அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 16 ஏப்ரல், 2015

விமான விபத்தில் இறக்கவில்லை, நேதாஜி கொல்லப்பட்டார்: மாஜி மெய்க்காவலர் பரபரப்புத் தகவல்

குர்கான்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், விமான விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் கொல்லப்பட்டார் என அவரது முன்னாள் பாதுகாவலர் (வயது 93) ஜக்ராம் யாதவ் தெரிவித்துள்ள பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.



இந்த நிலையில், 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் இதை அவரது குடும்பத்தினரோ, ஆதரவாளர்களோ ஏற்கவில்லை. விமான விபத்து சம்பவத்துக்கு பிறகு நேதாஜி ரஷியாவில் காணப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இதனால் இன்று வரை நேதாஜி இறந்தாரா, உயிரோடு இருக்கிறாரா? என்ற சர்ச்சை தொடர்ந்து வருகிறது. எனவே, மத்திய அரசால் நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட கோரிக்கை வலுத்து வருகிறது.

இதற்கிடையே, கடந்த 20 ஆண்டுகளாக நேதாஜியின் குடும்பத்தார் உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்தப் பின்னணியில், நேதாஜி விமான விபத்தில் பலியாகவில்லை. கொல்லப்பட்டார் என்று அவரது முன்னாள் பாதுகாவலர் ஜக்ராம் யாதவ் கூறியுள்ள தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1943-44-ம் ஆண்டில் 13 மாதம் நேதாஜிக்கு பாதுகாவலராக இருந்தவர் ஜக்ராம் யாதவ். இந்திய தேசிய ராணுவத்தில் சிப்பாயாக இருந்த, ஜக்ராமுக்கு தற்போது 93 வயதாகிறது.

இவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் நேதாஜியின் மரணம் குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

நேதாஜியும், முக்கிய அதிகாரிகளும் சுதந்திர போராட்டம் குறித்து ஆலோசனை செய்வதை வீரர் என்ற முறையில் நான் அடிக்கடி கேட்டுள்ளேன்.
1945-ம் ஆண்டு நாங்கள் சிட்டகாங் சிறையில் இருந்த போது நேதாஜி விமான விபத்தில் இறந்து விட்டதாக செய்தி வந்தது. இந்த செய்தியை நாங்கள் யாரும் நம்பவில்லை.

இந்திய தேசிய ராணுவ வீரர்களை தவறாக வழி நடத்த அவரது மரணம் பற்றிய செய்தி பரப்பப்பட்டது.

சீனாவின் விடுதலைக்கு பிறகு 1949-ல் சீன தூதுவர் ஒருவர் அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு வந்தார். அவர்தான் நேதாஜி ரஷியாவில் இருப்பதாகவும், இந்தியா திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்தார். இதுபற்றி நேருவுக்கு தெரிவித்தபோது அதை நிராகரித்தார்.

நான் மட்டுமல்ல எனது தலைமையில் உள்ள எல்லோரும் நேதாஜி கொல்லப்பட்டதாகவே கருதுகிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜக்ராம் ஏன் இத்தனை காலமாக இதுகுறித்து எதுவும் பேசவில்லை என்பதும் குழப்பமாகவே உள்ளது.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக