அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 6 டிசம்பர், 2013

நெல்சன் மண்டேலா - ஒரு வீரனின் சகாப்தம்

தென்னாப்ரிக்காவில் மட்டும் அல்லாமல் உலக அளவில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு நபராக விளங்கியவர் நெல்சன் மண்டேலா. அவர் இன்று காலை உடல் நலக் குறைவு காரணமாக ஜோகன்னஸ்பர்க்கில் தமது இல்லத்தில் காலமானார்.

நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா என்பது. 1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி பழங்குடி இனத் தலைவருக்கு மகனாகப் பிறந்த நெல்சன் மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக் கிடந்த தென்னாப்ரிக்காவை மக்களாட்சியின் ஒளிமயமான பாதைக்குக் கொண்டு சென்ற மகத்தான தலைவர்.

குத்துச் சண்டையிலும், போர்க் கலையிலும் வல்லவராகத் திகழ்ந்த மண்டேலாவுக்கு அவரது ஆசிரியர் சூட்டிய பெயரே நெல்சன் என்பது. பழங்குடியினத்தில் பிறந்திருந்தாலும், படிப்பறிவைப் பெறுவதில் பெரும் நாட்டம் கொண்டிருந்தார் மண்டேலா. லண்டன், தென்னாப்ரிக்க பல்கலை.களில் பட்டப் படிப்பை முடித்து தென்னாப்ரிக்காவில் சட்டக் கல்வியையும் பெற்றார் மண்டேலா.

தென்னாப்ரிக்காவில் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையர்களிடமே ஆட்சி அதிகாரம் இருந்தது. அவர்களது அடக்குமுறை கருப்பின மக்கள் மீது திணிக்கப்பட்டது.

இதனால் வெகுண்டு எழுந்து, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய தலைவர்களில் முக்கியமானவராக விளங்கினார் மண்டேலா. அவர் முதலில் காந்திய முறையில் அகிம்சை வழியில்தான் தனது போராட்டத்தைத் துவக்கினார். ஆனால், பிறகு அவரே ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் ராணுவப் பிரிவுக்கும் தலைமை தாங்கி போராட்டத்தை வழி நடத்தினார். இதன் மூலம், நிறவெறி அரசுக்கு எதிராக மிகக் கடுமையான கெரில்லாப் போர் முறைத் தாக்குதலையும் நடத்தினார்.

இதனால், 1962ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நிறவெறி அரசு, 27 ஆண்டு காலம் மிகச் சிறிய அறையில் அவரை சிறை வைத்து தனது நிறவெறியை வெளிக்காட்டியது. ராபன் தீவுப் பகுதியில் அமைந்த திறந்த வெளி சிறிய சிறை அறையில் தனது பெரும்பாலான வாழ்நாளைக் கழித்த மண்டேலா, சிறைக் காலத்தில் அனுபவித்த கொடுமைகள் சொல்லில் அடங்காதவை. எனினும், அவரது போராட்ட உணர்வு மட்டும் சோர்ந்து போகவில்லை.

உலக வரலாற்றிலேயே மண்டேலாவைப் போல இத்தனை காலம் சிறையில் கழித்த தலைவர் யாரும் இல்லை எனலாம்.

மண்டேலாவை விடுதலை செய்ய உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வலுத்தன. அவரது மனைவி சார்பில் தென்னாப்ரிக்காவில் போராட்டம் வலுத்தது. இதையடுத்து, 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 71.

1990ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா விடுதலையானதை உலகமே வரவேற்றது. தென்னாப்பிரிக்காவில் குடியரசு மலரவும் மண்டேலா காரணமானார். அதோடு, தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகவும் 1994ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார் நெல்சன் மண்டேலா. அவரது பதவிக் காலம் முடிந்ததும், 2வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார். 2008ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்தார் மண்டேலா.

அப்போதும் ஓயாமல், பல்வேறு நலப் பணிகளுக்காக மக்கள் சேவையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் மண்டேலா.

பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு குணமடைந்து, வீடு செல்வதும், சில நேரம் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்று வருவதுமாக இருந்த நெல்சன் மண்டேலா, கடந்த சில வாரங்களாக மரணப் படுக்கையில் வீழ்ந்தார். அவர் தனது பேசும் திறனை இழந்து, குடும்ப உறுப்பினர்களின் ஆறுதல் வார்த்தையாலும், உற்சாக மொழிகளாலும் உயிர் பிழைத்து வந்தார்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க நேரப்படி வியாழக்கிழமை (2013ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு 8.50க்கு )நெல்சன் மண்டேலா தனது 95வது வயதில் உலக மக்களை எல்லாம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு மரணம் அடைந்தார்.

Dinamani
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக