அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 4 நவம்பர், 2012

ஜெனிவா: கேள்விகளால் துளைத்தெடுக்கும் மேற்குலகம் – திணறும் சிறிலங்கா

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வியாழனன்று ஜெனிவாவில் கூட்டப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட விவாதமானது சிறிலங்காவுக்கும் மேற்குலக விமர்சகர்களுக்கும் இடையிலான விரிசலை வெளிக்காட்டி நின்றது.

இவ்விவாதத்தின் போது, சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சில மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்குலக நாடுகள் சுட்டிக்காட்டிய போதும், சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அவற்றை ஏற்க மறுத்ததுடன், சிறிலங்காவில் தற்போது அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் கட்டுமானப் பணிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகவும் ஜெனிவா விவாதத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

ஜனவரி 2006ல் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, ஆகஸ்ட் 2006ல் மூதூரில் அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை, ஜனவரி 2009ல் பத்திரிகை ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டமை, ஜனவரி 2010ல் கேலிச்சித்திர வடிவமைப்பாளரான பிரகீத் எக்னலிகொட காணாமற்போனமை போன்ற குறித்த சில மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஜெனிவா விவாதத்தின் போது அமெரிக்கா கேள்வியெழுப்பியது. இது தொடர்பில் சாட்சியமளித்தவர்களைப் பாதுகாப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அமெரிக்கா அறிய விரும்பியது.

சிறிலங்காவில் காணாமற் போனோர், கடத்தப்பட்டோர் தொடர்பாகவும், வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடாத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காண்பிக்கின்றமை, சிறிலங்காவின் பிரதம நீதியரசரை அவதூறு செய்தமை போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பாகவும் ஜெனிவா விவாதத் தொடரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பலர் இன்னமும் அவர்களது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற்றப்படவில்லை என கனடா சுட்டிக்காட்டியது. அரசியல் யாப்பின் பிரகாரம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குதல் மற்றும் தகவற் சட்ட உரிமை போன்றவற்றை நிறைவேற்றுவதில் சிறிலங்கா அரசாங்கம் ஆர்வங் கொள்ளாமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பாகவும் கனடா வினவியது. போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவ நீதிமன்றம் எவ்வாறான விசாரணைகளை மேற்கொண்டுள்ளது எனவும் அது தொடர்பாக எவ்வாறான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் பிரித்தானியா, சிறிலங்காப் பிரதிநிதிகளிடம் கேள்வியெழுப்பியது.

மறுபுறத்தில், சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகள் மேற்குல நாடுகளால் முன்வைக்கப்பட்ட இவ்வாறான வினாக்களுக்கு பதிலளிக்காது மழுப்பியதுடன், இவ்வாறான குற்றச்சாட்டுக்களை ஏற்க மறுத்தது. சிறிலங்காவில் இடம்பெயர்ந்த அனைத்து தமிழ் மக்களும் மீள்குடியேற்றப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

போரின் இறுதியில் சரணடைந்த 12,000 தமிழீழ விடுதலைப் புலிகளில் 782 பேர் மட்டும் தற்போது புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய 262 பேருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய அனைத்து முன்னாள் புலி உறுப்பினர்களும் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் ஜெனிவா விவாதத் தொடரில் பங்குபற்றிய சிறிலங்கா அரசாங்கத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். 2010ல் காணாமற் போன 7940 பேரில் 6653 பேர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதேபோல் 2011ல் காணாமற் போன 7296 பேரில் 5185 பேர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஜனவரியிலிருந்து சிறிலங்கா இராணுவ நீதிமன்றமானது 30 தடவைகள் கூட்டப்பட்டதாகவும் இதில் 50 வழக்குகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். பாலியல் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டதாவும், ஆனால் இதில் சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்புபடவில்லை எனவும், சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கான நகல் ஒன்று தற்போது அமைச்சரவையின் பார்வைக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பினர் தெரிவித்தனர்.

வடக்கு கிழக்கில் மீள்கட்டுமானத் திட்டங்களுக்காக 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், இதுவரை வடக்கு கிழக்கில் 124,184 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டதாகவும், 98 சதவீதமான நிலப்பரப்பில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் கடந்த வியாழனன்று மேற்கொள்ளப்பட்ட விவாதத் தொடரில் சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செய்தி வழிமூலம் : The New Indian Express – By P K Balachandran
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக