அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 16 ஜூலை, 2013

கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு மேற்கொள்ள முடியுமா?

கர்ப்பம் தரித்த பெண் ஒருவர் பிரசவ காலம் வரை தாம் எப்படிக் கவனமாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறையாக உள்ளார். தமது வயிற்றில் வளரும் சிசுவுக்கு எவ்வித ஆபத்துகளும் வராது இருப்பதற்கே எந்தத் தாயும் விரும்புகின்றார். இந்நிலையில் தம்பதிகளாக வாழ்பவர்கள் தாம் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியுமா என்பதில் ஒரு தெளிவற்ற நிலைமை விளங்கி வருகின்றது. புதிய தம்பதிகள் இவ்வாறான உறவினால் தமது கர்ப்பகாலத்திற்கோ அல்லது வயிற்றில் வளரும் சிசுவுக்கோ பாதகமான விளைவுகள் வந்து விடும் என ஏங்குகின்றனர். ஆனால் மூத்த சந்ததிகளும் வீடுகளில் உள்ள பெரிய தலைமுறையும் இவ்வாறான தாம்பத்திய உறவுகள் கர்ப்பக்காலத்தில் இருந்தால் பிரசவமானது சாதாரண சுகப் பிரசவமாக அமையும் இல்லா விட்டால் பிரசவமானது சிசேரியனாக மாறி விடும் என்ற கருத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தம்பதிகள் கர்ப்பகாலத்தில் இவ்வாறான உறவுகள் மூலம் நன்மை தீமைகள் எவை என்பதனை அறிவதில் அக்கறையாக உள்ளனர். ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமான கருத்தை சொல்லும் போது சம்பந்தப்பட்டவர்கள் சரியான தகவல்களை எடுக்க முடியாத நிலை உள்ளது. சில சந்தர்ப்பங்களில் இவற்றை யாரிடம் கேட்பது என்பதில் ஒருவித தயக்கமும் வெட்கமும் நிலவுகின்றது. சில தம்பதிகள் தமது வைத்திய நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். சிலர் இதற்கு ஒரு தயக்கமான நிலையில் இது பற்றி கதைக்காமல் விடுவார்கள். எனவே மக்கள் மத்தியில் கர்ப்பகாலத்தில் தாம்பத்திய உறவுபற்றி சரியான தகவல்கள் போய் சேர வேண்டும்.

கர்ப்ப காலத்தில் எந்த மாதத்தில் தாம்பத்திய உறவு மேற்கொள்ள முடியும்

கர்ப்பக்காலத்தில் ஆரம்ப முதல் மாதத்தில் இருந்து இறுதி பிரசவகாலம் வரை தாம்பத்திய உறவு ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது. ஆனால் சிலவித சிக்கல்கள் உள்ளபோது அதாவது கர்ப்பகாலத்தில் குருதிக்கசிவு இரத்தப்போக்கு மற்றும் பன்னீர்குடம் உடைந்து நீர்வெளியேறும் நிலை குறைமாத பிரசவ வலி வயிற்றுவலி உள்ள போது தாம்பத்திய உறவை முற்று முழுதாக தவிர்க்க வேண்டும். அத்துடன் கணவருக்கோ மனைவிக்கோ இலிங்க உறுப்புகளில் கிருமி தொற்று அல்லது புண் போன்றன இருந்தால் தொப்புள் நச்சுக்கொடி கீழ் இருந்தால் தாம்பத்திய உறவு தவிர்க்கப்பட வேண்டும்.

தாம்பத்திய உறவினால் கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய தீமைகள் எவை?

கர்ப்பகாலத்தில் தாம்பத்திய உறவு மேற்கொள்ளும் போது கர்ப்பிணிப் பெண்ணுக்கு சில வேளைகளில் பிரசவ யோனி வாசலில் கிருமி தொற்றுகள் ஏற்பட முடியும். ஏனெனில் தாம்பத்திய உறவு என்பது மிகவும் துப்புரவான சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் ஆண், பெண் இலிங்க உறுப்புக்களிலுள்ள கிருமிகள் பிரசவ வாசலினுள் உட்புகுத்தப்பட்டு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பளிக்கும். இவ்வாறான கிருமி தொற்றினால் கர்ப்பகாலத்தில் பன்னீர்க்குடம் உடைந்து திரவமானது குறை மாதத்திலேயே வெளியேற முடியும். இதனையடுத்து குறைமாதப்பிரசவ வலியும் ஆரம்பித்து விடும். இவ்வாறான குறைமாதப் பிரசவத்தினால் சிசுவுக்கு பல கிருமி தொற்றுகள் ஆபத்துகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே பாதுகாப்பற்ற கர்ப்பகால தாம்பத்திய உறவு மூலம் பிரசவ வாசலில் கிருமி தொற்றுகளுக்கு சந்தர்ப்பம் உள்ளது என்பதில் கவனம் இருக்க வேண்டும்.

மேலும் கர்ப்ப காலத்தில் தொப்புள் நச்சுக்கொடி கர்ப்பப்பை வாசலை மூடி வளர்ந்திருந்தால் இவ்வாறான உறவுகள் மூலம் குருதிப்போக்கு ஆரம்பித்து விடும். ஆகையால் இவ்வாறானவர்கள் இது குறித்து அவதானம் தேவையாக உள்ளது.

கர்ப்பகாலத்தில் தாம்பத்திய உறவு மூலம் பிரசவமுறைகள் மாறுமா?

சாதாரண பிரசவமா சிசேரியன் பிரசவமா என்பது கர்ப்பத்தில் உள்ள சிசுவின் பருமனையும் அதன் அமைப்பு மற்றும் கர்ப்பப்பையில் இருக்கும் விதம் தாயின் இடுப்பு பருமன் என்பவற்றை பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றது. ஆனால், பிரசவ முறையானது ஒருவர் தாம்பத்திய உறவில் ஈடுபட்டார் என்பதற்காக கட்டாயம் சாதாரண பிரசவமாக அமையும் இல்லாவிட்டால் சிசேரியனாகத் தான் இருக்கும் என்பது தவறானது. ஆனால், நிறைமாதக் கர்ப்பத்தில் மேற்கொள்ளப்படும் தாம்பத்திய உறவு மூலம் பிரசவ வலியானது ஆரம்பிக்க வாய்ப்புள்ளது அத்தோடு கிருமி தொற்றுகள் குறித்தும் கருத்தில் எடுக்க வேண்டும்.

கர்ப்பகால தாம்பத்திய உறவு பெண்ணின் கர்ப்ப வயிற்றுக்கு தாக்கம் ஏற்படாதவாறு மேற்கொள்ள வேண்டும். அதாவது உறவின் போது பெண் கீழே ஆண் மேலே இருந்தால் பெண்ணின் வயிற்றுப் பாரம் தாக்கப்படும். இதனால் வலி ஏற்படலாம். எனவே கர்ப்பகாலத்தில் ஆண் கீழே பெண் மேலே என்ற நிலையில் உறவு மேற்கொள்வது ஆபத்தற்றது.

எனவே, கர்ப்பக்கால தம்பத்திய உறவு என்பது கவனமாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள வேண்டியது. இதனால் பல தீமைகளும் வரக்கூடும் என்பதில் கவனம் இருக்க வேண்டும். இதன் மூலம் தான் சுகப் பிரசவம் கிடைக்கும் என்ற கருத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக