அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

இலங்கை தமிழர் தலைவரை ‘எட்டி தட்டிய’ சிங்கள ஏகாதிபத்திய, பாசிச, பெண் அரசியல்வாதி!

“இலங்கை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத் தரப்போகும் தலைவர் என கூறப்படுபவருமான இரா.சம்பந்தனை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பினார் என வெளியாகிய செய்தியும் போட்டோவும், விஷமத்தனமானது” என்று கூறியுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.



கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில், “அந்த போட்டோ உண்மையானதுதான். ஆனால், எம் தலைவர் பொது இடத்தில் தூங்குவதில்லை. தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுத் தரவேண்டும் என்ற வேட்கையில், அவர் தூக்கத்தை தொலைத்து நீண்ட காலமாகிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

இவர்கள் குறிப்பிடும் போட்டோ (மேலே பார்க்கவும்), இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற ‘மதங்களுக்கு இடையே நல்லுறவை வளர்க்கும் அமைப்பின்’ கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஏற்பாட்டில் அந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், உட்கார்ந்த இடத்திலேயே தூக்கத்தில் ஆழ்ந்திருந்த போது அவரை தட்டி எழுப்பினார், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க.

சந்திரிக்காவும் சம்பந்தனும் முன்பிலிருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பதால், சம்பந்தன் இதற்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.

இலங்கை ஜனாதிபதியாக சந்திரிக்கா ஆட்சி புரிந்த காலத்தில் சம்பந்தனுக்கு குண்டு துளைக்காத கார் ஒன்றை சந்திரிக்கா வழங்கியிருந்தார். (அதற்குமுன், தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதால், இவருக்கு கார் வழங்கப்பட்டது)

தற்போது ‘குண்டு துளைக்காத’ காரின் அவசியம் சம்பந்தனுக்கு இல்லை என்பது வேறு விஷயம்.

தமிழ் தலைவரை தூக்கத்தால் தட்டி எழுப்பிய சம்பவத்தை யாரோ கிளிக் செய்துவிட்டதில், போட்டோவும், செய்தியும் மீடியாவில் வெளியாகிவிட்டன. அதற்குதான், தற்போது விளக்கம் அளித்துள்ளார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர், சுரேஷ்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “தலைவர் சம்பந்தன் அவர்கள் தமிழர் பிரச்னையை தீர்ப்பதற்கான ராஜதந்திர நகர்வுகளைப் பற்றி, கண்களை மூடிய நிலையில், சிந்தித்துக் கொண்டிருந்தார். அந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தமிழர் நம்பிக்கை நட்சத்திர தலைவர் சம்பந்தனை தட்டி, அவரது சிந்தனையை குழப்பி விட்டார்.

இதை சிங்கள ஏகாதிபத்தியத்தின் சதிச் செயலாகவே நாம் பார்க்கிறோம்.

தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண எம் தலைவர் சிந்தனை செய்வதைக்கூட பொறுத்து கொள்ள முடியாமல், சிந்தனையை குழப்பியடிக்கும் சிங்கள பாசிச அரசியல்வாதிகள், எமக்கு உரிய தீர்வை எப்படி தரப்போகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தீர்வு கிடைக்கும்வரை நம் தலைவர் கண் துஞ்ச மாட்டார்.. போராட அஞ்ச மாட்டார்” என்றார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவரிடம் கேட்டபோது, “இரா.சம்பந்தன் கண்களை மூடியிருந்த நேரத்தில், அவரிடம் இருந்து லேசான ஒலி ஒன்று கேட்டுக்கொண்டு இருந்தது” என்றார்.

“ஐயோ.. தமிழர் தலைவரிடமிருந்து லேசான ஒலியா?” என்று யாரும் பதட்டப்பட வேண்டாம்.

தமிழில் அதை ‘குறட்டை’ என்று சொல்வார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பில், ‘சிந்தனையொலி’ என்பார்கள்.

VIRUVIRUPU

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக