அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 24 அக்டோபர், 2014

லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன்!

லட்சிய நடிகர் எனப் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் (எஸ்எஸ்ஆர்) சென்னையில் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86.


எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும் சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன் 1928ல் உசிலம்பட்டியில் பிறந்தார்.

மேடை நாடகங்களில் நடித்து வந்த எஸ்எஸ்ஆர், 1947 ஆம் ஆண்டில் பைத்தியக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார்.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் எம்ஜிஆர், கருணாநிதியுடன் நெருக்கமானார். திராவிட இயக்கத்தின் கொள்கைகளை திரையில் முழங்கியவர்களில் இவருக்கும் முக்கிய இடமுண்டு.

1950கள், 60களில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார். இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் காலத்தால் அழியாதவையாகும்.

கருணாநிதியின் வசனங்களை மிக அற்புதமாகப் பேசி நடித்த கலைஞர்கள் வரிசையில் எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு, எஸ்எஸ் ர் இடம் பிடித்தார்.
பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக திகழ்ந்தார் எஸ்எஸ்ஆர். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். 1960 ஆம் ஆண்டில் இவர் தங்கரத்தினம் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி நடித்திருந்தார்.

பார் மகளே பார், குங்குமம், பச்சைவிளக்கு, கைகொடுத்த தெய்வம், சாரதா போன்ற படங்களில் இவருடன் இணைந்து நடித்த விஜயகுமாரியைத் திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில் விஜயகுமாரியை மறுமணம் செய்த எஸ்.எஸ்.ஆருக்கு அவர் மூலமாக ஆண் குழந்தையொன்று பிறந்த நிலையில் அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் இருவரும் தனித்தனியாக வசித்தாலும், மணமுறிவு ஏற்படவில்லை. பின்னர் இருவரும் இணைந்துவிட்டதாக பேட்டி கொடுத்தனர்.

1962இல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க.வின் சார்பில் 1970 முதல் 1976 ஏப்ரல் 02 நாள் வரை பணியாற்றினார்.
எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியதும், அதில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். 1980இல் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் எஸ் திருநாவுக்கரசு தனிக் கட்சி ஆரம்பித்தபோது, அதில் சேர்ந்தார். அவர் கட்சியைக் கலைத்ததும் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பினார்.
மார்புச் சளி, மூச்சடைப்பால் சிரமப்பட்ட எஸ்எஸ்ஆர் உடல்நிலை நேற்று கவலைக் கிடமானது. இன்று காலை வரை உயிருக்குப் போராடிய அவர், சிகிச்சைப் பலனின்று காலை 11 மணிக்கு மரணமடைந்தார்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக