அமிர்தலிங்கம் படுகொலைக்குப் பிறகு அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள, எல்.ரீ.ரீ.ஈ முயற்சி மேற்கொண்டது. (1) - டி.பி.எஸ்.ஜெயராஜ்
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் அவரது சகாவான வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆகியோர் 1989 ஜூலை 13ல், புலிகளின் தாக்குதல் பிரிவு ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டபோது,தமிழீழ விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவ படுத்தும் உத்தியோகபூர்வ தூதுக்குழு ஒன்று ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் அரசாங்கத்துடன் கொழும்பில் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டிருந்தது.
பிரேமதாஸ ஆட்சியினருக்கு அந்த படுகொலைச் சம்பவம் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது, அந்த குற்றச்சாட்டுக்கான பொறுப்பிலிருந்து எல்.ரீ.ரீ.ஈ யினை விடுவிப்பதற்கு அதுதான் முதலில் ஒரு உறுதியான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. உண்மையில் அது மிகவும் குழப்பமான ஒரு சமயமாக இருந்ததால், ஆரம்பத்தில் பலரும் சந்தேகத்தின் பலனை எல்.ரீ.ரீ.ஈ க்கு வழங்க தயாராக இருந்தார்கள்.
எனினும் காலப்போக்கில் எல்.ரீ.ரீ.ஈ தானே அந்தக் கொலைச் செயல்களைப் புரிந்ததாக வெளிப்படையாக ஏற்றுக் கொண்டதை கண்டபோது அரசாங்கத்தின் பரிதாபமான மூடிமறைக்கும் முயற்சி அம்பலமாகி, அதன்விளைவாக அதன் முகத்தில் கரி பூசப்பட்டது.
எல்.ரீ.ரீ.ஈ யின் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு அதன் அரசியல் மூலோபாயத் தலைவரும் மற்றும் ஆலோசகருமான அன்ரன் ஸ்ரனிஸ்லாஸ் பாலசிங்கம் என்கிற பாலா அண்ணையும் அரசியல் பிரிவு தலைவரான யோகி என்கிற நரேன் யோகரட்னம் ஆகியோர் இணைத் தலைமை வகித்தார்கள். புலிகளின் பேச்சு வார்த்தை பிரதிநிதிகள், ஜனாதிபதி பிரேமதாஸ அவர்களுடனும்; அவரது மூத்த அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் உயர் அரச அதிகாரிகள் ஆகியோருடனும் நேரடியாகப் பேசுவதற்கு வேண்டி கொழும்புக்கு பல பயணங்களை மேற்கொண்டிருந்தார்கள்.
பெரும்பாலான பேச்சு வாhத்தைகள் ஜனாதிபதி பிரேமதாஸவின் இல்லமான சுசரித்தவிலேயே நடைபெற்றது. எல்.ரீ.ரீ.ஈ குழுவினர் ஆரம்ப நாட்களில் ஹில்ரன் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டு பின்னர் கலதாரி மெரிடியன் ஹோட்டலில் தங்கவைக்கப் பட்டார்கள். புலிகளின் சொற்பகால கொழும்பு வாசத்தின்போது, அவர்களின் பாதுகாப்புக்குப் பெறுப்பாக காவல்துறையின் விசேட படையணியினர்(எஸ்.ரி.எப்) நியமிக்கப் பட்டிருந்தனர்.
இந்தப் பத்தியில் முன்னர் குறிப்பிடடதைப் போல, அமிர்தலிங்கம் மற்றும் முருகேசு சிவசிதம்பரம் ஆகியோர்,342-2,பௌத்தாலோக மாவத்தையில் உள்ள வீட்டில் வைத்து முன்னாள் யாழ்ப்பாண பாhளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுடன் சேர்த்து சுடப்பட்ட அன்றைய இரவில், இந்திய உயர் ஸ்தானிகர் லேக்கான் லால் மெஹ்ரோத்ரா, கொழும்புக்கு வருகை தந்திருக்கும் இந்திய விசேட தூதர் விஜி.தேஷ்முக்கினை கௌரவிக்கும் முகமாக தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஒரு இரவு விருந்தில் கலந்து கொள்வதற்காக திட்டமிட்டிருந்தார்கள்.
அப்போது சிவசிதம்பரம் தமிழர் விடுதலைக் கூட்டணியின்(ரி.யு.எல்.எப்) தலைவராகவும், அமிர்தலிங்கம் செயலாளர் நாயகமுமாக இருந்தார்கள். அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் காயங்களினால் உயிர் நீத்த அதேவேளை படுகாயமுற்ற சிவசிதம்பரம் உயிர் பிழைத்துக் கொண்டார்.
எல்.ரீ.ரீ.ஈயின் அலோசியஸ் யோகேஸ்வரனை தொலைபேசியில் அழைத்து ரி.யு.எல்.எப் உடனான சந்திப்பிற்கான நேரத்தை மாற்றியபொழுது புலிக் கொலையாளி, ரி.யு.எல்.எப் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடம் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளரான யோகி பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளும் சாத்தியம் உள்ளது எனச் சொல்லியிருந்தான்.
ஆனால் உண்மையில் இறுதியில் வந்து, கொலைகளைச் செய்து, பின்னர் கொல்லப்பட்டது யோகி அல்ல விசு. ரி.யு.எல்.எப் வீட்டில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு யோகி வரவிருக்கிறார் என்று யோகேஸ்வரனால் அறிவிக்கப் பட்டிருந்ததாலும் மற்றும் யோகி மற்றும் விசு ஆகியோரிடையே உள்ள வலுவான உருவ ஒற்றுமைகளினாலும் (இருவருமே கண்ணாடி அணிபவர்கள்) ஆரம்பத்தில் இந்தக் கொலையில் யோகி தொடர்பு பட்டிருந்தார் என ஊகிக்கப்பட்டது.
இப்படித்தான் இந்தக் கொலைச் செய்தி, விஜி.தேஷ்முக்கிற்கான இரவு விருந்தில் கலந்து கொண்டிருந்த இந்திய தூதுர் மெஹ்ரோத்ரா, அமைச்சரவை அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன மற்றும் கௌரவ விருந்தினர்கள் பலருக்கும் சொல்லப்பட்டது. முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் பி.பாஸ்கரலிங்கம் தான் முதன்முதலில் இந்தச் கொலைச் செய்தியை போட்டுடைத்தவர்.
விருந்துக்கு வந்த உடனேயே பாஸ்கரலிங்கம் மெஹ்ரோத்ரா மற்றும் ரஞ்சன் விஜேரத்ன ஆகியோரிடம் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சொன்னார். அதிர்ச்சியடைந்த மெஹ்ரோத்ரா இது எப்பொழுது நடந்தது என வினாவியபோது 15 நிமிடங்களுக்கு முன்னர் என அவரிடம் சொல்லப்பட்டது.
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராகவும் வெளிவிவகார அமைச்சராகவும் இருந்த ரஞ்சன் விஜேரத்ன இதற்கு யார் பொறுப்பு எனக் கேட்டார். அது முற்றாக தெளிவாகவில்லை, ஆனால் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட கொலையாளிகளில் ஒருவர் எல்.ரீ.ரீ.ஈயின் யோகி என பாஸ்கரலிங்கம் பதிலளித்தார்.
வெளிப்படையாகவே கலவரமடைந்த ரஞ்சன் விஜேரத்ன தனது ஆசனத்திலிருந்து எழுந்து அவரது பாதுகாப்புச் செயலாளர் சேபால அட்டிகலவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த வெளியே சென்றார். அவர் திரும்பி வந்தபோது மிகவும் நிம்மதியான தோற்றம் அவர் முகத்தில் குடிகொண்டிருந்தது, மற்றும் “இல்லை, இல்லை அது யோகி இல்லை” எனச் சத்தமாகச் சொன்னார்.
நிமால் லூவாகே
எல்.ரீ.ரீ.ஈ தங்களுக்கான பாதுகாப்பு எஸ்.ரி.எப் மூலமாகவே வழங்கப்பட வேண்டும், ஆயுதப் படைகளால் அல்ல என அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். வி.ஐ.பி க்களின் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்றிருந்த ஒரு எஸ்.ரி.எப் பிரிவு அந்த நோக்கத்துக்காக நியமிக்கப் பட்டிருந்தது.
அதற்கு பொறுப்பான அதிகாரியாக நிமால் லூவாகே இருந்தார். பின்னர் அவர் ஒரு எஸ்.ரி.எப் படைத் தளபதியாக கடமையாற்றியிருந்தார். காவல்துறையிலிருந்த தற்போது ஓய்வு பெற்றுவிட்ட டி.ஐ.ஜி நிமாலுக்கு, அப்போது அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது தொடர்பான செய்தி கிடைக்கும்போது அவர் கலதாரி ஹோட்டலில் இருந்தார். அதன் பின் என்ன நடந்தது என்பதை ஒரு மின்னஞ்சல் மூலமாக என்னிடம் அவர் நினைவு கூர்ந்தார்.
“அது நடந்தபோது நான் கலதாரி ஹோட்டலில் இருந்தேன், எல்.ரீ.ரீ.ஈயின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய காலம்சென்ற அன்ரன் பாலசிங்கம், யோகி மற்றும் ஏனையவர்களின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பாக இருந்தேன். எல்.ரீ.ரீ.ஈ யின் வேண்டுகோளின்படியே எஸ்.ரி.எப் தெரிவு செய்யப்பட்டிருந்தது, மற்றும் போர்முனையில் அவர்களுக்கு எதிராக நாங்கள் ஒரு கசப்பான யுத்தத்தை நடத்திக் கொண்டிருப்பதால் அந்த பணி எங்களுக்கு கடினமான ஒன்றாக இருந்தது.
இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்தக் கணமே எல்லா எல்.ரீ.ரீ.ஈ தூதுக்குழு அங்கத்தவர்களும் ஹோட்டலுக்குள் இருக்கிறார்களா என்பதை நான் சரிபார்த்தேன். அவர்கள் அனைவரும் அங்கேயே இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அங்கே இருந்தபடியால் என்ன நடந்தது என்பதை நான் அன்ரன் பாலசிங்கத்திடம் தெரிவித்தேன்.
அதைக்கேட்டு அவர்கள் ஒருவித குழப்பமும் அடையவில்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன் ஒரு வெறுமையான பார்வை மட்டுமே அவர்களின் பதிலாக இருந்தது. நான் உடனடியாக சம்பவ இடத்துக்கு விஜயம் செய்து, பாதுகாப்பு கடமையிலிருந்தவர்களால் சுடப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களைப் பார்வையிட்டேன் மற்றும் அவர்களது உடல்கள் அவர்கள் சுடப்பட்ட வீட்டுக்குள் வைக்கப் பட்டிருந்தது”
“அப்போது மூத்த காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்தார்கள் மற்றும் அந்தச் சம்பவத்தை பற்றி அவர்கள் விவாதிக்கும்போது, அதில் உள்ளவர்களில் கண்ணாடி அணிந்தவர் (விசு), யோகி என்கிற தீர்மானத்தில் இருந்தார்கள்,உண்மையாக உங்களுக்கு சொல்லுவதென்றால் கிட்டத்தில் பார்க்கும்போது அவர் யோகியை போலவே இருந்தார், ஆனால் யோகியை நான் ஹோட்டலில் பார்த்தபடியால் அது யோகி அல்ல வேறு யாரோ என்று நான் மூத்த காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தேன்”.
என்னால் அனுப்பப்பட்ட மற்றொரு மின்னஞ்சலுக்கு நிமால் கீழ்கண்டவாறு பதிலளிததிருந்தார்:-
“அமிர்தலிங்கம் கொலை தொடர்பாக நான் உங்களிடம் சொன்னவைகளைத்தான் என்னால் நினைவுபடுத்த முடிகிறது, ஏனெனில் எல்லாம் நடந்து முடிந்ததின் பின்னரே நான் சம்பவ இடத்துக்கு போயிருந்தேன். ஆனால் நான் திரும்பி வந்தபின் நான் பாலசிங்கத்திடம் பல கேள்விகளைக் கேட்டேன், ஆனால் அவர் அமிர்தலிங்கம் பற்றி குறிப்பிடவோ அல்லது கருத்து தெரிவிப்பதிலோ மிகவும் கவனமாக இருந்தார், அவர்களது இயக்கம் தங்களது முன்னேற்றத்துக்கு அமிர்தலிங்கம் இடைஞ்சலாக இருப்பார் என ஏற்கனவே அடையாளம் கண்டுவிட்டதால், அவர்கள் அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்கிற எண்ணத்தை அவருடைய போக்கு என்னுள் ஏற்படுத்தியது”.
“ஒரு விடயம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது, அவர்கள் அனைவரும் வௌ;வேறான பகுதிகளாக இயக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களுக்கிடையில் தொடாபுகள் இல்லை, விசேடமாக உளவுத்துறை தளத்தில் பணியாற்றுபவர்கள் தங்கள் செயற்பாடுகளை திட்டமிட்டபடி நிறைவேற்றுகிறார்கள் மற்றவர்களுக்கு அது தெரிவதேயில்லை. இல்லையென்றால் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் அவர்கள் கொலைகளை மேற்கொண்டிருக்க மாட்டாhகள், அந்த நேரத்தில் ஜனாதிபதிக்கு அது பெருத்த அவமானமாக இருந்தது”
ஜனாதிபதி பிரேமதாஸ புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில புலிகள் அமிர்தலிங்கத்தைக் கொலை செய்தது அரசாங்கத்தக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது என்று டி.ஐ.ஜி நிமால் அவதானித்தது போலவே, அந்தப் பழியை சற்று திசை திருப்பும் விதமாக அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள், புலிகளை சிக்கலில் மாட்டிவிடும் முயற்சியாக வேறு சில சக்திகளால் இந்தக் கொலை செய்யப்பட்டதாக ஒரு எண்ணத்தை வெளிப்படுத்த முயற்சித்தன.
அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிகைகள் அந்தச் சம்பவம் புலிகளின் பிரதிநிதிகள் என உத்தேசிக்கப் படுபவர்களால் நடத்தப்பட்டது என அறிவித்தன. பெயர் குறிப்பிடாத ஒரு மூத்த காவல்துறை உத்தியோகத்தர், எல்.ரீ.ரீ.ஈ யினை போலியாக ஆள்மாறாட்டம் செய்து ஒரு மூன்றாம் தரப்பு இந்தக் கொலைகளுக்கு பொறுப்பாக உள்ளதா என்று உறுதிப்படுத்தும் விதத்தில் விசாரணைகள் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
லண்டன் எல்.ரீ.ரீ.ஈ
ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ மௌனத்தை கடைப்பிடித்த அதேவேளை லண்டனில் இருந்த புலிகளின் வெளிநாட்டுக் கிளை அந்தக் கொலைக்கான பொறுப்பை நிராகரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. “ரி.யு.எல்.எப் தலைவர்களான அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் துயரமான மறைவை எல்.ரீ.ரீ.ஈ ஆழ்ந்த வேதனையுடன் அறிந்துள்ளது. எங்கள் இயக்கத்துக்கு அவமதிப்பை உண்டாக்கவும் மற்றும் தற்போது எல்.ரீ.ரீ.ஈக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெறும் சமாதான பேச்சக்களை குழப்புவதற்காகவும் சில தீய சக்திகள் இந்த வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று லண்டன் எல்.ரீ.ரீ.ஈயின் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.
மூன்று கொலையாளிகளுடைய மரணவிசாரணையும் ஜூலை 21ல் நடைபெற்றது. பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வாக்குமூலத்துக்குப் புறம்பாக வேறு இரண்டு பேர்களும் அந்த மூன்று கொலையாளிகளையும் அடையாளம் காட்டினார்கள். அந்த மூன்று பேரும் நாரகேன்பிட்டியவில் உள்ள அண்டர்ஸன் அடுக்குமாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தார்கள். அந்த துரதிருஷ்டமான நாளில் அந்த மூவரணி அங்கிருந்துதான் அதே வாகனத்தில் புல்லர்ஸ் வீதிக்கு வந்திருந்தார்கள்.
இறந்த மூவரையும் பெயர் சொல்லி அடையாளம் காட்டியது அண்டர்ஸன் அடுக்குமாடிக் குடியிருப்பின் பிரதான குடியிருப்பாளராகிய வில்லியம் மரியதாஸன் மற்றும் காசப்பா வீதி, கொழும்பு 5ல் உள்ள நடராஜா சத்தியானந்தன் ஆகியோரே. உண்மையில் சத்தியானந்தன்தான் அந்த மூவருக்கும் அண்டர்ஸன் அடுக்குமாடியில் வீடு ஏற்பாடு செய்தவர். அவர்கள் முன்பு அவருடன்தான் தங்கியிருந்தார்கள். இரண்டு மனிதாகளும் கைது செய்யப்பட்டார்கள்.
ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த உடல்களை யாரும் உரிமைகோர முன்வராததால், அவை அரசாங்க செலவில் அடக்கம் செய்யப் பட்டன. எல்.ரீ.ரீ.ஈ தனது மறுப்பை தொடர்ந்து கடைப்பிடித்தது, ஆனால் ஒரு போலி மரணச்சடங்கு ஆனந்தபுரத்தில் நடத்தப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனினும் வதந்திகளின் அடிப்படையில் உண்மையில் புலிகள்தான் இதற்கு பொறுப்பு என்கிற செய்தி தமிழ் சமூகத்தினரிடையே பரவியிருந்தது.
அதற்கு மேலாக இந்திய அதிகாரிகள் தங்கள் பதிவுகளில் இருந்தும் மற்றும் ஒருபகுதி இந்திய ஊடகங்களுக்கு கசிந்த தகவல்கள் மூலமாகவும் விசுவை தெளிவாக அடையாளம் காட்டினார்கள். அலோசியஸ் மற்றும் சிவகுமார் ஆகியோரை தமிழ் பொதுமக்கள் பெரிதும் அறிந்திருக்கவில்லை, ஆனால் விசு ஒரு மூத்த தலைவரும் தன்கு அறிமுகமானவரும் ஆவார். அதன்படி எல்.ரீ.ரீ.ஈயை சேர்ந்த விசு அமிர்தலிங்கத்தை கொலை செய்தார் என்பது ஒரு திறந்த இரகசியம் ஆனது.
இந்த தகவல் எங்கும் பரவத் தொடங்கியதும், தங்களது உத்தியோகபூர்வ மறுப்பை எல்.ரீ.ரீ.ஈ திருத்தி வெளியிட வேண்டியதாகிவிட்டது. விசு, எல்.ரீ.ரீ.ஈயின் ஒரு மூத்த தலைவர் எனத் தெளிவாக அடையாளம் காணப்பட்டு விட்டதால், பெயர் தெரிவிக்காத புலிகள் வட்டாரங்கள், விசு மரணமடைந்த வேளையில் இயக்கத்தின் அங்கத்தவராக இருக்கவில்லை என்கிற செய்தியை ஊடகங்களுக்கு சொல்லி வந்தன. பலமாதங்களுக்கு முன்பே ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் விசுவை புலிகள் வெளியேற்றி விட்டதால் அதன் பின்னர் விசு செய்த செயல்களுக்கு புலிகள் பொறுப்பல்ல எனச் சொல்லப்பட்டது.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக