அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 15 நவம்பர், 2015

காதலின் நகரத்தில் இரத்தக்களரி - பாரிஸ் நகரத் தாக்குதல்கள்

அதனைக் காதலின் நகரம் என்றும் கூறு­வார்கள். அழ­கி­யலின் உச்­சத்தைத் தொட்ட புராதனக் கட்­ட­டங்கள். செவிக்­கி­னிமை தரும் பிரெஞ்சு மொழி. நடுத்­தெ­ருவில் தயக்க ­மின்றி முத்­த­மிட்டு அன்பை வெளிப்­ப­டுத்தும் காதல் சிட்­டுக்கள்.

பிரான்சின் தலை­நகர் பாரிஸ். அதில் வெள்­ளிக்­கி­ழமை இரவு என்­றாலே கொண்­டாட்டம். ஆடல், பாடல், நாடகம், சினிமா என்று கலை­களின் கொண்­டாட்டம் ஒரு­புறம். ஒரு­வார கால உழைப்பின் சலிப்பை ஓரங்­கட்டச் செய்யும் விளை­யாட்டுப் போட்­டிகள் மறு­புறம்.



கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவும் அவ்­வாறு தானி­ருந்­தது. நகரின் பல இடங்­களில் குண்­டுகள் வெடித்து, துப்­பாக்கி வேட்­டுக்கள் தீர்க்­கப்­படும் வரை. அதற்குள் எல்லாம் மாறி­யி­ருந்­தது. காதல் நகரம் மர­ணங்­களின் நக­ர­மாக மாறி­யது.

இசை நடன நிகழ்ச்­சியை கண்­டு­க­ளிப்­ப­தற்­காக பற்­றக்லான் அரங்கில் திரண்­டி­ருந்த பார்­வை­யா­ளர்கள். பிரான்ஸ், ஜேர்­மனி அணி­க­ளுக்கு இடை­யி­லான நட்­பு­றவு காற்­பந்­தாட்ட போட்­டியைப் பார்­வை­யிட Stade de France மைதா­னத்தில் குழு­மி­யி­ருந்த ரசி­கர்கள்.

பற்­றக்லான் அரங்­கிற்குள் பிர­வே­சித்த ஆயு­த­பா­ணிகள் சர­மா­ரி­யாக துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­தார்கள். புகழ்­பெற்ற மைதா­னத்­திற்கு வெளியே குண்­டுகள் வெடித்­தன. இவை தவிர, நகரின் சிற்­றுண்­டிச்­சா­லைகள் சில­வற்­றிலும் துப்­பாக்கி வேட்­டுக்கள் தீர்க்­கப்­பட்­டன.

அழ­கி­ய­லுக்கும், அன்­புக்கும் பேர் போன காதல் நகரம். அதற்கு போதாத காலம் போலும். 2015ஆம் ஆண்டை ஆயுத வன்முறை­க­ளுடன் வர­வேற்ற பாரிஸ் நகரம், கடந்த வெள்­ளிக்­கி­ழமை மிகவும் மோச­மான தாக்­கு­தலை சந்­தித்­தது.

ஜன­வ­ரியில் சார்ளி ஹெப்டோ பத்­தி­ரிகை அலு­வ­லகம் உள்­ளிட்ட மூன்று ஸ்தலங்கள் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கின. இந்த வன்­முறைகள் மூன்று நாட்கள் நீடித்­தன. இவற்றில் மொத்­த­மாக 16 பேர் வரை கொல்­லப்­பட்­டார்கள்.

கடந்த வெள்­ளி­யன்றும் நூற்­றுக்­க­ணக்­கான மர­ணங்கள். இந்தக் கட்­டுரை எழு­தப்­படும் சமயம் வரை 150 பேர் வரை மர­ணித்­தி­ருந்­தார்கள். இருந்­த­போ­திலும், பலி­யா­ன­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்கக் கூடு­மென சர்­வ­தேச ஊட­கங்கள் ஹேஷ்யம் வெளி­யிட்­டன.

நபி பெரு­மா­னாரின் உருவப் படத்தை கேலிச் சித்­தி­ர­மாக வரைந்து, இஸ்­லாத்தை இழி­வு­ப­டுத்­தி­ய­மைக்­காக சார்ளி ஹெப்டோ அலு­வ­ல­கத்தைத் தாக்­கி­ய­தாக அல்­கொய்­தா­வுடன் தொடர்­பு­டைய அமைப்­பொன்று கூறி­யி­ருந்­தது.

பற்­றக்லான் அரங்கு உள்­ளிட்ட ஸ்தலங்கள் மீதான தாக்­கு­தல்­களின் நோக்கம் என்ன என்­பது தெளி­வாகத் தெரி­ய­வில்லை. இது சிரி­யாவில் செய்த கொடுஞ்­செ­ய­லுக்கு பதி­லடி என ஆயு­த­பா­ணிகள் உரத்துக் கூறி­ய­தாக நேரில் கண்­ட­வர்கள் தெரி­வித்­துள்­ளார்கள்.

தீர விசா­ரிக்­காமல் தாக்­கு­தலை நடத்­தி­ய­வர்கள் யாரென ஹேஷ்யம் கூறு­வது பொருத்தம் அற்­றது. எனினும், இதில் இஸ்­லா­மிய கடும்­போக்கு அமைப்­புக்கள் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கலாம் என்ற சந்­தேகம் பர­வ­லாக நீடிக்­கி­றது.

இந்த சந்­தே­கத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் பிர­தமர் பிரன்­சுவா ஹொல்­லந்தே பேசி­யுள்ளார். தேசிய தொலைக்­காட்­சியில் தோன்­றிய பிர­தமர், பயங்­க­ர­வா­திகள் பற்றி பிரஸ்­தா­பித்தார். இவர்கள் யார் என்­பதை அறிவோம் என்றும் கூறினார்.

பிரான்ஸின் சமீ­பத்­திய வன்­மு­றை­களை ஆராயும் பட்­சத்தில், இவ்­வாண்டு நிகழ்ந்த தாக்­கு­தல்­க­ளுடன் 2005ஆம் ஆண்டு பாரிஸ் புற­நகர்ப் பகு­தியில் நிகழ்ந்த கல­வ­ரத்­தையும் மறந்து விட முடி­யாது.

பிரான்­ஸிற்கு புலம் பெயர்ந்த முஸ்­லிம்­களின் இரண்டாம் தலை­மு­றையச் சேர்ந்த இளை­ஞர்­களும், பிரெஞ்சுப் பொலி­ஸா ருக்கும் இடை­யி­லான கல­வரம் பாரிஸ் நகரைக் கொழுந்து விட்­டெ­ரியச் செய்­தது.

இந்த சம்­பவம், பாரிஸ் நக­ரி­லுள்ள புலம்­பெயர் சிறு­பான்மை சமூ­கத்­த­வர்கள் மீது தீவிர வல­து­சா­ரிகள் கொண்­டி­ருந்த காழ்ப்­பு­ணர்ச்­சியை கிளர்ந்­தெழச் செய்­தது. சார்ளி ஹெப்டோ தாக்­குதல் அதனை தீவி­ரப்­ப­டுத்­தி­யது. இந்தத் தாக்­கு­தலைத் தொடர்ந்து, இஸ்­லா­மிய கடும்­போக்குக் குழுக்கள் நாச­காரச் செயல்­களில் ஈடு­படக் கூடு­மென புல­னாய்வு அமைப்­புக்கள் எச்­ச­ரித்­தி­ருந்­தன. எனினும், இந்­த­ளவு மோச­மான தாக்­கு­தலை எவரும் எதிர்­பார்த்­தி­ருக்க மாட்­டார்கள்.

பிரெஞ்சுப் படைகள் வெளி­நா­டு­களில் ஜிஹாத் குழுக்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்கும் இரா­ணுவ நட­வ­டிக்கை புதி­யது அல்ல. ஆபி­ரிக்­காவின் வட பிராந்­தியம் தொடங்கி, அரே­பிய வளை­குடா வரை­யி­லான பிராந்­தி­யங்­களில் பிரெஞ்சுப் படைகள் உள்­ளன.

2013ஆம் ஆண்டு மாலியை மைய­மாகக் கொண்டு பிரெஞ்சு விமா­னங்கள் வான்­வழித் தாக்­கு­தல்­களை நடத்தி வந்­தன. இந்தத் தாக்­கு­தல்­களில் இஸ்­லா­மிய அமைப்­புக்­களைச் சேர்ந்த பலர் பலி­யா­கி­யி­ருந்­தார்கள்.

ஈ­ராக்கில் இஸ்­லா­மிய இராச்­சிய இயக்­கத்­திற்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் இரா­ணுவ நட­வ­டிக்­கை­யிலும் கடந்­தாண்டு பிரெஞ்சுப் படைகள் இணைந்­தன. இவ்­வாண்டு சிரி­யாவில் நடத்­தப்­படும் தாக்­கு­தல்­க­ளிலும் பிரான்ஸ் இணைந்து கொண்­டது.

இஸ்­லா­மிய இராச்­சிய இயக்கம் இலக்கு வைக்கும் ஐரோப்­பிய நாடு­களில் பிரான்ஸும் ஒன்­றாகும். இந்த இயக்­கத்­துடன் இணைந்து போரி­டு­வ­தற்­காக பிரான்ஸைச் சேர்ந்த பலரும் சிரி­யா­விற்கு சென்­றி­ருக்­கி­றார்கள்.

ஐ.எஸ். உடன் இணைந்து கொண்­ட­வர்­களில் பிரான்ஸில் பிறந்­த­வர்கள் மாத்­தி­ர­மன்றி, அங்கு கல்வி கற்­ற­வர்­களும் உள்­ளனர். இஸ்­லாத்தைத் தழு­வி­ய­வர்­களும் இருப்­ப­தாக புல­னாய்வு அமைப்­புகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

இணை­யத்தைப் பயன்­ப­டுத்தி பிரெஞ்சு முஸ்­லிம்கள் மத்­தியில் கடும்­போக்­கு­வா­தத்தை தூண்டும் தந்­தி­ரோ­பா­யங்­க­ளையும் காணலாம். முன்­னைய வன்­மு­றை­களில் சம்­பந்­தப்­பட்ட சில இளை­ஞர்கள், இத்­த­கைய கடும்­போக்­கு­ம­ய­வாத வலையில் சிக்­கி­ய­வர்கள் தான்.

ஒரு புறத்தில் இஸ்­லா­மிய கடும்­போக்­கு­வா­தி­களின் ஊடு­ருவல். மறு­பு­றத்தில் வரும் தீவிர வல­து­சா­ரி­களின் செல்­வாக்கு. இவை­யி­ரண்டும் எதி­ரெதிர்த் திசையில் வேக­மாக வளர்ந்து வரு­வதால் இன்று பிரெஞ்சு சமூகம் பாது­காப்­பற்­ற­தாக மாறி­யி­ருக்­கி­றது.

வல­து­சா­ரி­களின் அர­சியல் ஆதிக்­கத்தில் தாம் உரி­மை­களை இழக்க நேரிடும் என பிரான்சில் வாழும் சிறு­பான்மை முஸ்லிம் சமூ­கத்­த­வர்கள் கரு­து­கி­றார்கள். தாம் பார­பட்­ச­மாக நடத்­தப்­ப­டு­வ­தா­கவும் அவர்கள் எண்­ணு­கி­றார்கள். மறு­பு­றத்தில், இன்று பிரான்ஸின் சகல பிரச்­சி­னை­க­ளுக்கும் இஸ்­லா­மிய குடி­யே­றி­களின் ஆதிக்கம் தான் கார­ண­மென வல­து­சா­ரிகள் பிர­சாரம் செய்து வரு­கி­றார்கள். இஸ்­லா­மிய சமூ­கத்தால் பிரான்ஸ் பாது­காப்­பற்­ற­தாக மாறி­யி­ருக்­கி­றது என அவர்கள் கூறு­கி­றார்கள்.

சார்ளி ஹெப்டோ தாக்­கு­தலைத் தொடர்ந்து பாட­சா­லைகள், ரயில் நிலை­யங்கள் முத­லான பொது இடங்­க­ளிலும் இரா­ணுவ வீரர்கள் குவிக்­கப்­பட்­டார்­க­ளாயின், அதற்குக் காரணம் கடும்­போக்கு சக்­திகள் குறித்த அச்சம் தான்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற தாக்­கு­தல்கள் நன்­றாகத் திட்­ட­மி­டப்­பட்­டவை எனத் தெரி­கி­றது. இந்தத் தாக்­கு­தல்கள் ஒரே நேரத்தில் நடத்­தப்­பட்­டன என்­பதைக் கவ­னிக்­கலாம். தெரிவு செய்­யப்­பட்ட இலக்­கு­க­ளையும் அவ­தா­னிப்­பது அவ­சி­ய­மா­கி­றது.

காற்­பந்­தாட்ட மைதான தாக்­கு­தலை உதா­ர­ண­மாகக் கூறலாம். இதற்கு அருகில் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்ட சமயம், ஜனா­தி­பதி பிரான்­சுவா ஹொல்­லந்தே மைதா­னத்தின் பார்­வை­யாளர் அரங்கில் இருந்­தி­ருக்­கிறார்.

தமது தாக்­கு­தல்கள் பிரெஞ்சு மக்­களை பீதியில் உறையச் செய்து, அவர்­களை இஸ்­லா­மிய சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக கிளெர்ந்­தெழ நிர்ப்­பந்­திப்­பது தாக்­கு­தலை நடத்­தி­ய­வர்­களின் நோக்­க­மாக இருந்­தி­ருக்­கலாம்.

பிரெஞ்சு சமூ­கத்தில் தாம் ஓரங்­கட்­டப்­ப­டு­கிறோம் என்ற உணர்­வலை தோன்றும் சம­யத்தில், இங்கு வாழும் இஸ்­லா­மி­யர்­களை இல­கு­வாக தமது வலைக்குள் சிக்க வைத்து விடலாம் என்­பதை கடும்­போக்குக் குழுக்கள் நன்­க­றியும். இதன்­மூலம் பிரான்ஸில் வாழும் இஸ்­லா­மி­யர்­களை பிரெஞ்சு அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இறங்கச் செய்யலாம். இவர்களைக் கூடுதலாக சிரியாவிற்குள் கவர்ந்திழுக்கவும் முடியும் என்பதை கடும்போக்கு குழுக்கள் அறிந்து வைத்துள்ளன.

தற்போதைய தருணத்தில் பிரெஞ்சு சமூகத்தின் கட்டுக்கோப்பான தன்மையைப் பாதுகாக்க வேண்டுமானால், பிரான்ஸின் அரசியல்வாதிகள் இரண்டு விடயங்களை செய்வது அவசியமாகிறது.

வெள்ளிக்கிழமை தாக்குதலால் பிரெஞ்சு சமூகத்தில் விளைந்த ஆவேச உணர்வலைகள் இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு எதிராக திரும்பி விடாமல் பாதுகாப்பது முதலாவது தேவையாகும்.

இந்தத் தாக்குதலை நடத்திய சக்திகளின் நோக்கம், பிரெஞ்சு சமூகத்தை சீர்குலைத்து, அதன் மூலம் அரசியல் இலாபம் பெறுவது தான் என்பதை முறையான விதத்தில் நாட்டு மக்கள் மத்தியில் விளக்கிக் கூறுவது இரண்டாவது விடயமாகும்.

சதீஸ் கிருஷ்ணபிள்ளை
 வீரகேசரி
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக