அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 1 ஏப்ரல், 2013

விடுதலைப் புலிகள் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதம்!! - அ.தி.மு.க.வின் அடுத்த அஸ்திரம்!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு தடவை இலங்கை தமிழர் விவகாரம் உச்ச நிலையில் இருப்பதால், கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளுமே இலங்கை தமிழர் விவகாரத்தை வைத்தே அரசியல் செய்ய வேண்டிய நிலை.

இலங்கை விவகாரத்தில் இனியும் காங்கிரஸ் கட்சியுடன் கரம் கோர்த்துக் கொண்டிருந்தால் லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்தே ஒருவழியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறி விட்டது.

இனி இலங்கை தமிழர் விவகாரத்தில் முழு மூச்சுடன் அரசியல் செய்வார் கருணாநிதி.

ஆனால் அ.தி.மு.க.வோ இலங்கை தமிழர் பிரச்னையை வைத்து வேகம் எடுக்க தொடங்கிவிட்டது. தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு, இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை, ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்களுக்குத் தடை என அடுத்தடுத்து அதிரடிகளைக் கிளப்பியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

இதே அ.தி.மு.க. தலைமைதான் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருந்தது. ஆனால் இப்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலுக்கு செவிசாய்க்கிறோம் என்ற கட்சியாக உருமாறியிருக்கிறது.

அடுத்த காட்சி என்ன?

விடுதலைப் புலிகள் புரட்சித் தலைவியை பாராட்டினார்கள் என்ற குரல், அ.தி.மு.க. முகாமில் இருந்து ஒலிக்கலாம் என்று ஒரு பட்சி சொல்கிறது. அதற்கு என்ன ஆதாரம்? விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவராக இருந்த நடேசன், அ.தி.மு.க. தலைமைச் செயலகத்துக்கு பேக்ஸில் அனுப்பி வைத்த கடிதம் ஒன்றை தூசு தட்டி எடுத்திருக்கிறார்கள்.

தேர்தலுக்கு முன், ‘உரிய நேரத்தில்’ கடிதத்தை வெளியிடுவார்களாம்.

இந்த கடிதம், சென்டிமென்டல் ‘டச்’ ஒன்றுடன் வெளியிடப்படலாம். காரணம், இறுதி யுத்தம் நடந்து, தளபதிகள் பலர் கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன் விடுதலைப் புலிகள் அனுப்பிய கடிதம் அது.

புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவராக இருந்த நடேசன், கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன், 2009-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி அனுப்பிய கடிதம் அது.

கடிதம் எழுதப்பட்டு 3 வாரங்களில், எல்லாமே முடிந்து விட்டது. யாரும் உயிருடன் இல்லை.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக