அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 24 அக்டோபர், 2013

ரகசிய ஆபரேஷனுக்கு வேஷமிட்டு போன அமெரிக்க அதிரடி படை திரும்பி வந்த கதை!

அமெரிக்கா, ‘வெளியே சொல்லப்படாத’ ரகசிய ஆபரேஷன்களை வெளிநாடுகளில் செய்வது, வழமையாக நடப்பதுதான். ரகசிய ஆபரேஷன் சக்ஸஸ் என்றால், அது ரகசியமாகவே இருந்துவிடும். ஒருவேளை சொதப்பி விட்டால்தான், சில வேளைகளில் ரகசியம் அம்பலத்துக்கு வந்துவிடும்.

அப்படி சொதப்பலாகப் போன ஆபரேஷன் ஒன்று பற்றிய ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் மற்றுமொரு விசேஷமும் உண்டு. வழமையாக ரகசிய ஆபரேஷன் தோல்வியில் முடிந்தால்தான் ஓசைப்படாமல் ‘இடத்தைக் காலி செய்வார்கள்’. இதில் என்ன விசேஷம் தெரியுமா? ஆபரேஷன் தெடங்கும் முன்னரே கதை கந்தலாகி, இடத்தை காலி செய்ய வேண்டியதாகி விட்டது!

அப்படி என்னதான் நடந்தது? ரகசிய ஆபரேஷனுக்காக அமெரிக்காவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நவீன ஆயுதங்களும் சென்சிட்டிவ் உபகரணங்களும் திருட்டுப் போய்விட்டன! ஆயுதங்களை தொலைத்துவிட்டு ‘அம்போ’ என்று நின்ற அதிரடிப் படையினர் திருப்பி அழைக்கப்பட்டனர்!

அமெரிக்க மீடியாவில் லீக் செய்யப்பட்ட இந்த விவகாரம் நடந்தது, லிபியாவில்.

லிபியாவில் ரகசியமாக நடத்த திட்டமிடப்பட்ட ஆபரேஷன் ஒன்றுக்காக அதிரடிப் படையினர் வெவ்வேறு வேஷங்களில் போய் இறங்கியிருக்கின்றனர் (பொதுவாக தூதரக அதிகாரிகள் போலவும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் போலவும் போவது வழக்கம்) இவர்கள், த்ரிபோலி நகரின் புறநகரப் பகுதியில் இருந்த பாதுகாப்பான வீடு (safe house) ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

அதிரடிப் படையினர் என வெளிப்படையாக இவர்கள் செல்லாத காரணத்தால், இவர்களது ஆயுதங்களை ‘வேறு ஒரு மார்க்கமாக’ அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அந்த ஆயுதங்கள் லிபியாவுக்குள் கடத்திச் செல்லப்பட்டன (உதவி, சி.ஐ.ஏ?).

இவர்கள் இருக்கும் வீட்டில் ஆயுதங்களையும் வைத்திருக்க முடியாது அல்லவா? அதனால், மற்றொரு பாதுகாப்பான வீட்டில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டன. ஆயுதங்கள் இருக்கும் இடம் இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அதிரடிப் படையைச் சேர்ந்த இருவர் அங்கு சென்று ஆயுதங்களுக்கு பாதுகாப்பாக இருப்பது என்பதுதான் திட்டம்.

ஆயுதங்களை பாதுகாக்க வேண்டிய இருவரும் அங்கு சென்று பார்த்தால், பாதுகாப்பான வீடு உடைக்கப்பட்டு இருந்தது! ஆயுதங்கள் மாயமாகி விட்டன!!

திருடப்பட்ட பொருட்களில், சில டஜன் M4 எந்திரத் துப்பாக்கிகள், மற்றும் அந்த துப்பாக்கிகளில் பொருத்தப்பட வேண்டிய, நைட்-விஷன் உபகரணங்கள், மற்றும் இரவில் குறிவைக்க உபயோகிக்கப்படும் லேசர் ஃபிட்டிங்குகள் ஆகியவை அடக்கம்!

அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினருக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இவை. அமெரிக்காவில் தயாராகும் இந்த உபகரணங்களை நேச நாட்டு ராணுவங்களுக்குகூட விற்பதில்லை அமெரிக்கா. அவ்வளவு துல்லியமான ஆயுதங்கள் இவை.

பெயர் தெரிவிக்க விரும்பாத ஸ்டேட் டிபார்ட்மென்ட் அதிகாரி ஒருவர், “ஒரு அதிரடிப்படை ஆபரேஷனில் நாங்கள் ஜெயிப்பது என்பது, யாரிடமும் இல்லாத இந்த நவீன உபகரணங்களை வைத்துதான்! எங்கள் எதிரிகளிடம் இதுவரை இல்லாத உபகரணங்கள் இவை. இப்போது, எந்த எதிரியிடம் இவை இருக்கின்றன என்றே எமக்கு தெரியவில்லை” என்று கூறியதாக, ஏ.பி.சி. நியூஸ் தெரிவித்தது.

அதை ஸ்டேட் டிபார்ட்மென்ட் இதுவரை மறுக்கவில்லை.

இந்த ரகசிய ஆபரேஷனுக்கான நிதி, அமெரிக்க பாதுகாப்பு சட்டப்பிரிவு 1208 என்ற பட்ஜெட்டில் இருந்து செலவு செய்யப்பட்டிருக்கிறது. சற்றே வில்லங்கமான இந்த அமெரிக்க பாதுகாப்பு சட்டப்பிரிவு 1208 என்பது என்ன தெரியுமா?

அமெரிக்க பாதுகாப்பு பிரிவு 1208 என்பது, வெளிநாடுகளில் அமெரிக்க பாதுகாப்பு படைகள் நடத்தும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கானது. இதில் செலவிடப்படும் தொகை, பொதுத் தணிக்கைக்கு வருவதில்லை. தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ், இந்தப் பிரிவு செலவு செய்யும் பணம் எதற்காக செலவிடப்படுகிறது என்ற விபரங்களை வெளியிடத் தேவையில்லை.

உளவு வட்டாரங்களில் கூறப்படும் தகவல்களின்படி, த்ரிபோலி புறநகரப் பகுதியில் இருந்த வீட்டை உடைத்து, ஆயுதங்களை அடித்துக் கொண்டு போனவர்களுக்கு, அந்த வீட்டுக்குள் என்ன இருக்கிறது என்பது தெரிந்திருக்கிறது.

அது எப்படி ஊகிக்கப்பட்டது?

குறிப்பிட்ட வீடு உடைக்கப்பட்டு திருட்டு நடைபெறுவதற்கு முன்பு, அந்த வீட்டுக்கு முன்னால் ஆயுதம் ஏந்திய ஒரு தீவிரவாத அமைப்பினர் சிலர் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் அங்கு வந்து நின்றதால், அந்த வீட்டில் தீவிரவாத இயக்கத்தின் பெரிய புள்ளி யாரோ இருக்கிறார் என அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் கருதியிருக்கிறார்கள்.

இது லிபியாவில் வழமையாக நடைபெறும் நடைமுறைதான்.

லிபியா அரசுடன் சேர்ந்து இயங்கும் சில தீவிரவாத இயக்கங்கள் உள்ளன. அந்த இயக்கத்தினர், வெளிப்படையாக ஆயுதங்களுடன் நடமாடுவது அங்கு சகஜம். அந்த இயக்கங்களின் தலைவர்கள் தங்கும் வீடுகளுக்கு வெளியே ஆயுதங்களுடன் ஆட்கள் நிற்பது ஒன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயமல்ல.

அப்படியான ஒரு தீவிரவாத இயக்கத்தின் ஆட்கள்தான் அந்த வீட்டுக்கு வெளியே நிற்பதாக அருகில் வசிப்பவர்கள் நினைத்திருக்கிறார்கள்.

வெளியே காவலுக்கு நின்றவர்கள் சிறிது நேரத்தில் இரவு வந்துவிடவே, திரும்பிச் சென்றுவிட்டனர். அதன்பின் அந்த வீட்டில் இரவில் என்ன நடந்தது என்பதைக் கவனிக்கவில்லை என்கிறார்கள், அருகில் வசிப்பவர்கள். மறுநாள் அதிகாலையில் அமெரிக்கர்கள் அங்கு சென்றபோது, வீடு உடைக்கப்பட்டு, ஆயுதங்கள் மாயமாகி விட்டன.

இதை வைத்துதான், ஆயுதங்களை அடித்துச் சென்றிருப்பது ஒரு தீவிரவாத அமைப்பு என்ற ஊகம் எழுந்துள்ளது.

கொள்ளை நடப்பதற்குமுன் வீட்டுக்கு வெளியே நடமாடியவர்கள், எந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிப்பதற்கு தடயங்கள் ஏதுமில்லை. அவர்களில் யாரும் அடையாளம் காணப்படவில்லை. அவர்கள், நகருக்கு புதிய ஆட்களாக இருக்கலாம் என்கிறார்கள்.

அமெரிக்கர்கள் ‘பாதுகாப்பான வீடு’ என வைத்திருந்த இடம், தீவிரவாத இயக்கத்தினருக்கு எப்படி தெரிந்தது? அந்த வீட்டுக்குள் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பது எப்படி தெரிந்தது? அதுவும், குறிப்பிட்ட தேதியில் அந்த ஆயுதங்கள் கொண்டுவந்து வைக்கப்படும் என்பதை எப்படி தெரிந்து கொண்டார்கள்? இந்த வீட்டில் ஆயுதங்கள் உள்ள விஷயத்தை தெரிந்து கொண்டவர்களுக்கு, இதே ஆயுதங்களை உபயோகிக்க வந்துள்ள அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினர் எந்த வீட்டில் ரகசியமாக தங்கியுள்ளனர் என்பதுகூட தெரிந்திருக்குமா?

மேலேயுள்ள நான்கு கேள்விகளில் முதல் மூன்று கேள்விகளுக்கு இன்னமும் பதிலை தேடிக்கொண்டு இருக்கிறார்கள், அமெரிக்கர்கள்.

4-வது கேள்விக்கான பதிலை ஊகித்து விட்டார்கள். ‘ஆம்’ என்பதே அந்தப் பதில்!

ஆயுதங்கள் இருந்த வீட்டை தெரிந்துள்ளவர்களுக்கு, அதிரடிப் படையினர் தங்கியுள்ள ‘பாதுகாப்பான வீடும்’ தெரிந்திருக்கும் என்ற ஊகத்தில், அங்கிருந்த அதிரடிப் படையினரை உடனடியாக திருப்பி அழைத்துக் கொண்டது வாஷிங்டன். ஆபரேஷன் அபார்ட்டட்!

சரி. அடித்துச் செல்லப்பட்ட அந்த ஆயுதங்கள் இப்போது யாரிடம், எங்கே இருக்கும்?

லிபியாவில் ஒரு இரவு நேர அதிரடித் தாக்குதல் நடக்கும் நாள் வரை காத்திருந்தால், தெரிந்துவிடும் பதில்!

விறுவிறுப்பு.காம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக