அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 9 ஜனவரி, 2017

உயிர் காக்கவேண்டிய உத்தமர்களே!..

 பாதிக்கப்பட்ட பிள்ளையின் நிழல்ப்படம்

யாழ்ப்பாணத்தில் வைத்தியத்துறையும் வியாபார நிறுவனமா?..

சுகாதாரம், மருத்துவம், வைத்தியம் என்று சொல்லும் பொழுது மனிதனின்
நீண்டகால வாழ்வின் மகத்துவத்திற்காகவே என்பது சிறப்பான விடையமாகும்.


பல நூறு ஆண்டுகளுக்கு முன் மனிதன் எப்படிச் சுகதேகியாக வாழ்ந்தான்
என்பது அதிசயத்தக்க விடையமாகும். மனிதனுக்கு மனிதன் தனக்குத்தெரிந்த
கை வைத்தியங்களைப்பார்த்தான். இலை, குழை, செடி, கொடி, வேர், விதை,
பழம், காய், மரப்பட்டை போன்ற இயற்கை மூலிகைகளே அன்றைய மனிதனின்மருத்துவத்திற்குப் பெரிதும் பயன்பட்டன. அதனால் நோய் நொடி இல்லாமல் இயற்கையோடு ஒன்றியே அன்றைய மனிதனின் வாழ்வு நகர்ந்தது.

காலப்போக்கில் நாகரீகம், கல்வி, விஞ்ஞானம், ஆராய்ச்சி, அறிவியல்,
பொருளாதாரத் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து
வளர்ச்சிபெற்ற மனிதனின் ஆயுட்காலமும் வளர்ச்சி கண்டது. ஆரோக்கியமான சுக வாழ்வும் பெருகியன என்றே கூறலாம். அந்த வகையில் உயிர்காக்கும் வைத்தியத்துறை என்பது பெருவளர்ச்சி கண்டாலும் ஆங்காங்கே சிறு..சிறு கேடுகளும் நடைபெற்றுவருவது வழக்கமாகியது.

உலகில் கண்கண்ட தெய்வமாக, முதல்வியாக, படைப்பின் மூலமானவளாக,
உதிரம் கொட்டி, உயிர் தந்து, உலகைக்காட்டி வாழ வைத்தவள் நம்மைப்
பெற்றெடுத்த தாய் என்னும் கோயிலாவள். இவளுக்குப் பின்புதான் மற்றவர்கள்.

அதுவும் எம்மைப் பெற்றெடுக்க அருந்தொண்டாற்றும் வைத்தியர்களே நமது
இரண்டாவது தெய்வங்கள். முன்னைய காலங்களில் ஊர், கிராம
மருத்துவிச்சிகளும் இந்தப் பணிகளைச் செய்தபடியால் அவர்களும் இந்த
இரண்டாவது தெய்வங்களில் அடங்குவர். இவர்களும் போற்றப்பட வேண்டியவர்களே. இவர்களுக்குப் பின்புதான் ஆசான், குரு, வழிகாட்டி, உறவுகள், நட்புக்கள் எனக் கணிக்கப்படுகிறார்கள்.

இங்கு இக்கட்டுரையில் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழும் ஓர் ஆசிரியை தாய்நாட்டின் மக்கள்படும் துயர்களைப் போக்க பல ஆண்டுகளாகப் பணம், பொருள், வேறு உதவிகள் எனச் செய்துவருகிறார். வருடாவருடம் நாட்டுக்குச் சென்று நேரடியாகப் பல மனிதாபிபமான உதவிகளைச் செய்துவருகின்றார். இவர் குடும்பத்தாரின் இந்த மனித நேய உதவிகளை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

இப்படியாகத்தான் முடிந்த வருடத்தின் இறுதியில் தாயகம் சென்றபொழுது முன்பின் தெரியாத ஒரு வறிய குடும்பத்தின் பிள்ளை ஒன்றின் கண் சத்திர
சிகிச்சைக்கு உதவியிருக்கினார். இந்தப் பிள்ளைதான் இப்படத்தில்
காணப்படுகிறார். உதவி என்பது அதாவது தனது சொந்தப் பணத்தைக் கொடுத்து உதவியுள்ளார். ஆனால் இந்தப் பணம் எப்படிப் பயன்பட்டது என்பதை அவர் விபரிக்கையில்.....

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தோம்.
தெரிந்தவர் ஒருவர் எமது பயணத்துக்கான தனியார் வாகனம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார். அந்த வாகனத்தில் வரும்போது அவருடன் அவரது
வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் பற்றியும் நாட்டுநிலமைகள் பற்றியும்
உரையாடியபடி பயணித்தோம்.

நாம் வெளிநாட்டில் இருந்து வந்ததைப்பற்றியும் வவுனியாவில் நாம் செய்த பணிகள் பற்றியும் அளவளாவிக்கொண்டோம். அப்பொழுது அந்த வாகன ஓட்டுனர் எம்மை பார்த்து "உங்களைப்போல் இரக்க சிந்தையுள்ள சிலரே இப்படியான கைங்கரியங்களைச் செய்கின்றனர்” சிலர் அங்கிருந்து கொண்டுவந்த பணத்தை ஆடம்பரமாகச் செலவுசெய்து இங்குள்ள ஏழை மக்களுக்கு தங்கள் பகட்டை காட்டிவிட்டுச் செல்கின்றனர்." என்று கூறினார். அன்றாட உழைப்பில் கஷ்டப்பட்டுவாழும் குடும்பங்கள் பலவற்றைப் பார்த்து, தான் வேதனைப்படுவதாகவும் அதனால் தன் உழைப்பில் சிறிது
பணத்தை தான் சேமித்து பக்கத்தில் உள்ள ஒரு வறிய குடும்பத்துக்கு
உதவுவதாகவும் கூறினார்.

அந்த ஓட்டுனருடைய வருமானத்தைக் கேட்டபோது அதிர்ச்சியடைந்தேன்.
ஆனாலும் அவர் மனிதநேயத்தை மனதாரப்போற்றினேன். அவர் எம்மிடம் அந்த குடும்பத்தின் வறுமை நிலை பற்றிக் கூறினார். மூன்று வயதிலிருந்து பதினைந்து வயதிற்குள் ஐந்து பிள்ளைகள் . நன்றாக வாழ்ந்த குடும்பம் இடப்பெயர்வுகளின் பின் எல்லாம் இழந்து மிகவும் கஷ்டப்படுவதாக கூறினார். தாய் தந்தை பற்றி விசாரித்தபோது தந்தை தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தவர் ஆயினும் தொழில் வாய்ப்பு கிடைக்காதமையால் நாள் கூலி வேலையே செய்துகொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார். இன்றைய நிலையில் பிள்ளைகள் சாப்பாட்டுக்கு வழியின்றி வருந்துவதாக குறிப்பிட்டார்.

அந்தக் குடும்பத்தை சென்று பார்த்த போது வறுமையின் உச்சம் தெரிந்தது.
நான்கு அரை சுவர்கள் மட்டுமே நின்று வீடு என்பதை அறிவித்தது. பாடசாலை
சீருடையை இருவர் மாறி மாறி பாவிப்பதும் விளையாட்டுப் பாடத்திற்குரிய
சப்பாத்தை மாறி அணிவதாகவும் அதனால் பாடசாலைக்கு ஒழுங்காக போக
முடிவதில்லை என்பதை அறிந்த போது மிக மன வருத்தமாக இருந்தது.

அவர்கள் கல்விக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்ததுடன்
உணவுக்கான ஓழுங்குகளையும் செய்து கொடுத்தோம். அப்போது தான்
இரண்டாவது பெண்பிள்ளையின் கண்களில் நீர் வடிவதை கவனித்தோம்
.அவர்களிடம் விசாரித்தபோது "சிறுபிள்ளையாக இருந்த போது கண்ணில்
ஈர்க்கு குத்தியதால் அந்தக்கண்ணில் பார்வை இல்லை" என்று கூறினார்கள்.

யாழ்பாண வைத்தியசாலையில் காட்டியபோது ஒரு இலட்சம் ரூபாவுக்கு லென்ஸ் வைக்கவேண்டுமாம் அதனால் கைவிட்டுவிட்டோம் என்று கூறினார்கள். அப்பிள்ளையை வேறு வைத்தியரிடம் காட்டினோம். 15 ஆயிரத்துக்கு லென்ஸ் போடலாம் என்று கூறினார். அதற்கான பணத்தைக் கட்டிவிட்டு ஜேர்மனிக்கு வந்துவிட்டோம்.

ஒவ்வொரு முறையும் வைத்தியசாலையில் அனுமதிப்பதும்
வீட்டுக்கு அனுப்புவதுமாக நாட்கள் நகர்ந்தன. அதிலும் கடைசித்தடவை
வைத்தியர் கூறியுள்ளார். மறுமுறை வரும்போது இரண்டு லென்ஸ்
வாங்கிவரும்படி அதில் எது பொருந்துகிறதோ அதனை வைத்துவிட்டு
மற்றையதை திரும்பக் கொடுப்பதாக. மற்றைய லென்ஸ்க்கும் கண்மருந்துக்கும் மீண்டும் 20 ஆயிரம் அனுப்பிவைத்தோம் ஒருவாறு இரண்டு லென்ஸ்களுடனும் 2016 மார்கழி மாதம் 20 ம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சத்திரசிகிச்சையும் நல்லபடி நடந்தேறியது. ஒரு லென்ஸ் திருப்பியும் கொடுக்கப்பட்டது.

திருப்பிக் கொடுக்கப்பட்ட லென்ஸை கடையில் கொண்டுபோய் கொடுத்த போது அதற்கு பணம் திருப்பத் தரமுடியாது என்று கையை விரித்தனராம். இதில் ஒரு உண்மை என்னவென்றால் லென்ஸ் விற்கப்படுவதும் அதே கண்வைத்தியரின் தனிப்பட்ட வியாபாரஸ்தலமே என்பதும் இங்கு கவனிக்கப்டவேண்டிய விடையமாகும்.

இப்படியாக இன்று எங்கள் நாட்டு வைத்தியத்துறைகூட வியாபார நிறுவனம்
போல் மாறிவருவது வேதனைக்குரிய விடையமாகும். 35.000-00 ரூபாவை
அன்பளிப்பாகக் கொடுத்து பிள்ளைக்குக் கண் பார்வை வந்தது அவர்களுக்கு
ஆறுதலாக இருந்தாலும் சில வைத்தியர்களின் பணம் பண்ணும் இச்செயலை
எப்படிச் சொல்வது.

சில வைத்தியர்களுக்கு இப்படி ஏமாற்றிப் பிழைப்பதும் ஒரு
தொழிலாக மாற்றம் கண்டிருப்பது நிஜமாகும். இப்படிப்பட்டவர்களை
எண்ணும்போது கவலையாகத்தான் இருக்கின்றது.சில வைத்தியர்கள் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் வேலை செய்து சம்பளம் பெறுகிறார்கள். பின்னர் தனியார் வைத்தியசாலைகளையும் நடாத்திப் பணம் சம்பாதிக்கிறார்கள். இதுவும் போதாதென்று மருந்து, மருத்துவப் பொருட்கள், மருத்துவ உபகரணங்களை விற்றும் பணத்தை குவித்துச் சம்பாதிக்கிறார்கள்.

இதற்கும் மேலாக அது...இது...என்றும் சொல்லி மக்களிடம் பணத்தை
கொள்ளையடிக்கிறார்கள். இதில் பாவப்பட்டவர்கள் எழை மக்கள்தான் என்பதைஇவர்கள் ஏன் புரிந்துகொள்கிறார்கள் இல்லை...சில வைத்தியர்களின் இந்த ஈனச்செயலை எப்படிக்கூறுவது. காசு, பணம், சொத்தை எப்படியாவது சேர்த்துக் குவித்து இன்பம் காண்பதில் இன்று நம்நாட்டின் சில வைத்தியர்கள்
முன்னிலையில் நிற்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

உண்மையில் வைத்தியர்கள் எனப்படுபவர்கள் கடவுளுக்கு முதற்படியானவர்கள் என்று நம் சமூகம் போற்றுவது வழக்கமாகும். உயிரைக் காப்பாற்றும் கடவுள்கள் என்று போற்றப்படுகிறார்கள். அப்படிப்பட்ட வைத்தியர்களில் சிலர் மனச்சாட்சியை விற்றுப் பணம் சம்பாதிப்பது எந்தவகையில் நியாயம்.

ஒரு சில வைத்தியர்கள் செய்யும் இந்த மனிதாபிமானமற்ற செயற்பாடுகளால் ஒட்டுமொத்த வைத்தியர்களுக்கும் இந்த அவமானப் பெயர் எடுப்பதும் எதற்கு?..நேர்மையாகவும் கடமை உணர்வோடும் உயிர்காக்கும் உத்தம வைத்தியர்கள் உண்மையில் நமது தெய்வங்கள்தான் இவர்களைப் எப்போதும் போற்றுவோம்.

தவறுசெய்யும் வைத்தியர்களே ஒரு தடவை சிந்தியுங்கள். நாட்டில் நீடித்து
முடிந்த இனப்போரால் பல்லாயிரம் நம் மக்கள் கை, கால், கண் போன்ற
அவையங்களை இழந்து மறுவாழ்வு வாழமுடியாமல் வாழ்வா?
சாவா?..எனப்போராடி வாழ்கையில் இப்படிப்பட்ட வைத்தியர்களின்
செயற்பாடுகளை அவர்கள் வழிபடும். எந்தக் கடவுள்களும்
ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

எனவே படித்துப் பட்டம்பெற்று பெரும் சம்பளம் பெற்று வைத்தியதுறையில் கடமையாற்றுபவர்களே அவையங்களை இழந்து பரிதவிக்கும் நம் உறவுகளின் எதிர்கால வாழ்வு ஒளிமயமாக உங்களால் முடிந்த அளவு உதவுங்கள். லஞ்சம், வியாபாரம், ஏமாற்றல் போன்ற காரியங்களில் ஈடுபட்டுப் பாதிக்கப்பட்டவர்களை மேலும் மனதளவிலும் உடலளவிலும் பாதிப்புக்கு உட்படுத்தாதீர்கள். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் உறவுகள் வழங்கும் நற்கருணை உதவிகளை ஊதாசீனம் செய்யாதீர்கள்.

உதவும் பரோப காரியங்களில் ஈடுபடும் புலம்பெயர் உறவுகளின் மனங்களை
வேதனைப்படுத்ததாதீர்கள் எனக்கேட்டுக் கொள்கிறோம்!....

“நல்லவற்றைச் செய்வோம்!.. முடியாவிடின் ஒதுங்கியிருப்போம்“

 V. சிவராசா ஜேர்மனி

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக