அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

ஒரு பாலினத் திருமணம்; நீதிமன்றங்களின் தீர்ப்புகள்

திறந்த பொருளாதாரத்தில் கறைபடி யாத விடயமென எதுவுமே இருக்க முடியாது என்றார், கார்ள் மாக்ஸ்.

இன்று திறந்த பொருளாதாரத்தில் ‘அரசியல்’ கறைபடியாத எதுவும் இருக்க முடியாது என்று சொல்லத் தோன்றுகிறது.



கடந்த வாரம் மூன்று நாடுகளில் மூவகை மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த மாற்றங்களை ஒப்பிட்டு ஆராய்ந்தால் உண்மை தெரியவரும்.

முதலில் பிரித்தானியா. அடுத்து இந்தியா. மூன்றாவதாக அவுஸ்திரேலியா. இந்த மூன்று நாடுகளிலும் நிகழ்ந்த மாற்றங்களுக்கும் ஆதாரமாக அமைந்த ஒரு விடயம் உள்ளது. அது பாலியல் என்பதாகும்.

2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் இங்கிலாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ஒருபாலினத் திருமணங்கள் இடம்பெற முடியுமென பிரிட்டனின் சமத்துவ அமைச்சர் மரியா மில்லர் அறிவித்தார்.

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரு பாலுறவு சட்டவிரோதமானது என தீர்ப்பளித்தது. அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றமும் ஒரு பாலினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களை அங்கீகரிக்க முடியாதென தீர்ப்பை வெளியிட்டது.

இந்திய குற்றவியல் சட்டத்தில் (இந்தியன் பீனல் கோட் IPC- ) ஒரு ஷரத்து இருக்கிறது. இந்த ஷரத்து ஓரினச் சேர்க்கை மற்றும் இயற்கைக்கு மாறான உறவுகளைத் தடை செய்கிறது. அத்தகைய உறவுகளில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும்.

இந்த ஷரத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றை விசாரித்த புதுடில்லி மேல் நீதிமன்றம், 2009ஆம் ஆண்டு தீர்ப்பை வெளியிட்டது. அந்தத் தீர்ப்பு ஓரினச் சேர்க்கையை குற்றமாகக் கருத முடியாது என்பதாகும்.

இந்திய அரசியல் யாப்பு, சட்டத்தின் முன் சமத்துவத்தை மதிக்கிறது என்பதாலும், அது இனம், மதம், சாதி, பால் என்ற அடிப்படையிலான பாரபட்சத்தைத் தடை செய்வதாலும் ஓரினச் சேர்க்கையைக் குற்றமாகக் கருதுவது அரசியல் யாப்பிற்கு ஏற்புடையது அல்ல என்பது தீர்ப்பின் சாராம்சமாகும்.

ஆனால், சில இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புக்களும், வலதுசாரி அரசியல்வாதி ஒருவரும், ஓய்வு பெற்ற அரசியல்வாதியொருவரும் டில்லி மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்கள். அந்த மேன்முறையீட்டு விசாரணையின் தீர்ப்பு புதன்கிழமை வெளியானது.

இயற்கையின் நியதிக்கு மாறான உடலுறவு மீதான தடையை நீக்கும் அதிகாரம் புதுடில்லி நீதிமன்றத்திற்குக் கிடையாதென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனுடன் தொடர்புடைய IPC இன் 377ஆவது பிரிவை நீக்க வேண்டுமானால், அதனை நாடாளுமன்றத்தின் ஊடாக மாத்திமே நீக்கலாம் என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு.

அடுத்து அவுஸ்திரேலியாவைப் பார்ப்போம். அவுஸ்திரேலியாவின் சமஷ்டிக் கட்டமைப்பில் மாநிலங்களும், ஆட்புலங்களும் உள்ளன. அவற்றில் சட்டசபைகள் இயங்குகின்றன. இந்த சட்டசபைகள் ஊடாக சட்டங்களை நிறைவேற்றலாம். அவற்றை அமுலாக்கும் அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு உண்டு.

அந்த அடிப்படையில் அவுஸ்திரேலிய தலைநகர ஆட்புல (ACT) பிராந்தியத்தின் சட்டசபையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரகாரம், கன்பராவில் ஒருபாலினத் திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும்.

இந்த சட்டத்திற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த மேல் நீதிமன்றம், மாநில சட்டம், மத்தியிலுள்ள திருமணச் சட்டத்துடன் ஏற்புடையது அல்ல என்று தீர்ப்பளித்தது. மத்தியிலுள்ள சட்டம் ஆணும் பெண்ணும் சேர்வதையே திருமணமாக அங்கீகரிக்கிறது என நீதிபதிகள் விளக்கம் அளித்தார்கள்.

இதில் இன்னொரு விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது. ACT யின் திருமணச் சட்டம் கடந்த ஏழாம் திகதி அமுலுக்கு வந்தது. அதற்கு எதிரான தீர்ப்பு கடந்த 12ஆம் திகதி வெளியானது. இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பலர் கன்பராவிற்கு சென்று திருமணம் முடித்தார்கள்.

இந்தியாவைப் போன்றே, அவுஸ்திரேலியாவின் மத்திய நாடாளுமன்றம் திருமணச் சட்டத்திற்கு திருத்தங்களை சேர்க்கலாம். திருமணம் என்ற பதத்திற்கான வரைவிலக்கணத்தை மாற்றும் பட்சத்தில், ஒருபாலினத் திருமணங்களை அங்கீகரிக்க முடியுமென்பது அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பாக அமைந்திருந்தது.

இந்தத் தீர்ப்புகள் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம். இரு நாடுகளையும் பொறுத்த வரையில் ஒருபாலினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போர் இவற்றைப் பின்னடைவாகக் கருதி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

‘இயற்கையின் நியதியில் அமைந்த சமூக கட்டுக்கோப்புக்கள்’ என்ற கருத்தியலை ஆதரிப்பவர்கள் இது தமக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதி ஆர்ப்பரித்தார்கள்.

எது எவ்வாறானபோதிலும், நீதிமன்றத் தீர்ப்புக்கள் பற்றி காரசாரமான விவாதங்களும், கருத்தாடல்களும் தீவிரம் பெற்றிருந்தன. சமூக நெறிமுறைகள் மாறும் சமகால உலகில் பால்நிலை சார்ந்த சிந்தனைகளின் அடிப்படையில் தம்மை மரபுசார்ந்த ஆண் அல்லது பெண் என்ற வகைப்படுத்தலுக்கு அப்பாற்பட்டு அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பும் நபர்களை புறக்கணிக்க முடியாதென்ற உண்மையும் புலப்பட்டது.

இன்று மேலைத்தேய சமூகங்களில் ஆழ வேரூன்றிய LGBT என்ற கருத்தியல் இந்திய சமூகத்திற்கு சற்று பழக்கப்படாத விடயமாக இருந்தபோதிலும், இதனை அவுஸ்திரேலியர்கள் பெரும்பாலும் அறிந்திருந்தார்கள். இதன் விரிவாக்கம் பெண் ஓரினச் சேர்க்கையாளர் (Lesbian), ஆண் ஓரினச் சேர்க்கையாளர் (Gay), இருபாலாரிலும் நாட்டம் கொண்டவர் (Bisexual), தமது பாலை மாற்றிக் கொண்டவர் (Transgender) என்பதாகும்.

இன்று இந்தியாவில் ஓரினச் சேர்க்கை தடை செய்யப்பட்டதாக இருந்தபோதிலும், பலர் தம்மை ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று பகிரங்கமாக கூறும் அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது. அவுஸ்திரேலியாவில் ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணுமாக சேர்ந்து வாழும் ‘தம்பதிகளின்’ எண்ணிக்கையும் அதிகமாகும். இவர்கள் மத்தியில் மாநில சட்டசபை அங்கத்தவர்களும் உள்ளனர்.

இத்தகையதொரு பின்புலத்தில், ஒருபாலினத் திருமணம் அல்லது ஓரினச் சேர்க்கை என்ற விடயத்தை எவ்வாறு கையாள்வது என்பதில் அரசுகள் சிக்கல்களை எதிர்கொள்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமது தேர்தல் பிரசார விஞ்ஞாபனங்களில் பால்நிலை உரிமைகள் என்ற விடயத்தைத் தவிர்த்து விட்டு மக்கள் முன்னால் போக முடியாத நிiலையில் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

இந்தியாவையும், அவுஸ்திரேலியா வையும் உதாரணமாகக் கொள்ளலாம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிருப்தி தருகிறதென சோனியா காந்தி கூறியதையும், ஓரினச் சேர்க்கை என்பது தனிநபர் சுதந்திரமென ராகுல் காந்தி தெரிவித்ததையும் குறிப்பிடலாம். இந்த விடயத்தை பாரதிய ஜனதா கட்சி எவ்வாறு கையாளும் என்பது தெரியவில்லை. அந்தக் கட்சி இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

இருதரப்பு அரசுகளிடமும் அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திற்கு வரும்போது அதனைப் பார்த்துக் கொள்ளலாம் என்றார், சட்டத்துறை அமைச்சர் கபில் சிபால். தமது நாடாளுமன்றம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களை சேர்த்துக் கொள்ளக்கூடும் என அந்நாட்டு தொடர்பாடல் துறை அமைச்சர் மெல்கொம் டேர்ன்புல் கூறினார்.

இந்தக் கருத்துக்களில் தவறில்லை என்றே கூறமுடியும். இன்று இந்தியாவில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய அரசியல் யாப்பு தான் அமுலில் இருக்கிறது. அவுஸ்திரேலியாவிலும் பிரித்தானியாவின் விக்டோரிய கலாசாரத்திற்கு மதிப்பளிக்கக்கூடிய பொதுநலவாய விழுமியங்களின் அடிப்படையிலான அரசியல் யாப்பு நடைமுறையில் உள்ளது.

தாம் காலம்காலமாக கட்டிக்காத்த மரபுகளைத் தகர்த்தெறிந்து ஒருபாலினத் திருமணங்களை அனுமதிக்க பிரிட்டனால் முடியும் என்றால், தமது சமூகங்களில் நிகழ்ந்து வரும் மாற்றங்களின் அடிப்படையில் ஓரினச் சேர்க்கையை அல்லது ஒருபாலினத் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டுமா அல்லது நிராகரிக்க வேண்டுமா என்பது இந்தியாவினதும், அவுஸ்திரேலியாவினதும் உரிமை.

தமது நாட்டுக்குப் பொருத்தமானது எதுவென்பதை அவுஸ்திரேலியாவும், இந்தியாவும் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதுடன், இது இந்நாடுகளின் இறையாண்மையுடன் தொடர்புபட்ட விடயமாகக் காணப்படுகின்றன. எனினும், இந்த விடயத்தில் இந்தியாவை ஒரு விதத்திலும் அவுஸ்திரேலியாவை வேறு விதத்திலும் கையாளக்கூடிய நிறுவனமயப்படுத்தப்பட்ட பிரசாரம் தான் சர்வதேச சமூகத்தின் கறைபடிந்த அரசியலை உலகிற்கு அம்பலப்படுத்தி நிற்கிறது எனலாம்.

இன்று ஓரினச் சேர்க்கை குற்றம் தானென்ற இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பை மிகவும் பிற்போக்கானதென விமர்சிக்கும் மேற்குலக ஊடகங்கள் அவுஸ்திரேலியாவின் விடயத்தில் சற்று அடக்கி வாசிக்கின்றன. ஒரு அரக்கனை எரிப்பதற்காக திருமால் எடுத்த பெண் அவதாரத்தையும், சக்தியின்றேல் சிவமில்லை என்ற தத்துவத்தைப் போதிப்பதற்காக சிவபெருமான் எடுத்த அர்த்த நாரீஸ்வரர் அவதாரத்தையும் Transgender ஆகக் காட்டி இந்தியாவில் இதெல்லாம் சகஜமப்பா என்று விமர்சிப்பதையும் சுட்டிக்காட்ட முடியும்.

சதீஷ் கிருஷ்ணபிள்ளை
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக