அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 11 மே, 2016

'அடுத்த பிரசாரம் எங்கய்யா?' - ஸ்டாலினை கலாய்த்த கருணாநிதி!

போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் வென்றவர் என்ற பெருமைக்குரியவர் திமுக தலைவர் கருணாநிதி. அந்த வகையில் அத்தனை தேர்தல்களிலும் பம்பரமாய் சுழன்று, பிரசார களத்தை சூடாக்கியவர் அவர்.

வயது, உடல்நிலை காரணமாக கடந்த 2 தேர்தல்களில் தனது பிரசார பணியில் கொஞ்சம் சுணக்கம் காட்டினார் அவர். ஆனால் ஆச்சர்யம், அந்த தேர்தல்களையெல்லாம் கடந்து இப்போது 2016 தேர்தலில், முன்னெப்போதையும் விட உற்சாகமாக பிரசாரம் மேற்கொண்டுவருகிறார் கருணாநிதி.



வயது, உடல் நிலையை மீறி இந்த முறை அவரை உற்சாகமாக பிரசார களத்திற்கு கொண்டுவந்திருப்பது ஒரு வேன் என்றால், நம்பித்தான் ஆகவேண்டும். சைதாப்பேட்டையில் துவங்கிய அவரின் முதல் பிரசார பயணத்திலிருந்து, இன்னும் வட்டமடிக்க இருக்கிற அந்த வேனைப்பற்றி கருணாநிதி நிமிடத்துக்கு நிமிடம் சிலாகித்துப் பேசுகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இத்தனை வருட பிரசாரத்தில் கருணாநிதி, தான் பயணம் செய்த வாகனத்தை பற்றி சிலாகித்தது இதுதான் முதன்முறையாம். கடந்த காலத்தில், பிரசாரத்திற்கு பயன்படுத்திய வாகனங்களில் இருந்த சின்னஞ்சிறு பிரச்னைகள் கூட இந்த வாகனத்தில் இல்லாததது கருணாநிதியை உற்சாகத்தில் தள்ளியுள்ளது.

மாநில அளவில் மட்டுமின்றி, உலகளவிலான செய்திகளும் தன்னைக் கடந்து சென்றுவிடாதபடி உன்னிப்பாக கவனிக்கும் சுபாவமுடையவர் கருணாநிதி. அந்த வகையில் இந்த பிரசார வாகனத்தில் அவருக்காகவென்றே, பிரத்யேக சேட்டிலைட் டிஷ் ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் விலை 9 லட்சம் என்று சொல்கிறார்கள் உடன்பிறப்புக்கள். பிரத்யேகமாக 4 மாதங்களுக்கு முன்பே ஆர்டர் கொடுக்கப்பட்டு, டெல்லியிலிருந்து தனி விமானத்தில் வரவழைக்கப்பட்டது அந்த டிஷ் என்று காதை கடிக்கிறார்கள் அவர்கள்.



இதுகுறித்து விபரமறிந்த ஒருவரிடம் பேசியபோது, " வழக்கமாக கருணாநிதி பிரசாரத்திற்கு வேனைப் பயன்படுத்துவதைதான் விரும்புவார். 57 களிலிருந்து தேர்தல்களம் காணும் அவர், வழக்கமான தேர்தல் பிரசாரத்திற்கு டெம்போ டிராவல் வாகனங்களைத்தான் பயன்படுத்திவந்தார்.

கருணாநிதிக்காக சில சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்படும் இந்த வேன், கடந்த காலங்களில் தேர்தல் முடிந்தபின் பல உடல் உபாதைகளை அவருக்கு தந்துவிடும். சிகிச்சை பெறும் அளவுக்கு சமயங்களில் நிலைமை சென்றதுண்டு. இருப்பினும் தேர்தல் களத்தில் அதை பொருட்படுத்தாமல் சுழன்றுவருவார் கருணாநிதி.



93 வயதில், வயதும் உடலும் பிரசாரத்திற்கு ஒத்துழைக்காத இந்த தருணத்தில், தேர்தல் பிரசாரத்தை சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே செய்வதாக இம்முறை தன் குடும்பத்தினரிடம் சொல்லி வைத்திருந்தார்.

ஆனால் கட்சி சற்று தடுமாற்றமாக உள்ள இந்த நேரத்தில், கருணாநிதியின் பிரசார இடங்கள் குறைந்தால் அது வெற்றியை பாதிக்கலாம் என அவருக்கு நெருக்கமான பலரும் அவரிடம் கருத்து தெரிவித்தனர். கருணாநிதியும் அதை ஏற்றுக்கொண்டாராம். கருணாநிதியின் உடல்நிலை மற்றும் வயதுக்கு சிரமம் தராத வகையில் பிரசார பயணம் திட்டமிடப்பட்டது. பயணத்திட்டத்தின் ஒரு அங்கமாக, அப்போது உதித்ததுதான் கருணாநிதிக்கென பிரத்யேக பிரசார வாகனத்தை தயாரிக்கும் திட்டம். இது முழுக்க முழுக்க ஸ்டாலினின் யோசனை.

கோவையில் வி.ஐ.பிக்களின் பிரசார வாகனத்தை தயார் செய்யும் ஒருநிறுவனத்திடம்தான் இந்த பொறுப்பை ஒப்படைத்தார் ஸ்டாலின். ஆனால் வடிவமைப்பை மட்டும் அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்த ஸ்டாலின், மற்ற விஷயங்களை தானே நேரடியாக கவனித்துக்கொண்டார் என்கிறார்கள். கருணாநிதி அமரும் இடம் முதற்கொண்டு, அதில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் என ஒவ்வொன்றையும் ஸ்டாலினே முடிவுசெய்தார்.



வழக்கமாக அவர் பயன்படுத்திய வாகனங்கள் போலல்லாமல், இதில் கருணாநிதி மிக நெருக்கமாக மக்களை பார்க்க வசதியாக பெரிய கண்ணாடியும், மக்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ள நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. நீள அகலவாக்கில் பெரிய கண்ணாடி என்பதால், மக்கள் எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் கருணாநிதியின் முகம் பளிச்சென தெரியும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மக்களை, தான் பார்க்கும் வசதியை விட மக்கள் எந்த திசையிலிருந்தாலும் தன் முகத்தை பார்க்கிறபடி அமைக்கப்பட்ட வசதி கருணாநிதியை இம்ப்ரஸ் செய்ததாம்.

வேனில் கருணாநிதியை ஈர்த்த இன்னொரு விஷயம், மெகா சேட்டிலைட் டிஷ். இதுவும் கருணாநிதியை உற்சாகப்படுத்திய விஷயம்“ என்றார்கள் அவர்கள்.

வேன் கோவையிலிருந்து வந்த மறுதினம், அதில் ஒத்திகைப்பயணம் செய்தார் கருணாநிதி. அதற்கு முன்தினம் ஸ்டாலின் பதற்றமாகவே காணப்பட்டாராம். 'தலைவர் என்ன சொல்லப்போகிறாரோ...?' என தனது நெருங்கிய வட்டாரத்திடம் பதற்றமாக கூறியபடி இருந்தாராம். நீலாங்கரை வரை ஒத்திகைப்பயணம் செய்த கருணாநிதி, ஆரம்பத்திலேயே இம்ப்ரஸ் ஆனாராம். பயணம் முடிந்து வீடு திரும்பிய கருணாநிதி ஸ்டாலினை அழைத்து முத்தம் கொடுத்தார் என்கிறார்கள்.



பிரசார பயணத்திட்டப்படி முதற்கட்டமாக சென்னை சைதாப்பேட்டையில் பிரசாரம் துவக்கிய கருணாநிதி, அங்கிருந்து புதுச்சேரி கடலுார் சிதம்பரம் சீர்காழி என பயணப்பட்டு, தான் போட்டியிடும் திருவாரூர் வந்துசேர்ந்தார். வழக்கத்துக்கு மாறாக அந்த பயணத்தில் களைப்பின்றி இருந்தாராம். இது குடும்ப உறவுகளை மகிழ்ச்சியில் தள்ளியது. அந்த ஆறு நாள் பயணத்தில் அவரது உற்சாகம் குறையவில்லை என்கிறார்கள். காரணம் அந்தவேன் என்கிறார்கள். இரண்டாம் கட்டமாகவும் சென்னையில் 2 நாட்கள் என 8 நாட்கள் வேறு எந்த வாகனத்தையும் விரும்பாமல் அதையே தயார் செய்யச்சொன்னாராம் ஆர்வமாக. மதுரை பயணத்தில்கூட, விமானத்தில் ஏறும் முன், 'வண்டி வந்திடுமாய்யா...?' என கேட்டுக்கொண்டாராம்.

இந்த வயதில் தனக்கு வசதியான ஒரு வேனை ஏற்பாடு செய்து, தனது பிரசாரத்தை எளிதாக்கிய ஸ்டாலினை, குளிர்விப்பதற்காகத்தான் சென்னை தங்கசாலை பொதுக் கூட்டத்தில், அவரை கருணாநிதி வானளாவப் புகழ்ந்தார் என்கிறார்கள். முத்தாய்ப்பாக, 'ஸ்டாலின் என் மகனாக பிறந்தது நான் செய்த தவ புண்ணியம்' என்று தன் பகுத்தறிவு கொள்கையிலிருந்தே நழுவி பேசினார்.

கூட்டணி தொடர்பான விவகாரத்தில் கடந்த சில வாரங்களாக ஸ்டாலின் மீது வருத்தத்தில் இருந்த கருணாநிதி, “ஸ்டாலின் தனக்காக அதிகம் கஷ்டப்படுகிறார் என பாராட்டுப்பத்திரம் வாசித்து அவரை குளிரவைத்ததன் பின்னணி வேன்" என்கிறார்கள்.



“வழக்கமாக சென்னையில் சென்று வர தலைவர் பயன்படுத்துகிற டெயோட்டா ஆல்பேர்ட் வாகனம்தான் அதிநவீன வசதி கொண்டது. மற்ற இடங்களுக்கு செல்லும்போது பயன்படுத்துகிற வாகனத்தில், கருணாநிதி தன் சக்கரநாற்காலியிலிருந்து ஏறி இறங்க பெரிதும் சிரமப்படுவார். வேனில் ஏற முயலும் அந்த 5 முதல் 10 நிமிடங்கள் பதற்றமாய் இருக்கும். அந்த வாகனத்தில் ஏற தன் சக்கர நாற்காலியிலிருந்து இறங்கி வேறு சேருக்கு மாறி, அங்கிருந்து வேனுக்குள் இருக்கும் இருக்கையில் அமரவேண்டியதிருக்கும். ஆனால் இந்தவாகனத்தில் அந்த சிரமம் துளியும் இல்லாததே கருணாநிதியை குஷிப்படுத்தியதாம்.

அதாவது வழக்கமான சக்கர நாற்காலியில் இருந்தபடியே நேரடியாக வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் துாக்கியின் மூலம் வாகனத்திற்குள் சென்று, அங்கு குறிப்பிட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருக்கிற அமைப்பில் பொருந்துகிற மாதிரி இந்த பிரசார வாகனம் தயார்செய்யப்பட்டிருக்கிறது. 6 பேர் அமரக்கூடிய இந்த வாகனத்தில் பெரிய அறைபோன்று விசாலமான இடம் இருப்பினும், ஓய்வு நேரத்தில் படுத்துறங்க வசதியாக தனிமைப்படுத்திக்கொள்ளலாம். இதுவரை அவர் பயன்படுத்திய வாகனங்களில் இல்லாத சஸ்பென்ஷன் வசதி இதில் கூடுதல் அம்சம். எத்தனை மேடு பள்ளங்களை கடந்தாலும் உள்ளே பயணிப்பவர்களுக்கு அது தெரியாது. இதுபோதாதா கருணாநிதியை குஷிப்படுத்த?. எந்நேரமும் வேனைப்பற்றி பேசுகிறார்” என்கிறார் அவரது நெருங்கிய சகாக்கள்.

“இந்த முறை உடலை காரணம் காட்டி பிரசாரத்தை குறைச்சிக்கிடலாம்னு நினைச்சேன். ஸ்டாலின் அதுக்கு வேட்டு வெச்சிட்டாப்ல...இப்படி ஒரு வேனை தயாரிச்சு கொடுத்து எனக்கு இன்னமும் அதிக இடங்கள் பிரசாரம் போகணும்ங்கற எண்ணத்தை ஏற்படுத்திட்டாப்ல”...என்று பெருமையுடனும் நக்கலாகவும் தன் நண்பர் ஒருவரிடம் சொல்லி சிரித்தாராம் கருணாநிதி.

தனது மூன்றாவது கட்ட பிரசாரமான நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கிவிருக்கிற பிரசார ஷெட் யுலை பார்த்துவிட்டு ஸ்டாலினிடம், 'இவ்வளவுதானா...அடுத்த பிரசாரம் எங்கன்னு சொல்லிடுய்யா... நான் தயாராதான் இருக்கேன்' என கிண்டலாக கேட்டு சிரிக்கவைத்தாராம்.

இத்தனை வசதிகொண்ட இந்த பிரத்யேக வாகனம் தயாரிக்க ஆன செலவு என்ன என்று கேட்கறீங்களா...அது நமக்கு ஏன் பாஸ், அதை தேர்தல் கமிஷன் பார்த்துக்கொள்ளும்!

- எஸ்.கிருபாகரன்
vikatan
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக