அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

தமிழீழம் குறித்து இலங்கையில் வாழும் தமிழர் பேசுவதுதான் முறை!

தமிழீழம் அமைவது குறித்து இலங்கைத் தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்த, ஐ.நா. மன்றத்தில் இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும், நட்புநாடு இல்லை என்று கூற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழர் உணர்வுகளுக்கு இதமாக இருப்பினும் இது சாத்தியமாகுமா என்ற சந்தேகத்துடன்தான் இப்பிரச்னையை அணுக வேண்டியுள்ளது.

பொதுவாக்கெடுப்பு பல காரணங்களால் பல நாடுகளில் நடத்தப்பட்டுள்ளன. அவை சட்டத்திருத்தம், அரசியலமைப்பு நிர்ணய சட்டத்தை மாற்றியமைத்தல், நாட்டின் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுதல், புதிய வரிகள் என பல்வேறு காரணங்களுக்கானவை.

ஒரு நாடு, இன்னொரு நாட்டுடன் தன்னை இணைத்துக்கொள்ளலாமா என்பதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 1962-இல் சிங்கப்பூரை மலேசியாவுடன் இணைத்துக் கொள்ளலாமா, இணைத்துக்கொண்டாலும் தனிஅடையாளத்துடன் செயல்படலாமா என்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இணைத்துக்கொள்ளலாம் என்று பெரும்பான்மை வாக்கெடுப்பு கிடைத்தபோதிலும்கூட, சிங்கப்பூர் இணைப்பை மலேசியா துண்டித்துக்கொண்டுவிட்டது என்பது வேறுவிஷயம்.

இருப்பினும், ஒரு நாடு, தன்னில் ஒரு பகுதியைப் பிரித்து தனிநாடு அமைக்கும் முயற்சிக்காக பொதுவாக்கெடுப்பு நடத்துமா? நடத்த விரும்புமா? ஒரு அண்டை நாடு இன்னொரு நாட்டை பிளக்க முடியுமா?

நாம் காஷ்மீரில் என்ன செய்தோம்? ஐ.நா பாதுகாப்புக் குழு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கூறியது என்ன? ஜம்மு காஷ்மீர் எந்த நாட்டுடன் இருக்க வேண்டும் என்பதை பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்க வசதியாக அங்கே இரு நாடுகளும் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதானே! இதுவரை அது சாத்தியப்படவில்லை. அப்படியிருக்க, இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் கொடுக்க இந்தியாவுக்கு தார்மிக உரிமை இல்லை. ஆகவே இதுகுறித்து இந்தியா எந்த முயற்சியும் எடுக்காது. இது தெரிந்தும்கூட அரசியல் நடத்துவதற்காக இத்தகைய தீர்மானங்களை தமிழக அரசு கொண்டுவருகிறது.

மேலும், ஒரு நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றால், அந்த மண்ணின் மைந்தர்கள்தான், குடியுரிமை பெற்றவர்கள்தான் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், இலங்கையில் வாழும் தமிழர்கள் இதுபற்றி குரல் எழுப்பாமல் உள்ளனர். தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுக்கின்றன. அதிலும்கூட மிகப்பெரிய போலித்தனம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தா. பாண்டியன், சி.மகேந்திரன், டி.ராஜா ஆகியோர் தமிழீழத்துக்கும் ஆதரவாக இருக்கின்றனர். பாஜக-வில் இல.கணேசன் இது குறித்து ஆதரவு கருத்து தெரிவிக்கிறார். ஆனால், இவர்களின் தலைமை என்ன கருதுகிறது?.

திமுக எழுப்பிய கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் தீர்மானமாக கொண்டுவருவதற்காக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்குகொண்ட சுஷ்மா ஸ்வராஜ் (பாஜக), குருதாஸ் குப்தா (சிபிஐ) ஆகியோர் கூறியதென்ன? “இது திமுகவுக்கும் ஐமுகூ-வுக்கும் இடையிலான பிரச்னை. இதற்கு ஏன் அனைத்துக் கட்சிக்கூட்டம்?’ என்பதுதான். திமுகவின் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானமாகக் கொண்டுவருவதற்கும்கூட இந்த தேசியக் கட்சித் தலைமைகள் உடன்படவில்லை. ஆனால், மாநிலத் தலைவர்கள் பெருங்குரல் எழுப்புகின்றனர். தலைமையிடம் மதிக்காத இக் குரல் என்ன வலிமை சேர்க்கும்?

இலங்கையில் தமிழீழம் உருவாக்குவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதில் இலங்கைக் குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையினர் தாங்கள் வசிக்கும் நாடுகளின் குடியுரிமை பெற்று இரண்டாம், மூன்றாம் தலைமுறையினராக வாழ்கின்றனர். இந்தப் புதிய தலைமுறையில் மீண்டும் இலங்கை திரும்ப விருப்பம் உள்ளவர்கள் எத்தனை லட்சம் பேர்? இவர்களில் வாக்களிக்கும் தகுதியுடன் இன்னமும் இலங்கைக் குடியுரிமையைத் தக்க வைத்திருப்போர் எத்தனை லட்சம் பேர்?

குறைந்தபட்சம் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத் தரவும் அக்கறை கொள்ளாத, ஆர்வம் இல்லாத தமிழக அரசியல்வாதிகள், எவ்வாறு அவர்களுக்காக தனிஈழம் பெற்றுத் தருவார்கள்?

புலம்பெயர்ந்து வசதியோடும், புகுந்த நாட்டின் குடியுரிமையுடனும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஆவேசக் குரலை மட்டுமே தமிழக அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கின்றன. இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் விருப்பம் என்ன என்பது பற்றி நம் அரசியல் தலைவர்கள் கருத்தில் கொள்வதே இல்லை. தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து இலங்கைத் தமிழப் பத்திரிகைகள் என்ன எழுதுகின்றன என்பதாகிலும் இவர்களுக்குத் தெரியுமா?

கொடுங்கோலன் ராஜபட்ச ஆட்சியில் இலங்கைத் தமிழனால் பேசக்கூட முடியாதே, பிறகு அவன் எப்படித் தனி ஈழத்துக்காகக் குரல் எழுப்ப முடியும்? என்கிற கேள்வி

நியாயம்தான். ஆனால், அந்த அளவுக்குத் தெம்பு இல்லாமல் கிடப்போரை தெம்பூட்டுவதற்கான முயற்சிகளைச் செய்வதுதான் தொப்புள்கொடி உறவுகளின் பணியாக இருக்க முடியுமே தவிர, அவர்களை மேலும் அடக்குமுறைக்கு ஆளாக்குவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக இருக்கும். குரல்வளை நெரிக்கப்பட்டு, அச்சத்திலும் வேதனையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நாம் அனுப்பிய குறைவான நிவாரணங்கள்கூட போய்ச் சேர்வதில்லை என்கிறார்கள். அவர்களுக்கு அமைதியும் அதிகாரம் கிடைக்க இந்தியா உதவக் கோருவது மட்டுமே நாம் செயல்படுத்த வேண்டிய திட்டம்! நட்பு நாடாக இருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

பன்னாட்டு விசாரணை, மனித உரிமை மீறல் குறித்து இந்தியா தீர்மானம் கொண்டுவருவது என்பது மட்டுமே சாத்தியம். தமிழீழம் கோரிக்கையை இந்திய அரசு ஏற்காது. அதற்கான பொதுவாக்கெடுப்பும் கேட்காது.

அதனால், தமிழீழம் குறித்து இலங்கையில் வாழும் தமிழர் பேசுவதுதான் முறையாக இருக்கும். அவர்கள் எழுப்பும் குரலுக்குத்தான் உலகம் செவிமடுக்கும்.

இரா. சோமசுந்தரம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக