அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

"நமது எம்ஜிஆரையே" ஹேக் செய்து விட்டனர்.. சிம்பு எம்மாத்திரம்... டி.ராஜேந்தர்

சென்னை:சிம்புவின் கூடா நட்பே பிரச்சினைகளுக்குக் காரணம், நமது எம்ஜிஆர் பத்திரிகையையே ஹேக் செய்து விட்டனர். எனவே சிம்புவின் பாடலை ஹேக் செய்வது கடினமே இல்லை என்று அவரது தந்தையும், இயக்குநர் - நடிகருமான டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.



பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தன்னிலை விளக்கம் ஒன்றை அளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்து வரும் இந்தப் பிரச்சினையில் தனது விளக்கத்தை நடிகர் சிம்பு ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்து இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் இந்தப் பாடலுக்கு விளக்கம் அளித்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இன்று பரபரப்பாக பேசப்படும் பீப் பாடல் விவகாரத்தில் நான் ஒரு தன்னிலை விளக்கத்தை கொடுக்கலாம் என்று இருக்கிறேன். பீப் என்பது மோசமான ஒரு வார்த்தையை மூடி மறைக்கப் பயன்படும் ஒரு ஒலி. ஒரு திரைப்படத்திலோ, ஆல்பத்திலோ வெளியான பாடல் இல்லை. மேலும் இது ஒரு முழுமையான வடிவம் பெற்ற பாடலும் அல்ல.

சிம்பு குரல் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். அவர் இதை ஒரு தொலைக்காட்சியில் சென்று பாடவில்லை, எப்.எம்.ரேடியோவிலோ, மேடைகளிலோ அல்லது தெருவிலோ நின்று பாடவில்லை.

டம்மியாக உருவாக்கப்பட்ட இந்தப் பாடலை வேண்டாம் என்று முடிவு செய்து ஒரு மூலையில் தூக்கிப் போடப்பட்ட இந்த பாடலை யாரோ வேண்டாத விஷக்கிருமிகள் திருடி எடுத்துச் சென்று வெளியிட்டு விட்டார்கள்.

பெண்கள் மத்தியில் சிம்புவிற்கு ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும், அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும். வேண்டும் என்றே யாரோ ஒருவர் அதனை எடுத்துச் சென்று இணையதளத்தில் பதிவேற்றி இருக்கிறார்கள். இதுதான் உண்மை. இதுதான் சத்தியம். கடவுள் மேல் சத்தியம் கொண்டவன் என்ற முறையில் இதனை நான் சொல்கிறேன்.

இந்த செய்தி தெரிந்தவுடன் ஹைதராபாத்தில் இருந்த நான் 13 ம் தேதி காலையில் கமிஷனர் அலுவலகம் சென்று இந்தப் பாடலை லீக் செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தேன். இதற்கிடையில் கோவை போலீசார் மகளிர் அமைப்புகள் கொடுத்த புகாரைப் பெற்று சிம்புவின் மீது வழக்குப்பதிவு செய்தார்கள்.

கோவை போலீசார் அளித்த சம்மனை சிம்பு வீட்டில் இல்லாத காரணத்தால் நான் கையெழுத்து போட்டு பெற்றுக் கொண்டேன். சிம்பு சார்பில் ஒரு வழக்குத் தொடரப்பட்டது. நாங்கள் தொடுத்த வழக்கில் கோவை போலீசார் வருகின்ற 5 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார்.

குற்றம் சுமத்த வேண்டும் என்றே சிம்பு மீது வழக்குத் தொடுக்கிறார்கள். இணையதளத்தில் எவ்வளவோ ஆபாசங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இவற்றை சென்சார் செய்ய முடியுமா? சிம்புவின் கூடா நட்பு தான் இதற்குக் காரணமாக அமைந்து விட்டது.

தமிழ் ஒரு அழகான மொழி. என்னை வாழ வைத்தது தமிழ் மொழி, என்னை வளர வைத்தது தமிழ் மொழி. என்னை ஏற்றி விட்டது தமிழ் சமுதாயம். இதுவரை எந்த ஒரு கிசுகிசுவுக்கும் நான் ஆட்பட்டதில்லை. பெண்களுக்காக படமெடுத்தவன் நான். எல்லா தாய்மார்களும், சகோதரிகளும் வளர்த்து விட்டு வளர்ந்தவன் சிம்பு.

என்னுடைய தமிழ் சமுதாய மக்கள், மூத்த தாய்மார்கள் மனதில் இந்தப் பாடல் நெருடலை ஏற்படுத்துகிறது என்று சொன்னால், நான் அதற்காக வருத்தப்படுகிறேன். மனது உருகுகிறேன். என்னுடைய கண்ணீரால் அந்த களங்கத்தை உங்கள் மனதில் இருந்து துடைக்க விரும்புகிறேன்.

ஆளுங்கட்சியின் நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கையையே விஷக்கிருமிகள் ஹேக் செய்து விட்டனர். அப்படியிருக்கும் போது எனது மகன் சிலம்பரசனின் பாடலை வெளியிட முடியாதா?

எனது பையன் சார்பாக நான் விளக்கம் அளித்து இருக்கிறேன். என்னுடைய பையன் படம் வரக் கூடாது, நடிகைகள் அவனுக்கு கால்ஷீட் தரக் கூடாது என்று திட்டமிட்டே ஒரு கும்பல் வேலை செய்து வருகின்றனர். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது இணையத்தில் வந்த பாடலை எடுத்து வேண்டும் என்றே பிரச்சினை செய்து வருகின்றனர். சிலம்பரசனை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் வேலை செய்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் எனது நன்றிகள். வெள்ளம் சூழ்ந்து எது வேண்டுமானாலும் உடையலாம் ஆனால் என் மனசு என்றுமே உடையாது நன்றி". என்று தனது விளக்கத்தை டி.ராஜேந்தர் பதிவு செய்திருக்கிறார்.

Thatstamil

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக