அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 24 மார்ச், 2013

டி.எம். சவுந்தரராஜனுக்கு இன்று 91 வயது

பின்னணி பாடகர்களுக்கு மரியாதை கிடைக்கச் செய்த டி.எம்.எஸ்.

உலகத்தில் உள்ள தமிழ் மக்களிடையே, "டி.எம்.எஸ்.,' என்றால் அறியாதவர் இருக்க முடியாது. இனிமையான குரல், சிறந்த தமிழ் உச்சரிப்பு, கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல், உணர்ச்சிப்பூர்வமாக பாடுவது ஆகியவை, டி.எம்.சவுந்திரராஜனின் தனிச் சிறப்பு. தமிழ் சினிமா இசை உலகில், நீண்ட காலம், இவர் இருந்த இடத்தை இன்னும் யாராலும் பிடிக்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இவரது பழைய பாடல்களின் சிறப்புக்கு காரணம் கேட்டதற்கு, "சிறந்த கவிஞர்கள், காலத்தால் அழியாத தத்துவங்களோடு எழுதிய வரிகள், அதற்கு உயிரோட்டமான மெட்டமைத்து கொடுத்த இசை அமைப்பாளர்கள் துணையுடனும், கதாபாத்திரங்களின் நல்ல நடிப்போடும் ஒட்டி வந்ததால், நான் பாடிய பாடல்கள் இன்றும் மக்களால் நேசிக்கப்படுகிறது...' என்று அடக்கத்துடன் கூறுகிறார் டி.எம்.எஸ்.,

தற்சமயம், 91வது பிறந்த நாள் கொண்டாடும் இவர், இப்போது திரைப்படங்களில் பாடாவிட்டாலும், இவர் பாடிய பழைய பாடல்கள், வானொலி, தொலைக்காட்சி மூலம், தினசரி செவிகளில் ஒலிக்காத நாளில்லை. பிரபலமான கலைஞர்களை எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், அவர்களுக்கு மேடையில் பொன்னாடை அணிவித்து, ஷீல்டு கொடுப்பது வாடிக்கை.

ஒவ்வொரு பிரபலங்கள் வீட்டிலும், ஷீல்டுகள் நிரம்பியிருக்கும். அதே போன்று, டி.எம்.எஸ்., வீட்டிலும் ஏராளமான ஷீல்டுகள் உள்ளன. ஷீல்டு என்றதும், ஒரு பிளாஷ்பேக் நினைவை டி.எம்.எஸ்., கூறினார்:

கடந்த 1959ல், சிவாஜி கணேசன் நடித்த, "பாகப்பிரிவினை' படம் 100 நாள் ஓடியது. அதைக் கொண்டாட, தயாரிப்பாளர் வேலுமணி ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார். அந்த படத்தில் இவர் பாடிய, "ஏன் பிறந்தாய் மகனே...' என்ற பாடல், மிகவும் பிரபலமானது. பின்னணி பாடிய இவருக்கும் அழைப்பு.

அன்று மாலை பட்டு வேஷ்டி, ஜிப்பா அணிந்து, விசிறி மடிப்பு அங்க வஸ்திரம் தோளில் புரள, வைர மோதிரங்கள் விரல்களில் மின்ன, அத்தர் வாசனையுடன் விழாவிற்கு சென்றார் டி.எம்.எஸ்., மாலை மரியாதைகளுக் கிடையே, அரசியல் பிரமுகர்களும் திரை உலக பிரபலங்களும் பேசினர். நடிகர்களும், மற்றவர்களும் பரிசுகளை பெற்றுக் கொண்டனர். காத்திருந்து பார்த்தார் டி.எம்.எஸ்., இவருக்கோ, மற்ற பின்னணி பாடகர், பாடகியருக்கோ எந்த பரிசும் இல்லை. நிகழ்ச்சி முடிந்து வந்த அன்றிரவு, தூங்கவில்லை.

மறுநாளே, விழா ஏற்பாடு செய்த பாகப்பிரிவினை தயாரிப்பாளர் வேலுமணியிடம், "ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்கள் எவ்வளவு முக்கியமானது என்பது நீங்கள் அறியாததல்ல. இதில் உள்ள பாட்டுகளை நீக்கிவிட்டு, படத்தை ஓட்டிப்பாருங்க... அதோட முக்கியத்துவம் தெரியும்.

அப்படி இருக்கும்போது, பின்னணி பாடியவர்களுக்கு பரிசு கொடுக்கும் எண்ணம் வரவில்லையே...' என்று, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் டி.எம்.எஸ்.,

தாராள மனமும், கலைஞர்களிடம் நட்பும் கொண்டவர் தயாரிப்பாளர் வேலுமணி. அவர், டி.எம்.எஸ்.,சின் வருத்தத்தை புரிந்து கொண்டார். அடுத்த படத்திலிருந்து பின்னணி பாடுபவர்களுக்கும் விருதுகள் வழங்குவோம் என்று அறிவித்தார்.

அன்றிலிருந்து ஒவ்வொரு பட விழாவிலும், டி.எம்.எஸ்., மட்டுமின்றி, அவரது முயற்சியால், மற்ற பின்னணி பாடகர்களும் ஷீல்டு கொடுத்து கவுரவிக்கப்பட்டனர்.

எந்த பின்னணி பாடகருக்கும் இல்லாத வகையில், டி.எம்.எஸ்.,சுக்கு இன்றும் ரசிகர் மன்றம் உள்ளது. ரசிகர்கள் என்று சொல்லாமல், "டி.எம்.எஸ்., பக்தர்கள்' என்று கூறிக் கொள்வர். அதில், பெரும்பாலும் இளைஞர்கள் உள்ளது தான் ஆச்சரியம். ஒவ்வொரு ஆண்டும், டி.எம்.எஸ்., பிறந்த நாள் விழாவில், சாலமன் பாப்பையா, லியோனி குழுவினரின், "பாட்டு பட்டி மன்றம்' நடத்தி, வசதி அற்றவர்களுக்கு தேவையான உதவிகள் புரிகின்றனர்.

இந்த ஆண்டும், தன் பக்தர்கள் மத்தியில், 91வது பிறந்த நாள் கொண்டாடும் டி.எம்.எஸ்.,சுக்கு நாமும் வாழ்த்துக் கூறுவோம்.
***

டி.எம்.எஸ்., தான், மாணவ பருவத்தில் பட்ட கஷ்டத்தை நினைத்து, திரை உலகில் பிரபலமானவுடன், காலமான தன் மகன் பெயரில், ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி, வசதியற்ற மாணவர்களுக்கு கல்வி உதவிகளை இன்று வரை தொடர்ந்து செய்து வருகிறார்.
***

மதுரையில், அரசமரம் இசை, இலக்கிய விழாவில், டி.எம்.எஸ்., நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய அப்போதைய அமைச்சர் காளிமுத்து, டி.எம்.எஸ்., பாடல் பற்றி இப்படி கூறினார்:
சிங்கத்தின் முழக்கம்
சிறுத்தையின் பாய்ச்சல்
வேங்கையின் கம்பீரம்
புலியின் வேகம்
மின்னலின் வீச்சு
அருவியின் ஓட்டம்
தென்றலின் தெம்மாங்கு
நிலவின் குளிர்ச்சி...
ஆகிய அவ்வளவும் அடங்கியிருக்கும் குரல்தான் டி.எம்.எஸ்.,சின் சங்கீத மணிக்குரல், அவர் வீரப்பாட்டு பாடினால் கோழைக்கும் வீரம் வரும். சோகப்பாட்டு பாடினால் கல்மனம் கொண்டவருக்கும் கண்ணீர் வரும். காதல்பாட்டு பாடினாலோ சந்நியாசிக்கும் காதல் வரும் என்று, கூறியதும், அந்த பகுதியே கை தட்டலால் அதிர்ந்தது.
***

எம்.எஸ்.ராமகிருஷ்ணன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக