அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 7 ஜூலை, 2013

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 39

ராஜிவ் கொலை வழக்கு: சிவராசன் பற்றிய தகவல்கள் சி.பி.ஐ.க்கு எப்படி கிடைத்தது?

அத்தியாயம் 39


சுதந்திர ராஜா காட்டிய இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பைகளில் இருந்த பல புத்தகங்களுடன், சிவராசனின் டைரிகளும், சிவராசன் எழுதிய வரவு செலவு கணக்கு புத்தகமும் சுபாவின் ஆட்டோகிராப் புத்தகமும் இருந்தன.

ராஜிவ் கொலையில் பிரதான திட்டமிடலாளர் சிவராசன்தான் என்ற முடிவுக்கு வந்திருந்த சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழு, சிவராசனை தீவிரமாக தேடிக்கொண்டிருந்த நேரம் அது. சிவராசன், தலைமறைவாகியிருந்தார். அவருடன் சுபாவும் தலைமறைவாகியிருந்தார்.

விளம்பரங்களின் வருமானத்திலேயே இந்த இணையத்தளத்தை தொடர்ந்து நடத்த முடியும். தமிழில் அதிகம் வெளியாகாத இதுபோன்ற கட்டுரைகளை தொடர்ந்து தர முடியும். இந்தக் கட்டுரைக்கும் வாசகர்கள் ஆதரவு இருந்தால், தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடலாம். நாம் முன்பே குறிப்பிட்டபடி, இதே கட்டுரையை ஆங்கிலத்திலும் வெளியிடவில்லை. ஆனால், மற்றொரு கட்டுரையின் லிங்க் தரப்பட்டுள்ளது.

சிவராசனை சி.பி.ஐ. தேடிக்கொண்டிருந்ததே தவிர, உருப்படியான லீட் எதுவும் அவர்களுக்கு கிடைக்காததன் காரணம், சிவராசன் பற்றிய எந்த தகவலும் அவர்களிடம் இல்லை. சிவராசனுக்கு ஒற்றை கண் மட்டுமே உள்ளது என்பதும், அவரது சில போட்டோக்களும் மட்டுமே கிடைத்திருந்தன.

இதனால், சிவராசனை பிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த சி.பி.ஐ. புலனாய்வு டீமுக்கு, சுதந்திர ராஜா காட்டிய இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பைகளில் இருந்த சிவராசனின் டைரிகள்தான் பெரிய பொக்கிஷமாக அமைந்தது.

சிவராசனின் டைரிகள் மூலம், புலனாய்வாளர்களுக்கு ஏராளமான தகவல்கள் கிடைத்தன. ராஜிவ்காந்தி படுகொலை நடவடிக்கை உள்பட தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட உளவுப்பிரிவு நடவடிக்கைகளுக்கு உதவியவர்கள் யார்? விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு தமிழகத்தில் வாடகைக்கு பிடித்த வீடுகள் (சேஃப் ஹவுஸ்), அந்த வீடுகளில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் யார்? என்பது போன்ற விஷயங்கள் அந்த டைரிகளில் இருந்தன.

அத்துடன், விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவின் தமிழக நடவடிக்கைகளுக்கான, பணம் எப்படி வந்தது என்ற விபரம், வரவு செலவு புத்தகத்தில் விளக்கமாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தபோது கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கெட்டுகளை தம்பி அண்ணா விற்று கொடுத்திருக்கிறார். அந்த வகையில், 17 லட்சம் ரூபாக்கு மேல் பெறப்பட்ட பதிவு இருந்தது (1990களில் அது பெரிய தொகை).

சுபாவின் ஆட்டோகிராப் புத்தகத்தில், ராஜிவ் கொலையில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட தனு சில வரிகள் எழுதி கையெழுத்திட்டிருந்தார். “ஏதாவது காரணத்துக்காக ‘முக்கிய காரியத்தை’ முடிக்க என்னால் முடியாது போனால், நீதான் செய்து முடிக்க வேண்டும்” என்று தனு எழுதியிருந்தார்.

‘முக்கிய காரியம்’ எது என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஆனால், அது ராஜிவ் காந்தியை கொல்வதுதான் என சி.பி.ஐ. புலனாய்வாளர்கள் ஊகித்தனர். அதனால், ராஜிவ் கொலைக்கு மனித வெடிகுண்டாக அழைத்து வரப்பட்ட ‘மாற்று’ பெண் சுபாதான் என்று முடிவு செய்தார்கள்.

அதாவது, ஒருவேளை தனு மனித வெடிகுண்டாக வெடித்து ராஜிவ்வை கொல்வதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், மாற்று மனித வெடிகுண்டாக பயன்படுத்த அழைத்துவரப்பட்டவர் இந்த சுபா என்பது சி.பி.ஐ.யின் தியரி.

இந்த சுபாவும், சிவராசனுடன் தலைமறைவாகியிருந்தார்.

சுதந்திர ராஜா மேற்கொண்டிருந்த முக்கிய பணிகளில் ஒன்று, சிவராசனின் செய்தியை தமிழகத்தில் சென்னையிலும், திருச்சியிலும் தங்கியிருந்த வெவ்வேறு விடுதலைப்புலிகளிடம் கொண்டு போய் சேர்ப்பது. அதாவது சிவராசனின் செய்தி தொடர்பாளராக செயல்பட்டிருக்கிறார்.

அதிலும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் சிவராசன் படத்துடன் சிறப்புப் புலனாய்வுப்பிரிவு அறிவிப்பு வெளியிட்ட பிறகு, வெளியில் தலைகாட்டாமல் சிவராசன் முடங்கிக்கிடந்தபோது, அவரிடமிருந்து செய்திகளைப் பெற்று மற்றவர்களுக்கு அளித்து வந்தவர் தாம்தான் என்று விசாரணையில் கூறினார் சுதந்திர ராஜா.

மற்றொரு பணி, சிவராசனின் காசாளரான தம்பி அண்ணாவிடமிருந்து பணத்தைப் பெற்று, மற்ற விடுதலைப்புலிகளுக்கும், விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவினரின் வாடகை வீடுகளில் தங்கியிருந்தவர்களுக்கும் விநியோகிப்பதாகும்.

சிவராசனால் வாடகைக்கு பிடிக்கப்பட்ட சுமார் 10 வீடுகளுக்கான வாடகைப் பணத்தை, மாதாமாதம் சுதந்திர ராஜாதான் அந்ததந்த வீடுகளில் தங்கியிருந்தவர்களிடம் கொண்டுபோய் கொடுத்து வந்தார். அவர்கள் அந்தப் பணத்தை வீட்டு உரிமையாளருக்கு கொடுப்பார்கள்.

இந்த வீடுகள், அல்லது சேஃப் ஹவுஸ்களில்தான் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் – சிவராசன் உட்பட – அவ்வப்போது விருந்தினர் போல வந்து தங்கி சென்றார்கள்.

இந்த விபரங்கள் விசாரணையில் தெரிய வந்தவுடன், அந்த வீடுகள் அனைத்தையும் முற்றுகையிட்டது, சி.பி.ஐ. டீம். அங்கு சிவராசனும், சுபாவும் எப்போது தங்கியிருந்தார்கள் என விசாரித்தார்கள்.

ராஜிவ் காந்தி மே மாதம் 21-ம் தேதி (1991) கொல்லப்பட்டார். அதிலிருந்து சுமார் 1 வாரத்தின் பின்னர்தான், சிவராசன் மற்றும் சுபாவின் போட்டோக்களை வெளியிட்டு, இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளவும் என்று சி.பி.ஐ. டீம் விளம்பரம் செய்தது.

விடுதலைப் புலிகளின் வாடகை வீடுகளில் தங்கியிருந்தவர்களிடம் விசாரித்தபோது தெரியவந்த தகவலின்படி, 1991 ஜூன் முதல் வாரத்திலிருந்து, சென்னையில் இருந்த விஜயனின் வீட்டுக்குள்ளேயே இருந்தார் சிவராசன். அவருடன் சுபா, நேரு ஆகிய இருவரும் அங்கு தங்கியிருந்தனர்.

அங்கிருந்து எப்படியாவது வேதாரண்யம் சென்று படகு மூலம் இலங்கை செல்வதே சிவராசனின் திட்டமாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் அவர் தீவிரமாக இருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மானிடம் இருந்து படகு எப்போது வரும் என்ற தகவலுக்காக காத்திருந்தார்.

அதே நேரத்தில், சி.பி.ஐ. சிவராசனை வலைவீசி தேடிவரும் செய்திகள் தினமும் பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருந்தன.

விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், பஸ் நிலையங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு இருந்தது. கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சிவராசனைப் போல ஒற்றைக்கண் உள்ளவர்களும் உண்டு என்ற தகவல்களை அறிந்து சிவராசன் பெரிதும் கவலையடைந்ததாக சுதந்திர ராஜாவும், விஜயனும் விசாரணையில் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சிவராசன் மற்றும் சுபா பற்றிய தகவல் தருபவர்களுக்கு முறையே 10 இலட்சம், 5 இலட்சம் ரூபா வெகுமதி அளிக்கப்படும் என சிறப்புப் புலனாய்வுப்படை அறிவித்தது. இந்த வலையில் சிக்காமல் தப்பிக்க ஏதாவது மார்க்கம் உள்ளதா என்று பொட்டு அம்மானுக்கு ஒயர்லெஸ் மூலம் தகவல் அனுப்பினார் சிவராசன்.

தமிழக கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்த காரணத்தால், தமது படகுகள் எதுவும் தமிழகத்தை நெருங்க முடியாமல் உள்ளதாக பொட்டு அம்மான் பதில் அனுப்பியிருந்தார்.

திடீரென, விஜயன் வீட்டில் இருந்த சிவராசனுக்கு பொட்டு அம்மானிடம் இருந்து ஒரு தகவல் வந்தது.

விடுதலைப் புலிகளின் தமிழகத்துக்கான அரசியல் பிரிவுத் தலைவரான திருச்சி சாந்தன், சிவராசன் தப்பிச் செல்ல உதவி புரியச் சம்மதித்துள்ளதாக அந்த தகவல் சொன்னது. விடுதலைப் புலிகள்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதையடுத்து திருச்சி சாந்தனும் தலைமறைவாகவே இருந்தார்.

தலைமறைவாகிவிட்டபோதிலும், ஒயர்லெஸ் மூலம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பு வைத்திருந்தவர் இந்த திருச்சி சாந்தன். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினருடன், உளவுப் பிரிவினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என்பதால், சிவராசனுக்கும், திருச்சி சாந்தனுக்கும் மற்றவர் தங்கியுள்ள இடம் தெரியாத நிலை.

இதற்கும் ஒரு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார் பொட்டு அம்மான். சென்னையில் உள்ள விடுதலைப் புலிகள் தீவிர ஆதரவாளரும், இலங்கைத் தமிழருமான பொறியாளர் ஒருவரது வீட்டில் இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. (தொடரும்)

விறுவிறுப்பு.காம்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக