அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 21 நவம்பர், 2014

தமிழகத்தில் பிரபாகரன் பிறந்தநாளுக்கு தடை, வைகோ கைது: சு.சுவாமியின் கோரிக்கை இது

சென்னை: விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை தமிழகத்தில் கொண்டாட அனுமதிக்க கூடாது என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்.



புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் வரும் 26ம்தேதி மாவீரர் நாளாக கொண்டாடப்படும் என்று தமிழ் இயக்க போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். எழுச்சியுடன் பிறந்தநாளை கொண்டாட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் பாஜகவில் சமீபத்தில் இணைந்த சுப்பிரமணியன் சுவாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை தமிழகத்தில் கொண்டாட அழைப்பு விடுத்துள்ள வைகோவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தில் அதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மாநில அரசின் கடமை. தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இதை அறிவுறுத்த வேண்டும். மேலும், சுனந்தா புஷ்கர் மர்மமாக மரணமடைந்தது குறித்து அமைச்சர் சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அதே நேரம் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வருகிற 26ம் தேதி விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் மாவீரர் நாளாக கொண்டாடப்படுகிறது. இதில் மாணவர்கள் கலந்து கொள்வார்கள். இதேபோல் உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாட வேண்டும் என உலக தமிழர் பேரமைப்பு கேட்டு கொள்கிறது.

மேலும் அன்றைய தினம் தஞ்சை பகுதியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். உண்மையான தமிழர்கள் பிரபாகரனின் பிறந்தநாளை மாவீரர் தினமாக கொண்டாடுவார்கள். இலங்கையில் இனப்படுகொலை நடக்க காரணமாக இருந்தவர்கள் 1 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை புரிந்தவர்கள் இந்த மாவீரர் தினத்தை கொண்டாடுவதை எதிர்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தட்ஸ்தமிழ்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக