அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 12 மார்ச், 2015

நடந்தது பலாத்காரம் அல்ல... மத்திய அரசுக்கு நாகாலாந்து அரசு அனுப்பிய அறிக்கையில் ‘திடுக்’ திருப்பம்

திம்மாபூர்: நாகாலாந்தில் பாலியல் குற்றவாளியை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்தது தொடர்பாக மத்திய அரசுக்கு, அம்மாநில அரசு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், குற்றவாளி தான் பலாத்காரம் செய்யவில்லை என்றும், அது இருவரும் விருப்பத்துடனேயே கொண்ட உறவு என்றும் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.



வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்த 35 வயதான சையத் அரீப் கான் என்பவர், நாகாலாந்தில் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 23 மற்றும் 24-ம் தேதிகளில் நாகா பழங்குடியின பெண் ஒருவரை பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத்தை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சையத், திம்மாபூரில் உள்ள மிகவும் பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த பலாத்கார சம்பவம் தொடர்பாக சையத் மீது கடும் கோபத்தில் இருந்த நாகா பழங்குடியின மக்கள், திம்மாப்பூர் சிறையை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர், பாலியல் குற்றவாளி சையத்தை சிறைக்கு வெளியே ஊர்வலமாக அழைத்து சென்று ஊருக்கு மையப்பகுதியில் வைத்து அடித்துக் கொலை செய்தனர்.

இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த வாகனங்கள் சில தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அங்கு ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டது. மேலும், தாக்குதலில் ஈடுபட்டதாக பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் குற்றவாளியை பொதுமக்கள் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் படி, தற்போது நாகாலாந்து அரசு, மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், ‘சையது அரீப் கான் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணை அவரது விருப்பத்துடன் இரண்டு தடவை அழைத்துச் சென்று ‘செக்ஸ்' உறவில் ஈடுபட்டதாகவும், அதற்காக ரூ.5 ஆயிரம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், அப்பெண் கூடுதலாக பணம் கேட்டதற்கு, தான் மறுத்ததால், பலாத்கார புகார் கொடுத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, இது பலாத்காரம் அல்ல, இருவரின் விருப்பத்துடன் நடந்த ‘செக்ஸ்' உறவு என்று தோன்றுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக