அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 8 மே, 2013

தமிழ்நாட்டில் வேலைக்காரியுடன் மட்டும் தான் தமிழில் பேசுகிறார்கள்

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட நாள்களாக பட்டிமன்றத்துக்கு உரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இதற்குக் காரணம் இருக்கிறது.

இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கூலித் தொழிலாளர்களாக வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் தங்களது தாய்மொழியான தமிழை இழந்து தங்கள் அடையாளத்தைத் தொலைத்து விட்டார்கள். அவர்களது பெயர்கள் கூட சிதைந்துவிட்டன. இந்த நிலைமை பியூஜி, மொறேஷியஸ், தென் ஆபிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், மடகஸ்கார், றீயூனியன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தாய்மொழி தமிழுக்குப் பதில் இந்தி படிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். இந்த முயற்சியில் இந்திய நடுவண் அரசு மும்மரமாக ஈடுபட்டுள்ளது.
 
எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் தமிழக அரசு புலம்பெயர் நாடுகளுக்குத் தமிழ் ஆசிரியர்களும் பாடப்புத்தகங்களும் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் எம்ஜிஆர் தொடக்கி வைத்த தமிழ்ப் பணியைத் தொடரவில்லை. அதனைக் கைவிட்டு விட்டார்கள். இவர்கள் தமிழ்மொழி வளர்ச்சிக்கு வாயளவில் ஆதரவு அளித்தார்களே ஒழிய நடைமுறையில் பெரிதாக எதனையும் செய்யவில்லை.
 
தமிழ்நாட்டுக்கு வெளியே ஒரு கோடி தமிழ்மக்கள் வாழ்கிறார்கள். இலங்கை, சிங்கப்பூர் நாடுகள் நீங்கலாக வேறு எந்த நாட்டிலும் தமிழ்மொழிக்கு அரச ஒப்புதல் கிடையாது.
 
னடாவில் அண்ணளவாக 30,000 தமிழ் மாணவர்கள் மேல்நிலைப் பள்ளி, பல்கலைக் கழகங்கள் எனப் படிக்கிறார்கள். இவர்களில் மூன்றில் ஒரு விழுக்காட்டினரே தமிழை ஒரு பாடமாகக் கற்கிறார்கள். அதாவது மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளைதான் தமிழ் படிக்குது. மிச்சம் இரண்டும் தமிழ் படிப்பதில்லை.
 
மாணவர்களது இந்த அலட்சியத்தைப் போக்கும் வண்ணம் இங்கு வாழும் தமிழ்மக்களிடையே,  தமிழ்ப் பெற்றோர்களிடையே தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கோடு தமிழ் கலை தொழில்நுட்பக் கல்லூரி 2005 ஆம் ஆண்டு தொடக்கம் ரொறன்ரோ நகரின் பல பகுதிகளில் தமிழ் மொழிக் கிழமை என்ற நிகழ்ச்சியை ரொறன்ரோவின் பல பகுதிகளில் சிறந்த முறையில் நடத்தி வந்தது.; தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்தால் அதில் பெறப்படும் சித்திகள் பல்கலைக் கழக நுழைவுக்குப் பயன்படும் என்ற செய்தி இந்த நிகழ்ச்சியில் வற்புறுத்தப்பட்டது.
 
இந்த தமிழ் மொழிக் கிழமை நிகழ்ச்சிகளில் முன்னாள் அதிபர் பொன். கனகசபாபதி, ஆசிரியர் சண்முகம் குகதாசன் மற்றும் தமிழ்க் கலை தொழில் நுட்பக் கல்லூரி ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டு தமிழ்மொழியின் சிறப்பையும் அதனைப் படிப்பதின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்கள். இந்த முயற்சிக்கு நானும் எனது முழு ஆதரவை நல்கியிருந்தேன். இவ்வாறு பலரது ஆதரவும் உழைப்பும் இருந்தும் இந்த முயற்சிக்குத் தமிழ்ப் பெற்றோர்களிடம் இருந்தும் மாணவர்களிடம் இருந்தும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
 
அதன் பின்னர் தமிழ் மொழிக் கிழமையின் குறிக்கோளை தமிழ் இளையோர் கையில் எடுத்து தமிழ் மரபுத் திங்கள் என்ற பெயரில்  தை மாதம் முழுதும் நிகழ்ச்சிகளை நடத்தி அதன் இறுதி நாளை விழாவாகக் கொண்டாடி வருகிறார்கள்.  இந்த முயற்சியில் எல்லோரும் நன்கு அறிந்த தமிழ் உணர்வாளர் நீதன் சண்முகநாதன் முக்கிய பங்கு வகித்தார்கள். ஆனால் தமிழ் மரபுத் திங்கள் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும்.
 
மேலும் விழா தொடர்பாக வெளியிட்ட தமிழ் மரபுத் திங்கள் என்ற கையேடு முழுவதும் ஆங்கிலத்தில் இருந்தது. அறிவிப்புக்கள் கூட ஆங்கிலத்திலும் இருந்தது. தமிழ்விழாக் கொண்டாடினாலும் சரி, வேறெந்த விழா கொண்டாடினாலும் சரி விழா ஏற்பாட்டினர் ஆங்கிலத்தை விடவே மாட்டோம் என மல்லுக்கு நிற்கிறார்கள்! இப்படித் தமிழை ஓரங்கட்டிவிட்டு ஆங்கிலத்துக்குச் சிறப்பிடம் கொடுப்பவர்கள் அதனை நியாயப்படுத்துவதற்குச் சொல்லும் காரணம் தமிழ் தெரியாத மாணவர்கள் தமிழ்பற்றி ஆங்கிலத்தில் படிக்க வாய்ப்பு அளிக்கிறோம் என்பதே. இது எப்படி இருக்கிறது என்றால் வறுமையை ஒழிப்பது எப்படி என்பதை அய்ந்து நட்சத்திர உணவகத்தில் கூடி விவாதிப்பது போன்றது.
 
தமிழ்த் தெரியாது எனவே அப்படிப்பட்டவர்கள் தமிழ் பற்றி அறிந்து கொள்வதற்கு ஆங்கிலத்தில் பேசுவோம் எழுதுவோம் என்றால் ஒரு மாணவன் ஏன் தமிழ் கற்க வேண்டும். தமிழ் தெரியாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஆங்கிலம் என்று அந்தப் பிள்ளை நினைத்தால் அதில் தவறு இல்லை.
 
புலம் பெயர்ந்த நாடுகளில்தான் தமிழ்மொழிக் கல்வி அருகி வருகிறதென்றால் பலத்த பொருட் செலவில் செம்மொழி மாநாடு நடத்தும் தமிழகத்திலும்  தமிழ் சுருங்கி வருகிறது.
 
தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை மாநகரில் ஒரு மத்திய அரசுப் பள்ளியில் காதாரக் கேட்ட இந்த உரையாடலைப் படியுங்கள்.

எங்கேயோ கேட்ட குரல்!
 
மீனா          – பிரசன்ட் மிஸ்
 
ரோஷ்னா      – பிரசன்ட் மிஸ்
 
புனிதா        – பிரசன்ட் மிஸ்
 
புனிதா ஆர் யூ நியூ அட்மிஷன் ?                -    எஸ் மிஸ்
 
உனக்கு செகண்ட் லாங்வேஜ் தமிழ்தானே, புனிதா?
 
நோ! டமில்…? நோ மிஸ் – ஐ கேவ் டேக்கன் ப்ரெஞ்ச்
 
இஸ் இட்? இன் வாட் லாங்வேஜ் டூ யூ ஸ்பீக் வித் யுவர் பேரண்ட்ஸ்? - 
 
இன் இங்கிலீஷ் மிஸ்
 
வித் யுவர் கிராண்ட் பேரண்ட்ஸ்?  - இன் இங்கிலிஷ் ஒன்லி மிஸ்
 
தென் ஹ_ ஸ்பீக்ஸ் இன் டமில் அட் ஹோம்?  மை சர்வண்ட் ஸ்பீக்ஸ்
 
இன் டமில் (எங்கள் வீட்டு வேலைக்காரி மட்டும் தமிழில் பேசுகிறார்)
 
இஸ் நாட் டமில் யுவர் மதர் டங் ?
 
மை மதர் டங் இஸ் டமில் ஒன்லி !
 
பட் அட் ஹோம் ஒன்லி வித் மை சர்வன்ட் ஐ ஸ்பீக் இன் டமில்.
 
ஆக தமிழ்நாட்டில் தமிழ்மொழி வேலைக்காரியோடு பேசுவதற்கு மட்டும் பயன்படும் மொழியாக இருக்கிறது. மேலே காட்டிய எடுத்துக்காட்டுப் புறநடை என்று சொல்லிவிட முடியாது. இதுதான் விதியாக இருக்கிறது.
 
தமிழக முதல்வருக்கு சொந்தமான அல்லது அவர் பெயரைக் கொண்ட ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் சொல்லி மாளாது.  பல் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சிறார்கள் தொடக்கம் பாட்டிமார் வரை ஆங்கிலம் நுனி நாக்கில் தவழ்ந்து விழையாடுகிறது. நடனம், இசை போன்ற நிகழ்ச்சியிலும்  அவற்றின் நுட்பங்களை ஆசிரியர்கள் ஆங்கிலத்தில்தான் சொல்கிறார்கள்.
 
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் நடத்தும் மக்கள் தொலைக்காட்சியில் மட்டும் ஆங்கிலக் கலப்பற்ற  தூய தமிழ் பேணப்படுகிறது. தமிழ்மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
 
திரைப்பட நடிக, நடிகர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.  தமிழ்த் திரைப்பட கதாநாயகிகளில் தொண்ணூறு விழுக்காடு மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி பேசுவோர் ஆவர்.  அவர்கள் ஆங்கிலத்தில்தான் வெளுத்து வாங்குகிறார்கள். மிக அருமையாக நேர்முகம், செய்தி அறிக்கை போன்ற நிகழ்ச்சிகளில் மட்டும் பேரளவு தூய தமிழைக் கேட்க முடிகிறது.
 
ஆள்வோருக்குத் தமிழ்ப் பற்று இருந்தால்தான் குடிமக்களுக்குத் தமிழில் பற்று வரும்.
 
தமிழகத்தில் தமிழ்மொழி அலுவலக மொழியாக இல்லை. நீதிமன்றத்தில் வழக்குரை மொழியாக இல்லை. கோயில்களில் வழிபாட்டு மொழியாக இல்லை. பள்ளிகளில் கற்கை மொழியாக இல்லை. இதனால்தான் பாரதி மனம் நொந்து பாடினான் -
 
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி

நாட்டத்திற் கொள்ளா ரடீ! – கிளியே!

நாளும் மறந்தா ரடீ!
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கம் பேச்சளவிலேயே இருக்கிறது. முடிமன்னன் எப்படி குடிமக்கள் அப்படி என்பதற்கு இணங்க ஆட்சியாளர்கள் தமிழை ஒதுக்கும் போது குடிமக்களும் தமிழை ஒதுக்குகிறார்கள். அது வேலைக்காரியோடு பேசும் மொழி ஆகப் பதவி இறக்கம் செய்யப்படுகிறது.
 
தமிழ்மொழிக்கு சீரும் சிறப்பும் செய்வதாகச் சொல்லிக் கொண்டு நடத்தப்படும் மாநாடுகளினால்  தமிழ்மொழிக்கு எந்தப் பயனும் ஏற்பட்டதில்லை ஏற்படப் போவதில்லை எனத் தமிழ் உணர்வாளர்கள் பட்டறிவின் அடிப்படையில் நினைக்கிறார்கள்.
 
தமிழ்நாட்டைப் பார்த்து கனடா போன்ற நாடுகளில் உள்ள ஊடகங்களும் தமிழை வழர்ப்பதற்குப் பதில் ஆங்கிலத்தை வளர்க்கின்றன!
 
-  நக்கீரன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக