அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 9 செப்டம்பர், 2013

நமது புலம்பெயர்ந்த தமிழ்ப் பிரமுகர்களுக்குத் தமது ஆற்றலின் வரையறைகள் விளங்க வேண்டும்.

அமைச்சர் மேவின் சில்வாவின் தரக்குறைவான பேச்சும் நடத்தையும் நமக்குப் பழக்கமானவை. அவருடைய அடியாட்கள் தமது கைவரிசையைக் காட்டாதவரை, அவருடைய கருத்துகளுக்கு யாரும் ஒரு முக்கியத்துவமும் வழங்குவதில்லை. திருமதி நவநீதம்பிள்ளையை நிந்திக்கும் விதமாக அவர் கூறியவை ஒரு சாக்கடைப் பத்திரிகையேனும் பிரசுரிக்கத் தகுதியற்றவை. எனினும், சில முக்கிய நாளேடுகள் அவருடைய கூற்றுக்கு முக்கியத்துவம் வழங்கிப் பிரசுரித்திருந்தன. அவை அவருடைய கருத்தை ஏற்றனவா இல்லையா என்பதல்ல இங்குள்ள கேள்வி. அவரது கூற்றைப் பிரசுரிக்க வேண்டிய தேவை என்ன? அது நமது ஊடகங்களின் தராதரம் பற்றிய கேள்வியாகிறது. பொறுப்புள்ள அனைத்துப் பத்திரிகைகளும் அதைப் புறக்கணித்திருந்தால் அது பெரும்பாலும் நமது விருந்தினருடைய காதில் விழாது போயிருக்கலாம். எனவே, அச் செய்திக்கு முக்கியம் வழங்கியோர் அது அவருடைய செவிக்கு எட்டுவதை விரும்பினர் என்றே கருத வேண்டியுள்ளது. இதற்கு வேறு சான்றுகளும் துணையாகின்றன.

நவநீதம்பிள்ளையைப் பற்றிய செய்திகளிலும் அவருடைய படங்களின் கீழான விளக்கக் குறிப்புக்களிலும் கூடப் பத்திரிகையாளர்களின் அடிமனதிலிருந்த காழ்ப்பு வெளிப்பட்டிருந்தது. இங்கே பேரினவாத ஊடக நிறுவனங்கட்கும் அவற்றின் ஆசிரிய பீடத்தொண்டரடிப் பொடிகளுக்கும் இருந்து வரும் ஒரு சங்கடம் முக்கியம் பெறுகிறது. ஒரு புறம் சீன எதிர்ப்பையோ இந்திய மேலாதிக்கம் பற்றிய தம் அச்சங்களையோ இந்த நிறுவனங்கள் வெளிக்காட்டினாலும், இந்த நாட்டின் பொருளாதாரம் முற்று முழுதாக மேற்குலக ஏகபோக முதலாளியத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது அவற்றுக்கு உடன்பாடானது. எனவே, இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனிதஉரிமைக் கழகத்தின் தீர்மானங்களின் பிரதான கர்த்தாவாக நவநீதம்பிள்ளையைக் காண்பிப்பது அவர்களுக்கு வசதியானது.

இலங்கை மீதான மேற்குலக நெருக்கு வாரங்கட்கான காரணம் இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான நெருக்கம் எனவும், இலங்கை சீனாவின் பொருளாதாரப் பிடிக்குட் சிக்கிக் கொண்டுள்ளது என்றும் எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய தேசப்பற்றை மெச்சுவதற்கு எனக்குத் தடையாக இருப்பது, மேற்குலகப் பொருளாதார ஆதிக்கம் பற்றிய அவர்களது மௌனம் தான். நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் பொருளாதாரக் கொள்கை மீதும் கல்வி, மருத்துவம், சமூக சேவைகள் பற்றிய அரசாங்க முடிவுகள் மீதும் ஆதிக்கமும் அழுத்தமும் செலுத்துவது யார் என்பதை அவர்கள் அறியாதவர்களல்ல.

பெரும்பாலான ஊடகவியலாளர்கள், முக்கியமாக உயர் பொறுப்புகளில் உள்ளோர், இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்கள் பற்றிய சனல்4 சான்றாதாரங்கள் சோடிப்புக்களல்ல என அறிவார்கள். அவை ஏன் முன்வைக்கப்படுகின்றன எனவும் அவர்கள் அறிவார்கள். ஆனால், அவர்களால் அந்த உண்மைகளை மக்களின் முன்னால் வைக்க இயலாது. அவை சிங்கள மக்கள் நடுவே கேள்விகளை எழுப்பத் தொடங்கினால், இந்த நாட்டில் நடந்து முடிந்த பேரழிவில் தென்னிலங்கை ஊடகங்களின் பங்கும் கேள்விக்குள்ளாகும். பச்சையாகவும் மறைமுகமாகவும் அவர்கள் ஊட்டி வந்த பேரினவாதப் பொய்களின் கைதிகளாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் சிந்தனைப் பிறழ்வு அவர்களுடைய பிறழ்வான நடத்தையிலும் பிரதிபலிக்கிறது.

நவநீதம்பிள்ளை இங்கு வருவதன் பயனாக அவர் ஏலவே கொண்டிருந்த கருத்துகள் வலுப்பெறும் என்பது எவரும் நியாயமாக எதிர்பார்த்திருக்கக் கூடியது. அவரது கருத்தை மாற்றுகிற விதமாக இலங்கை அரசாங்கம் குறிப்பிடும் படியாக எதையுமே செய்யவில்லை. கண் துடைப்பாகச் செய்தவற்றை அவர் அங்கீகரித்துள்ள போதும், பயனுற எதுவும் நிகழவில்லை என்பதே அவருடைய முடிவாகத் தெரிகிறது. அதேவேளை, அண்மைய முஸ்லிம் விரோத நிகழ்வுகளையும் சிங்கள மக்களுக்கெதிரான அரச வன்முறையையும் அவர் கவனியாமல் இருந்திருக்க முடியாது. அவர் சொல்லுவதற்கு முன்னரே, எதிர்க்கட்சியினருட்படப் பலரும், இந்த நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகருகிறது என்று எச்சரித்து வந்துள்ளனர். ஒரு சிலர் மட்டுமே, நாடு ஃபாசிச சர்வாதிகாரத்தை நோக்கி விரைகிறது என்று சொல்லியிருக்கின்றனர்.

தமிழ் அரசியல் தலைமைகளதும் ஊடகங்களதும் சொற்கள் மெச்சத்தக்க நிதானத்துடன் இருக்கவில்லை. நவநீதம்பிள்ளையின் வருகையை அவர்கள் தமிழ் மக்களின் விமோசனத்துடன் சமன்படுத்துமளவுக்குச், செய்திகளும் பிரகடனங்களும் அமர்க்களப்படுத்தியுள்ளன. எவ்வாறாயினும், நவநீதம்பிள்ளை மிக நிதானமாகவும் எவ்வித நெருக்குவாரங்கட்கும் மசியாதும் நடந்துகொண்டார். அவரிடமிருந்து நமது நாட்டின் தலைவர்கள் கற்க நிறைய உண்டு. ஆனால், இலங்கை விடயத்தில் பயனுள்ள ஒரு அறிக்கையை அளிப்பதற்கும் அதை ஐ.நா. மனிதஉரிமைக் கழகத்தின் முன் வைப்பதற்கும் அப்பால் அவருடைய கையில் எதுவும் இல்லை.

இலங்கை அரசாங்கத்தின் மனிதஉரிமை, அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான சில விடயங்கள் முன்னரும் கேள்விக்குட்பட்டுள்ளன. அவை பற்றிய விசாரணைகளை மேற்கொண்ட அயலவர் எவரும் நவநீதம் பிள்ளையின் இடத்தில் இருந்திருந்தால் வேறு விதமான ஒரு அறிக்கை வந்திருக்கும் என நம்ப இடமில்லை. ஏனெனில், இலங்கை அரசு தனது நம்பகத்தன்மையைப் போருக்கு முன்பிருந்தே இழக்கத் தொடங்கிவிட்டது. அப்போது மேற்குலகிற்கு இருந்த எதிர்பார்ப்புகள் தேசிய இனப்பிரச்சினை பற்றியன அல்ல. இப்போதும் அதன் அக்கறை தேசிய இனப்பிரச்சினை யல்ல. எனினும், நவநீதம் பிள்ளையின் அறிக்கை மேற்குலகிற்கு ஒரு வலிய துருப்புச்சீட்டாகும் என்பது உறுதி. அவர்கள் ஆடப்போகிற சீட்டாட்டம் என்னவென்று தெரியாமல் நாம் நம்பாட்டில் கனவுக் கோபுரங்களை எழுப்பாதிருத்தல் புத்தியானது.

இப்போது பெரும்பாலும், சிரிய அரசாங்க எதிர்ப்பாளர்களே பிரயோகித்த நச்சுப் பொருட்களின் விளைவான உயிரிழப்புகளைக் காரணங்காட்டி, சிரியா மீது குண்டுவீச ஒபாமா ஆட்சி துடிக்கிறது. உண்மையிலேயே சிரிய அரசின் நச்சு வாயுப் பிரயோகம் நடந்ததா என்று ஐ.நா. நிபுணர்கள் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க முன்னரே, சிரிய அரசைத் தண்டிக்க ஏன் அமெரிக்க அரசாங்கம் அவசரப்படுகிறது என்று யோசிப்போமா?

அமெரிக்கா எவரையும் தண்டிப்பது அவர் மனிதஉரிமைகளை மீறியதற்காகவோ போர்க் குற்றங்களைச் செய்ததற்காகவோ மக்களின் சனநாயக உரிமைகளை மறுத்தற்காகவோ அல்ல. உலகின் மிகக்கொடிய சர்வாதிகாரிகளை எல்லாம் அமெரிக்கா அனுசரித்து நடந்து வந்துள்ளது. இன்றும் அதையே செய்து வருகிறது.

ராஜபக்ஷவைத் தண்டிக்க அமெரிக்கா இன்னமும் முடிவெடுத்துள்ளதாகத் தெரியவில்லை. ஏனெனில், அவரை மிரட்டிப் பணிய வைக்க அதற்கு இன்னமும் இயலும். நூற்றுக்கு நூறு வீதம் பணியவைக்க இயலாவிடினும், அமெரிக்க நலன்கட்கு மாறாக ராஜபக்ஷ அரசாங்கம் எதையுமே செய்யாமற் கவனித்துக் கொள்ள அமெரிக்க அரசுக்கு இயலும். தன் ஏகாதிபத்திய விரோதம் காட்போட் கத்தியைச் சுழற்றி மக்களுக்கு முன்னால் மேடையேறிக் கூத்துக் காட்டவும் திரைக்குப் பின்னால் மேற்குலகின் எசமானர்களிடம் கூழைக் கும்பிடு போடவும் தப்பாமல் கப்பம் செலுத்தவும் ஆயத்தமான ஒருவரை அமெரிக்கா ஏன் ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்?

அமெரிக்காவின் பிராந்திய மேலாதிக்கத்திற்கு ஆபிரிக்காவில் ஆப்பு வைக்கிற சிம்பாப்பேயின் முகாபே ஆட்சி மத்திய கிழக்கில் சவால்விடுகிற ஈரானிய அரசு, லெபனானின் ஹிஸ்புல்லா போன்றன ஏன் தண்டிக்கப்படுகின்றன என்று விளங்குமானால், ராஜபக்ஷ எப்படித் தண்டனையிலிருந்து தவற இயலும் என்பதும் விளங்கும்.

பொதுநலவாய நாடுகளின் ஆட்சித் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடப்பதைத் தடுக்க இயலாத நமது புலம்பெயர்ந்த தமிழ்ப் பிரமுகர்களுக்குத் தமது ஆற்றலின் வரையறைகள் விளங்க வேண்டும். மேற்கு நாடுகளின் துணையுடன் தமிழ் மக்கள் தமது உரிமைகளை வெல்லலாம் என்று போதிக்கிற உள்ளூர்ப் பிரமுகர்கட்குத் தமது உலக அறிவின் வரையறைகள் விளங்க வேண்டும்.

கோகர்ணன்- தினக்குரல்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக