவர் கொடுத்த தகவலின்படி பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். பின் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர். இது ரெலோ அமைப்புக்கு பேரிழப்பு.
தங்கண்ணா, தளபதி குட்டிமணி உட்பட அரசியல் கைதிகள் அனைவரையும் வெலிக்கடை சிறையில் இருந்து மீட்க வியூகம் போட்டார் சிறீ சபாரத்தினம்.
தலைவர் பிரபாகரன் மீது சிறீ சபாரத்தினத்துக்கு அதீத நம்பிக்கை. இத்திட்டத்தை பிரபாகரனின் ஆலோசனைக்கு விட்டார்.
புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமும் இம்மந்திர ஆலோசனையில் பங்கேற்றார்.
வியூகத்தை விளக்கமாக சொன்னார் சிறீ. விழிகளை அகல விரித்து உருட்டினார் பிரபா.
அரசியல் ஆற்றலில் பழுத்தவர் தங்கத்துரை. இராணுவ ஆற்றலில் சிறந்தவர் குட்டிமணி. குட்டிமணியை கொண்டு கடந்த காலங்களில் சில அதிரடிகளை பிரபா மேற்கொண்டு இருந்தார்.
தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர் சிறை மீண்டு வெளியே வருகின்ற பட்சத்தில் ரெலோ இயக்கம் ஓகோ என்று வளர இடம் உண்டு என்கிற விடயம் பிரபாவின் மண்டையில் உறைத்தது.
எனவே இதை மனதில் பொத்தி வைத்துக்கொண்டு சிறீக்கு ஆலோசனை வழங்கினார் பிரபா.
இது தற்கொலைக்கு ஒப்பான விடயம்..... இந்த முயற்சியை கைவிட்டுங்கள்....என்றார் பிரபா.
ஆனாலும் சிறி சபாரத்தினம் இத்திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என பிடிவாதமாக நின்றார்.
சிறீ சபாரத்தினம் திட்டத்தை நிறைவேற்ற தயாரானார். இதற்கென ஒரு கொமாண்டோ படையணி நீர்கொழும்பின் கரையோரப் பிரதேசத்தில் தயாராக நின்றது.
இதை அறிந்த பிரபா காரியத்தில் முந்திக் கொள்ள முடிவெடுத்தார். தென்னிலங்கையில் அமைதிச் சூழலை கெடுத்து விட வழி கண்டார்.
தென்னிலங்கை அமைதி சூழலை கெடுப்பது, சிறீசபாரத்தினத்தின் சிறையுடைப்பு திட்டத்தை இதன் மூலம் தகர்ப்பது என திட்டமிட்டார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இரவு 8.00 மணி. பிரபாகரனுடன் செல்லக்கிளி, ரகு, குண்டப்பா போன்ற புமுக்கிய தளபதிகள் திருநெல்வேலியில் கண்ணிவெடிகளை புதைத்து விட்டு காத்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி நோக்கி வந்து கொண்டிருந்தது இராணுவ டரக் வண்டி. தாக்குதல் கச்சிதமாக நடந்தது. 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஒரேயொரு இராணுவ வீரர் மட்டும் தப்பிப் பிழைத்து ஓட்டமும் நடையுமாக பலாலியை சென்று அடைந்தார்.
தென்னிலங்கையில் தமிழர் பகுதி எங்கும் தீ மூண்டது. அமைதி குலைந்தது. வெலிக்கடைக் சிறையில் தளபதி குட்டிமணி, தங்கண்ணா தங்கத்துரை உட்பட 53 அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர்.
பிரபாகரனின் திட்டம் நினைத்ததை விடவும் கச்சிதமாக பலித்தது. கவலையில் ஆழ்ந்தார் சிறீ சபரத்தினம்.
பிரபாகரனால் குறுக்கு வழியில் ஏமாற்றப்பட்டமையை காலப் போக்கில் சிறீ சபாரத்தினம் உணர்ந்து கொண்டார். நெருக்கமான தோழர்களுக்கு பிந்திய நாட்களில் சொல்லிச் சொல்லிக் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தார். காலம் கடந்த ஞானத்தால் பயன் கிடையாது அல்லவா? பிரபாகரனின் உத்தரவின் பேரில் கோண்டாவிலில் வைத்து புலிகளால் சிறீ சபாரத்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் கடற்கரையில் காத்து நின்றமை குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருந்த மர்ம நபர் வேறு யாரும் அல்லர், சாட்சாத் பிரபாகரன்தான் என்பது மெல்ல மெல்ல வெளியில் தெரிய வந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக