அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 1 ஏப்ரல், 2013

பெண் காந்தி ஐரோம் ஷர்மிளா ஷானு

1958 செப்டம்பர் 11 அன்று ‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம்’ இயற்றப்பட்டது. கலவரம் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளில் இச்சட்டம் அமல்படுத்தப்படுவதாக அரசு கூறுகிறது. இச்சட்டத்தின்படி பொது இடங்களில் 5 பேர் கூடி நின்றால், எவ்வித விசாரணையும் இன்றி அவர்களைச் சுட்டு வீழ்த்தலாம். எந்நேரத்திலும் யாரையும் வாரன்ட் இல்லாமல் கைது செய்யலாம். இந்தக் காரியங்களைச் செய்யும் ராணுவ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது. அவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது.

மணிப்பூரில் மட்டுமே இச்சட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏராளமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த நிகழ்வுகள் கண்டு வருத்தமடைந்த ஷர்மிளா, இச்சட்டத்துக்கு எதிராகப் போராடும் அமைப்புகளோடு சேர்ந்தார். அப்போது லேம்டென் கிராமத்தில் ஆயுதப்படையினரால் ஓர் இளம்பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான செய்தி 28 வயது ஷர்மிளாவை மிகவும் கலங்கடித்தது. போராட்டத்தைத் தீவிரப்படுத்தும்முயற்சியில் களமிறங்கினார் ஷர்மிளா.

2000 நவம்பர் 1 அன்று மாலோம் கிராம பேருந்து நிறுத்தம். 62 வயது மூதாட்டி, வீரதீர விருது பெற்ற 18 வயது சிறுவன், அவனுடைய அண்ணன் உள்பட 10 பேர் நின்றுகொண்டிருந்தனர். அவ்வழியே வந்த ஆயுதப்படை, இவர்களைக் கண்டதும் சுட்டுத் தள்ளியது. உயிருடன் நின்றுகொண்டிருந்தவர்கள் நொடியில் சடலங்களாக மாறிப்போயிருந்தனர். மாலோம் படுகொலையை அறிந்த ஷர்மிளா துன்பத்தில் மூழ்கினார். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூர் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, உடனே உண்ணாவிரதம் தொடங்கினார். மக்கள் மத்தியில் ஷர்மிளாவின் போராட்டத்துக்கு ஆதரவு பெருகியது.

அதைக் கண்ட அரசாங்கம் ‘தற்கொலை முயற்சி’ என்று காரணம் கூறி, நவம்பர் 6 அன்று அவரைக் கைது செய்தது. இம்பால் ஜவஹர்லால் மருத்துவமனையில் மூக்கு வழியே நீர் ஆகாரத்தைக் கட்டாயப்படுத்தி அளித்தது. அன்று முதல் இன்று வரை ஷர்மிளா மூக்குக்குழாயுடன்தான் இருக்கிறார். தற்கொலை முயற்சி செய்பவரை ஓராண்டு வரையே காவலில் வைக்க முடியும் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு, உடனே மீண்டும் கைது செய்யப் படுகிறார்.ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை தண்ணீர் குடிப்பதில்லை. உணவு சாப்பிடுவதில்லை. தலைக்கு எண்ணெய் வைப்பதில்லை. வாரிக்கொள்வதில்லை. கண்ணாடி பார்ப்பதில்லை. செருப்பு அணிவதில்லை. தன் அன்பான அம்மாவைச் சந்திப்பதில்லை. இப்படி உறுதியோடு உள்ளம் கலங்காமல்இருக்கிறார் ஷர்மிளா.

ஆக சாப்பிடாமல் எத்தனை நாள்கள் இருக்க முடியும்? ஒரு நாள்? ஒரு வாரம்? ஒரு மாதம்? ஒரு வருடம்? 12 வருடங்களாக ஒருவர் ஒரு துளி தண்ணீர் குடிக்காமல், ஒரு கவளம் உணவு சாப்பிடாமல் வாழ்ந்து வருகிறார். அதுவும் நாம் வசிக்கும் இதே நாட்டில். உலகிலேயே அதிக காலம் உண்ணாவிரதம் இருக்கிற இந்த மனுஷி ஐரோம் ஷர்மிளா ஷானுதான். இந்தியாவில் பின்தங்கிய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரைச் சேர்ந்தவர். தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கவில்லை.மக்களுக்காகவே இந்த நெடிய, கொடிய போராட்டத்தை நடத்தி வருகிறார்!

பல் தேய்க்கும்போது தண்ணீர் உபயோகித்தால், தன் உறுதி குலைந்துவிடுமோ என்று பஞ்சு வைத்தே பற்களைச் சுத்தம் செய்கிறார் ஷர்மிளா. பகல் நேரத்தில் அவர் அறையை விட்டு வெளியே வர அனுமதி இல்லை. ஒரு குற்றவாளியைப் போலவே நடத்தப்படுகிறார். படிப்பு, எழுத்து, கவிதை என்று அவருடைய நேரம் கடந்து செல்கிறது. 2006ம் ஆண்டு விடுதலையானபோது இம்பாலில் இருந்து டெல்லிக்குத் தப்பி வந்தார் ஷர்மிளா.

காந்திய கொள்கையைப் பின்பற்றி போராடி வரும் ஷர்மிளா ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்குச் சென்றார். பிறகு ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கினார். ஷர்மிளாவின் போராட்டம் பெரிய அளவில் வெளி உலகுக்குத் தெரிய வந்தது அப்போதுதான். ஏராளமான மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் இறங்கினர். அச்சம் அடைந்த அரசாங்கம் மீண்டும் ஷர்மிளாவைக் காவலில் வைத்தது.

எத்தனையோ எதிர்ப்புகள். மிரட்டல்கள். துன்புறுத்தல்கள்… எதுவுமே அவருடைய போராட்டத்தைப் பலவீனப்படுத்தவில்லை. உடல்நிலை மோசமானாலும் நாளுக்கு நாள் அவருடைய உள்ளம் உறுதியாகிக்கொண்டே இருக்கிறது.

ஷர்மிளாவின் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் அவருடைய உடல்நிலை கண்டு அஞ்சுகின்றனர். அவர்களுக்கு எல்லாம் ஷர்மிளா சொல்லும் பதில்… ‘‘நியாயம், உண்மை, அன்பு, அமைதிக்காகத்தான் போராடிக்கொண்டிருக்கிறேன். இது எனக்கான போராட்டம் இல்லை. மக்களுக்கான போராட்டம். இப்போராட்டத்தில் நான் என்னைத் தண்டித்துக் கொள்வதாக நினைக்கவில்லை. போராடுவது என் கடமை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் விரைவில் நீக்கப்படும் என்று நம்புகிறேன்!’’

‘‘ஒன்பது குழந்தைகளில் இளையவள் ஷர்மிளா. எந்தத் தாயும் தன் குழந்தை பட்டினி கிடப்பதை விரும்ப மாட்டாள். ஒரு தாயாக நான் அவளது போராட்டத்தைக் கைவிடுமாறு பொறுப்பற்றவளாகக் கூறமாட்டேன். நான், அவளைப் பார்த்து அவளை பலவீனப்படுத்த விரும்பவில்லை. என்னையும் நான் பலவீனப்படுத்திக்கொள்ளவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் போராட்டதை விடுமாறு அவளுக்கு நெருக்கடி கொடுக்க மாட்டேன். அவள் மக்களுக்காகப் போராடுகிறாள். இவள் இந்தத் தேசத்தின் குழந்தை’’ என்கிறார் ஷர்மிளாவின் வயதான அம்மா.

இன்று ஷர்மிளா உடலின் பல பாகங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மாதவிடாய் சுழற்சி நின்றுவிட்டது. எந்த நேரத்திலும் அவரது உடல்நிலை மிக மோசமடையலாம். உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் ஷர்மிளாவை விடுதலை செய்ய அழுத்தம் கொடுத்து வருகின்றன. பல்வேறு அமைப்புகள் அவருக்கு விருதுகள் வழங்கிவருகின்றன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக