அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 15 நவம்பர், 2015

அரசியல் கைதிகளின் விடுதலையும் தமிழ் கட்சிகளின் குடும்பிபிடிச் சண்டையும்

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கைகள் குறித்து தமக்குப் பூரண விப­ரங்கள் நாளை திங்­கட்­கி­ழமை தெரி­ய­வ­ரு­மெ­னவும், அதன் பின்னர் அது தொடர்­பான முடிவு எடுக்­கப்­ப­டு­மெ­னவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கடந்த வியா­ழக்­கி­ழமை சந்­தித்து நீண்ட நேரம் உரை­யா­டினார். இதன்­போதே ஜனா­தி­பதி இந்த உறு­தி­மொ­ழியை வழங்­கி­யுள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.



இதே­வேளை, தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அனைத்து தமிழ் அர­சியல் கைதி­களும் பொது மன்­னிப்பின் கீழ் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை உடன் நீக்க வேண்டும் ஆகிய கோரிக்­கை­களை முன்­வைத்தே வடக்கு, கிழக்கு மாகா­ணத்தில் நேற்று பூரண கடை­ய­டைப்பும் வேலை நிறுத்­தமும் மேற்­கொள்­ளப்­பட்­டன. இதனால் வடக்கு, கிழக்குப் பிர­தே­ச­மெங்கும் ஸ்தம்­பித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இந்த ஹர்த்­தா­லுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, தமிழ்த் தேசிய முன்­னணி ஆகி­யன அழைப்பு விடுத்­தி­ருந்­தன. அத்­துடன் ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்சி, தமிழர் விடு­தலைக் கூட்­டணி, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தன.

யுத்தம் முடி­வுக்கு வந்து நீண்ட காலத்­துக்குப் பின்னர் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தும் வகையில் பரந்­த­ளவில் அமை­தி­யான முறையில் தமிழ் பேசும் மக்­களால் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. தமிழ் அர­சியல் கைதிகள் மாத்­தி­ர­மன்றி, முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் மேற்­படி அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­காக தொடர்ச்­சி­யாகக் குர­லெ­ழுப்பி வரு­கின்­ற­மையும் கவ­னத்தில் கொள்­வது அவ­சியம்.

தமிழ் அர­சியல் கைதி­களை பொறுத்­த­மட்டில் தமது விடு­த­லையை வேண்டி ஏலவே பல தட­வைகள் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் குதித்­தி­ருந்­தனர். இந்­நி­லையில், பல்­வேறு வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டன. எனினும், அவை எதுவும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. ஏமாற்றம் ஒன்றே அவர்­க­ளுக்கு எஞ்­சி­யி­ருந்­தது. புதிய அரசின் வரு­கை­யோடு இவ்­வி­வகாரம் மீள் எழுந்­த­துடன், மீண்டும் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தையும் ஆரம்பித்தனர். இத­னை­ய­டுத்து, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வழங்­கிய உறு­தி­மொ­ழிக்­க­மைய அவர்கள் போராட்­டத்தை இடை­நி­றுத்­தி­யி­ருந்­தனர். எனினும், அந்த உறு­தி­மொ­ழிக்­கேற்ப கைதிகள் விடு­தலை சாத்­தி­ய­மா­கா­ததன் கார­ண­மாக மீண்டும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் குதித்­தனர்.

இந்த உண்­ணா­வி­ரதப் போராட்டம் கார­ண­மாக உடல்­நிலை முற்­றாகப் பாதிப்­ப­டைந்த நிலையில் 19 அர­சியல் கைதிகள் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். கடந்த பல வரு­ட­கா­ல­மாக சிறைத் தண்­ட­னையை அனு­ப­வித்து எந்­த­வித விமோ­ச­னமும் இல்­லாத நிலையில் தாம் பல்­வேறு துய­ரங்­களை அனு­ப­வித்து விட்­ட­தா­கவும், எனவே பொது­மன்­னிப்பின் அடிப்­ப­டையில் தங்கள் அனை­வ­ரையும் விடு­தலை செய்ய வேண்­டு­மெ­னவும் கோரியே குறித்த கைதிகள் தமது போராட்­டத்தை மேற்­கொண்­டுள்­ளனர்.

இத­னி­டையே, கடந்த புதன்­கி­ழமை 31 அர­சியல் கைதிகள் கடு­மை­யான நிபந்­த­னை­க­ளுடன் 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ஆட்­பி­ணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதி­மன்றம் அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது. எனினும், அவர்­களின் பிணைக்­கான கையொப்­ப­மி­டு­வ­தற்கு எவரும் இல்­லாத நிலையில் அவர்கள் மீண்டும் சிறைச்­சா­லைக்கே கொண்டு செல்­லப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இது ஒரு­வ­கையில் தெய்வம் வரம் கொடுத்­தாலும் பூசாரி இடங்­கொ­டுக்­காத நிலை­மை­யையே எடுத்­துக்­காட்­டு­வ­தாக அவர்­களின் பெற்­றோர்­களும் விசனம் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே தமது விடு­தலை விட­யத்தில் தாம் தொடர்ச்­சி­யாக ஏமாற்­றப்­ப­டு­வ­தா­கவும், இது தொடர்பில் எவரும் சரி­யான முடிவை எடுக்கத் தவ­றி­வி­டு­வ­தா­கவும் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை கைதிகள் முன்­வைத்­துள்­ளனர். மீண்டும் அர­சியல் கைதிகள் விவ­காரம் சூடு­பி­டித்­துள்ள நிலையில் அதற்கு துரி­த­மாகப் பரி­கா­ரத்தை காண­வேண்­டிய தார்­மிகப் பொறுப்பு அர­சாங்­கத்­தி­டமும் ஜனா­தி­ப­தி­யி­ட­முமே உள்­ளது. அதனை மேலும் இழுத்­த­டிக்க முனைந்தால் அது அர­சாங்­கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்­டுள்ள நல்­லெண்­ணத்தை சிதைப்­ப­தா­கவே இருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

மேலும், இந்த விவ­கா­ரத்தை சிங்­கள அர­சி­யல்­வா­தி­களும் சரி, தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் சரி தமக்கு சாத­க­மான முறையில் அர­சி­ய­லாக்கி அதில் குளிர்­காய முனையும் போக்­கு­களை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. குறிப்­பாக, சில கடும்­போக்கு சிங்­கள அர­சி­யல்­வா­திகள் படை­யி­னரை அர­சாங்கம் தடுப்புக் காவலில் வைத்­துக்­கொண்டு, புலி­களை விடு­தலை செய்­வ­தாக அர­சாங்­கத்­துக்கு எதி­ராகக் கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். அதே­போன்று சில தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மீதும் தலைவர் இரா. சம்­பந்தன் மீதும் அபாண்­ட­மான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். கைதிகள் விவ­காரம் தொடர்பில் கூட்­ட­மைப்பும் தலைவர் இரா.சம்­பந்­தனும் கடந்த பல வரு­ட­கா­ல­மாக தொடர்ச்­சி­யாகக் குர­லெ­ழுப்பி வரு­கின்­றனர். இந்­த­நி­லையில் வெறு­மனே குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வ­வைப்­பது கூட்­ட­மைப்பின் செயற்­பா­டு­களை பின்­ன­டையச் செய்­யவும் எதிர்த்­த­ரப்­பி­ன­ருக்குச் சாத­மா­கவும் செய்­யவே வழி­வ­குக்கும் என்­பதை சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் நினைவில் கொள்­வது அவ­சி­ய­மாகும். கைதிகள் விவ­கா­ரத்தில் தீர்­மா­னத்தை எடுக்க வேண்­டி­யது ஜனா­தி­ப­தியும் அர­சாங்­க­முமே ஆகும். எனினும், அதற்­கான அழுத்­தத்தை தொடர்ச்­சி­யாக வழங்க வேண்­டிய கடப்­பாடு கூட்­ட­மைப்­பி­டமும் அதன் தலை­மைத்­து­வத்­தி­டமும் உள்­ளது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

எவ்­வா­றெ­னினும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்­சி­க­ளி­டையே காணப்­படும் ஒற்­று­மை­யீ­னங்­களும் குத்து வெட்­டுக்­களும் மீண்டும் தமிழ் மக்­களின் இருப்­பையும் எதிர்­கா­லத்­தையும் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ளது. மறு­புறம் தமிழ் மக்­களின் பலத்தை எவ்­வாறு சீர­ழிக்­க­லா­மென எதிர்­பார்த்­தி­ருக்கும் சக்­தி­க­ளுக்கு சிறப்­பான வாய்ப்­பா­கவும் இது அமைந்­துள்­ளது. இது­வரை காலம் கட்­சிக்­குள்­ளி­ருந்த முரண்­பா­டுகள் தற்­பொ­ழுது பகி­ரங்­க­மாகி ஒருவர் மீது ஒருவர் நேர­டி­யாக சேற்றை வாரி­யி­றைக்கும் நிலை­மையை உரு­வாக்­கி­யுள்­ளதைக் காண­மு­டி­கின்­றது.

அண்­மையில் கூட்­ட­மைப்பைச் சேர்ந்த உறுப்­பினர் ஒருவர், வட­மா­காண முத­ல­மைச்சர் தொடர்பில் தெரி­வித்த கருத்து, உல­கெங்கும் பரந்­து­வாழும் தமிழ் மக்கள் மத்­தியில் மிகுந்த அதி­ருப்­தி­யையும் சல­ச­லப்­பையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு அப்பால், தமது சுய கோப­தா­பங்­களின் பின்­ன­ணி­யிலும் பதவி மோகத்தின் அடிப்­ப­டை­யிலும் இவ்­வாறு செயற்­ப­டு­கின்­ற­னரா? இதற்­கா­கவா நாம் இவர்­களை எமது பிர­தி­நி­தி­க­ளாகத் தெரிவு செய்து அனுப்பி வைத்தோம்? என கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­றனர் தமிழ் மக்கள்.

மறு­புறம், தமிழ் மக்கள் எந்­த­ளவு தூரம் துய­ரங்­க­ளையும் இழுத்­த­டிப்­புக்­க­ளையும் சந்­தித்­துள்­ளார்கள் என்­ப­தையும் அதி­லி­ருந்து மீள­மு­டி­யாது அவர்கள் அன்­றாடம் படும் வேத­னை­க­ளையும் தமிழ் அர­சி­யல்­வா­திகள் ஒரு கணம் தங்கள் நெஞ்சில் கைவைத்து சிந்­திப்­பார்­க­ளே­யானால், தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் தலை­வர்கள் எனக்­கூ­றிக்­கொள்­ப­வர்கள் இவ்­வாறு உலகே வெட்கித் தலை­கு­னியும் வகையில் குடும்­பி­பிடிச் சண்­டை­களில் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள் என்பதே யதார்த்தமாகும்.

கட்சிக்குள் இவ்வாறு தீவிரமடைந்துவரும் கருத்து மோதல்கள் சந்தி சிரிக்கும் நிலைமையை ஏற்படுத்தியிருப்பதுடன் மாத்திரமன்றி, தென்னிலங்கை அரசியல்வாதிகள் தமிழ் மக்களை பரிகாசம் செய்யும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதை சர்வசாதாரணமாகக் காணமுடிகின்றது. இந்த நிலைமை மேலும் தொடருமானால் அது தமிழ் மக்களின் அரசியல் பலத்தை முற்றுமுழுதாக சீர்குலைப்பதுடன் கடந்த காலங்களில் தமிழர்கள் சிந்திய இரத்தத்தை அர்த்தமற்ற ஒன்றாகவே ஆக்கிவிடும்.

சரித்திரத்தை ஒருகணம் திரும்பிப் பார்த்தால் தமிழர்களின் துயர வரலாற்றுக்கு பிரதான காரணம் காட்டிக்கொடுப்புகளும் போட்டா போட்டிகளும் ஒருவரது காலை மற்றவர் வாரி விடுவதுமேயாகும். இந்த நிலைமை இனிமேலும் தொடருமானால் தந்தை செல்வா கூறியது போன்று, 'தமிழ் மக்களை இறைவனாலும் காப்பாற்ற முடியாத நிலைமையே மிஞ்சுவதாக இருக்கும்' என்பதை நினைவு படுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக