அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 23 ஏப்ரல், 2015

இனவெறியைத் தூண்டுவதாக ஐஸ்வர்யா ராய் விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு!

நகைக்கடை விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் ஒன்று சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. இனவெறி மற்றும் குழந்தைத் தொழிலை அது ஊக்குவிக்கிறது என்று புகார் எழுந்ததைத் தொடர்ந்து அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக சம்பந்தப்பட்ட நகைக்கடை நிறுவனம் அறிவித்துள்ளது.



சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் இடம்பெற்ற நகைக்கடை விளம்பரம் ஒன்று பத்திரிகையில் வெளிவந்தது. அதில் ஐஸ்வர்யா ராய் நகைகளுடன் ஜொலிக்க, அவருக்குப் பின்னால் ஒரு கருப்பினக் குழந்தை குடையை உயர்த்திப் பிடிப்பதுபோல விளம்பரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கூட்டாக ஐஸ்வர்யா ராய்க்குக் கடிதம் எழுதினார்கள். Open letter to Aishwarya Rai Bachchan என்கிற அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

இந்த விளம்பரம் இனவெறியைத் தூண்டுவதாக உள்ளது. குழந்தைத் தொழிலாளர்களை இந்திய அரசு தடை செய்துள்ளது. ஆனாலும் நடைமுறையில் குழந்தைத் தொழிலாளர்கள் இன்னமும் இருக்கிறார்கள். இதை நாம் எல்லோரும் சேர்ந்துதான் மாற்றவேண்டும். இந்த விளம்பரம், கருப்பின குழந்தையை அடிமைப்படுத்தலாம், வேலைக்கு ஈடுபடுத்தலாம் என்பதுபோல உள்ளது. உங்களுக்கு உள்ள புகழை வைத்து இனவெறி, குழந்தைகளின் உரிமைக்கு எதிராக உள்ள ஒரு படத்தை விளம்பரம் செய்யமாட்டீர்கள் என நம்புகிறோம். அதனால் இந்த விளம்பரத்தை உடனடியாக நிறுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் ஐஸ்வராய் மற்றும் சம்பந்தப்பட்ட நகைக்கடைக்கும் கடிதம் எழுதினார்கள்.

இது தொடர்பாக, ஐஸ்வர்யா ராயிடமிருந்து பதில்கடிதம் வந்துள்ளது. அதில், விளம்பரம் பற்றிய உங்கள் கருத்தை என் கவனத்துக்குக் கொண்டுவந்ததற்கு நன்றி. விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட படத்தை இத்துடன் இணைத்துள்ளேன். விளம்பரத்தின் லே அவுட் தொடர்பாக கிரியேடிவ் டீம் தான் முடிவெடிப்பார்கள். உங்கள் கருத்துகளைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன் என்று எழுதப்பட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட நகைக்கடையும் பதிலளித்துள்ளது. சர்ச்சை ஏற்படுத்திய அந்த விளம்பரத்தை நீக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளது. விளம்பரத்தில் ராஜ கம்பீரம், காலமில்லா அழகு, நளினம் போன்றவை வெளிப்படவேண்டும் என விரும்பினோம். இதனால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறோம். எங்களுடைய விளம்பரங்களில் இருந்து அந்தப் புகைப்படத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என்று அறிவித்துள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக