அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 16 டிசம்பர், 2013

இணையத்தில் காமாந்தகர்களின் வக்கிரம் கசக்கி எறியப்படும் இளம் மலர்கள்

தமது பிள்ளைகளை கணினியின் முன்னால் அமரச் செய்யும் ஒவ்வொரு பெற்றோரும் படிக்க -வேண்டிய கட்டுரை

அந்த சிறுமியின் பெயர் ஸ்வீட்டி. பெயருக்கு ஏற்ற விதமாக சுட்டித்தனமானவள். தன்னை பிலிப்பைன்ஸ் தேசத்தைச் சேர்ந்தவளாக அடையாளப்படுத்திக் கொள்பவள். சர்வதேச வலைப்பின்னலில் அவளைக் காணலாம். பேஸ்புக் முதலான சமூக வலைப்பின்னல்களில் சம்பாஷணைக்கு இடமளிக்கும் பகுதிகளில் (Chat Rooms)

அவளது பெயர் மிளிரும். எவரேனும் தொடர்பு கொள்ள முனைந்தால் அவள் பதில் அளிப்பாள். சம்பாஷிப்பவர் சற்று முன்னேறினால், ஸ்வீட்டியின் முகம் தெரியும்.

ஸ்வீட்டி ஒரு புறமிருக்க, சர்வதேச தகவல் வலைப்பின்னலில் மற்றொரு இணையத்தளம். அதனை நாடினால், சிறுவர்களின் புகைப்படங்களும் வீடியோ காட்சித் துணுக்குகளும் இருக்கும். பச்சிளம் பாலகர்கள் முதல் வளரிளம் பருவத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு விதமான சிறுவர்கள். அந்தச் சிறுவர்களின் உடலில் ஆடைகள் இருக்க மாட்டாது. ஆனால், ஆபாசம் என்ற சொல்லை உச்சரிக்க முடியாத அளவிற்கு புகைப்படங்கள் கலைநயம் மிக்கவை. இந்த இணையத்தளத்தின் பக்கங்களை சொடுக்கிக் கொண்டே போகலாம். இது போல இன்னமும் பல படங்கள் வேண்டுமா, 4PSP Inc.. நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் என்ற வாசகங்கள் வரும்.

இந்தக் கட்டுரையை வாசிப்பவர்களில் எத்தனை பேர் ஸ்வீட்டியை அறிந்து வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. எத்தனை பேர் 4PSP Inc.. நிறுவனத்தைப் பற்றி அறிவார்கள் என்பதும் தெரியாத விடயம். எனினும், எத்தனை பேர் ஸ்வீட்டியுடன் சம்பாஷிக்க முயற்சி செய்திருக்கிறார்கள், எத்தனை பேர் இணையத்தள கம்பனியைத் தொடர்பு கொள்ள முனைந்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியமான விடயம்.

ஸ்வீட்டியுடனான சம்பாஷணையில் சற்று முன்னேறியவர்களின் பட்டியல் இன்று இன்டர்போல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இணையத்தள கம்பனியுடனான பேரத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தவர்களின் பெயர்ப் பட்டியலை பல நாடுகளைச் சேர்ந்த பொலிஸார் வைத்திருக்கிறார்கள். இந்த இருசாராரையும் தேடி வலைவிரித்து, கம்பிகளுக்குப் பின்னால் போடுவதற்காக முஸ்தீபுகள் தீவிரம் பெற்றுள்ளன.

அப்படியென்றால், ஸ்வீட்டி யார்? 4PSP Inc.. நிறுவனத்தின் வேலை என்ன?

ஸ்வீட்டி இணையத்தளத்தின் சம்பாஷணை அறைகளுக்குப் பிரவேசித்தால் போதும். அவளைப் பலர் தொடர்பு கொள்வார்கள். என்னம்மா என்ற தொனியில் சம்பாஷணை தொடங்கும். பின்னர், சாப்பிட்டாயா, குளித்தாயா, உனக்கு என்ன விளையாட்டுப் பொம்மை பிடிக்கும், நான் வாங்கித்தரட்டுமா என்ற ரீதியில் கேள்விக் கணைகள் தொடரும். ஸ்வீட்டியின் விரல்கள் விசைப்பலகையில் அசையும். மறுபுறத்தில் உள்ள நபர் விருப்பப்பட்டால் அவளின் முகம் திரையில் தோன்றும். அந்த நபர், உனக்கு பிடித்த பொருளை வாங்கிக் கொள், காசு தருகிறேன் என்பார். அவள் சம்மதித்தால் போதும், நபர் எல்லை மீறிச் செல்வார். தமது வக்கிரபுத்தியைக் காட்டத் தொடங்குவார். அடுத்த கணங்களில் மனிதத் தோல் போர்த்திய மிருகத்தின் சுயரூபம் வெளிப்படும். தமது கணினியில் தெரிவது பால்மணம் மாறாத சிறுபிள்ளை என்பதை மறந்து, உனது கால்கள் அழகாக இருக்கின்றன என்பார். அந்த சிறுமியை ஆடை களையச் செய்யும் இலக்கு நோக்கி சம்பாஷணைகள் தொடரும். அத்துடன் நில்லாமல், அந்த நபர் ஸ்வீட்டியைச் செய்யச் சொல்லும் காரியங்களும், கணினித் தரையின் முன்னால் தாம் செய்யும் காரியங்களும் வக்கிரத்தின் உச்சம்.

அடுத்ததாக, 4PSP Inc. நிறுவனத்தின் இணையத்தளம். நிர்வாணச் சிறுவர்களின் புகைப்படங்களால் ஆசைப்பட்டு, இந்த இணையத்தளத்தைத் தொடர்பு கொள்பவர்களுக்கு இந்தப் படம் போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்ற தொனியில் அடுத்த செய்தி வரும். இது தான் வேண்டும் என்று கூறுபவர்கள் தமது விருப்பங்களை விபரிப்பார்கள். தமக்கு விருப்பமான வயதெல்லை, புகைப்படக் கோணங்கள் பற்றி கூறுவார்கள்.இதற்கு இவ்வளவு கட்டணம் என்ற விபரத்தை இணையத்தளம் தரும். கிரெடிட் கார்ட் முதலான வழிமுறைகள் ஊடாக, அவர் கேட்ட காட்சிகள், புகைப்படங்கள் அடங்கிய டிவிடி முகவரி தேடி வரும். அல்லது, அவருக்குரிய பயனர் பெயரும், கடவுச் சொல்லும் அனுப்பப்படும். தமக்கு கூறப்படும் இணையத்தளங்களை நாடி, அவற்றை உள்ளீடு செய்தால் படங்களும் வீடியோ காட்சிகளும் திரையில் ஒளிரும். அதனூடாக, அவர்கள் தமது வக்கிரங்களுக்கு வடிகால் தேடிக் கொள்ள முடியும்.

மீண்டும் ஸ்வீட்டிக்கு வருவோம். தமது கணினித் திரையில் தோன்றும் சிறுமியிடம் காட்சி வழியாக தமது காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள முனைந்த நபர்களின் எண்ணிக்கை ஒன்றல்ல, இரண்டல்ல. ஆயிரத்தைத் தாண்டுகிறது. அந்த நபர்களில் 70 நாடுகளுக்கு மேற்பட்டவர்கள் அடங்குகிறார்கள்.

ஆனால், ஸ்வீட்டி உயிருள்ள சிறுமியல்ல என்பது அவர்களுக்குத் தெரியாது. இணையத்தின் ஊடாக தமது காமப் பசிக்கு சிறுவர்களை இரையாக்கிக் கொள்ளும் காமாந்தகர்களை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக, நெதர்லாந்து நிபுணர்கள் குழுவொன்று உருவாக்கிய திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரம் தான் ஸ்வீட்டி என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை.

டேரெ டெஸ் ஹொம்ஸ் ((Terre des Hommes)) என்ற அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் கணினி வரைகலையின் ஊடாக அச்சு அசலாக பிலிப்பைன்ஸ் சிறுமியின் தோற்றத்தைக் கொண்ட காட்சிப்புல பொம்மையை உருவாக்கினார்கள். அந்த பொம்மையின் வடிவில், சர்வதேச தகவல் வலைப்பின்னலில் உலாவரும் காமாந்தகர்களுக்கு வலை விரித்தார்கள். அந்த நபர்கள் ஸ்வீட்டி என்ற கணினி வரைகலை பொம்மையை உண்மையாக சிறுமியாக நம்பி, அவளுடன் மேற்கொண்ட ஒவ்வொரு தொடர்புகளையும் பதிவு செய்தார்கள். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட சம்பாஷணை வாசகங்களிலும், வீடியோ காட்சிகளும் சர்வதேச தகவல் வலைப்பின்னலில் கொட்டிக் கிடக்கும் வக்கிரங்களை எடுத்துக் காட்டியிருக்கின்றன.

4PSP Inc. . நிறுவனத்தின் கதை வேறு. இந்த நிறுவனத்தின் பெயரால் நடத்தப்படும் இணையத்தளத்தின் பின்னணியில் இருப்பவர், 42 வயதான பிரையன் வே என்பவர். கனடாவின் டொரன்டோ நகர மேற்கு மூலையில் அமைந்துள்ள சிறியதொரு களஞ்சியசாலை தான் இவரது அலுவலகம். அங்கிருந்து கொண்டு, சிறுவர் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களை தொகுப்பதும், பொதி செய்வதும் இவரது வேலை. பின்னர், இணையத்தளத்தின் ஊடாக தமது வாடிக்கையாளர்கள் கேட்கும் ஆபாசப் படங்களை விநியோகிப்பார்.

பிரையனின் வலைப்பின்னல் கனடாவிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. உலகம் முழுவதிலும் பரந்திருந்தது. ஜேர்மனி, ஸ்பெயின், மெக்ஸிக்கோ, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் அவருக்கு வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். அவர்களில் ஆசிரியர்கள், மருத்துவர்கள், பாதிரியார்கள், சிறுவர் நற்பணியாளர்கள் என்ற ரீதியில் பல தரப்பினரும் காணப்பட்டார்கள்.

கனேடிய பொலிஸார் பல நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு அமைப்புக்களின் துணையுடன் கடந்த மூன்றாண்டுகளாக நடத்திய விசேட சோதனையின் ஊடாக ((Project Spade) மிகப் பெரியதொரு வணிக நோக்கிலான சிறுவர் ஆபாச வலைப்பின்னல் முறியடிக்கப்பட்டது. அத்துடன், வலைப்பின்னலுடன் தொடர்புடைய நபர்கள் சிக்கினார்கள். இவர்களில் சிறுவர்களின் ஆபாசப் புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் போன்றவற்றை விலை கொடுத்து வாங்கியவர்களுக்கு அப்பால், குறித்த சிறுவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களை கைகளால் தொட்டு துஷ்பிரயோகம் செய்த நபர்களும் உள்ளதாக தெரியவந்திருக்கிறது.

அதிர்ஷ்டவசமாக, பல வருடங்களுக்கு முன்னர் பிரையனின் இணையத்தளம் பற்றி கனேடிய பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாடுகள் காரணமாக, இந்த மோசச் செயலை முறியடித்து 350 இற்கு மேற்பட்ட சிறுவர்களைக் காப்பாற்ற முடிந்திருக்கிறது.

தகவல் தொலைத்தொடர்பாடல் துறை சார்ந்த வளர்ச்சியின் மகுடமாக இணையத்தை அடையாளப்படுத்துகிறோம். இந்த இணையத்தின் மறுபக்கம் எத்தனை இருண்டதாக இருக்கிறது என்பது ஸ்வீட்டி மூலமாக முழு உலகத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய உலகம் எந்தத் திசையில் செல்கிறது என்பதை 4PSP Inc.. நிறுவனத்தின் ஆபாச வலைப்பின்னல் அம்பலப்படுத்தியிருக்கிறது.

சர்வதேச தகவல் வலைப்பின்னலைப் பயன்படுத்தி தமது வக்கிர உணர்வுகளுக்கு வடிகால் தேடிக் கொள்ளும் காமாந்தகர்களிடம் இருந்து இளந்தளிர்களைப் பாதுகாப்பதில் பல சவால்கள் இருக்கின்றன. ஸ்வீட்டி என்ற நவீன புலனாய்வு முயற்சியின் ஊடாக சிக்கிய நபர்களையும், சிறுவர் ஆபாசப் பட வலைப்பின்னலில் சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்வதில் உள்ள சட்ட சிக்கல்களை உதாரணமாகக் கூற முடியும்.

சட்ட சிக்கல்களைத் தீர்த்து குற்றவாளிகளைக் கைது செய்வது சட்டத்தை நிலைநாட்டும் அமைப்புக்களின் பிரச்சினை. அந்த சவாலில் அவை வெற்றி பெறுவார்களா என்பது விவாதத்திற்குரிய விட யம். இன்று வே பிரையன் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டாலும், இணையம் என்ற மாபெரும் சமுத்திரத்தில் எத்தனையோ திமிலங்கள் வாயைப் பிளந்து கொண்டு ஏதுமறியா ‘தங்கமீன்களை’ விழுங்கி விடுவதற்காக பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இந்தத் திமிலங்கள் பற்றி அறிந்து வைத்திருப்பது ஒவ்வொரு பெற்றோரினதும் கடமை. இதனை வலியுறுத்தும் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரையில், சில விடயங்களை அப்பட்டமாக தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தவிர்க்க முடியாமல் போகிறது. இதனை போலி கலாசாரக் கட்டுக்கோப்புக்கள் என்ற கண்ணாடி அணிந்து கொண்டு விமர்சிக்காமல், சமூக நலன் கருதிய அத்தியாவசிய வரம்பு மீறல்களாக பார்ப்பது அவசியமானதாகிறது.

இன்று இணையம் என்பது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விடயம். அதனை முற்று முழுதாக புறக்கணித்து வாழ்தல் என்பது சாத்தியமற்றதாகவும் மாறியிருக்கிறது. இந்த நிலையில், இணைய வசதிகள் உள்ள கணினிகளுக்கு முன்னால் தமது பிள்ளையை அமர விடும் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைக்கு காத்திருக்கும் ஆபத்தை அறிந்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இதனையும் தாண்டி, இன்று சிறுவர் ஆபாசத்தை நாடும் காமாந்தகர்களால் இலக்கு வைக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது என்பதை அறிந்து கொண்டு, சிறுவர் நலன்களுக்காக பாடுபடும் அரச நிறுவனங்களோ, அரச சார்பற்ற அமைப்புக்களோ, நற்பணி அமைப்புக்களோ ஏதேனும் பொருத்தமான நடவடிக்கை எடுத்தால் அதை விட சந்தோஷம் வேறேதும் கிடையாது.

ஆக்கம்: ஜராதுஷ்ரன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக