அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

காற்றுக்கு ஏது காப்புரிமை?

காப்புரிமை (காப்பி ரைட்) என்ற வியாதி முதன் முதலில் இங்கிலாந்தை ஆண்ட எட்டாவது ஹென்றி காலத்தில்தான் தோன்றியது. இங்கிலாந்தில் உருவாக்கப்படும் இசை ஞானமும் மெட்டமைப்பும் மக்களுக்குப் போவதற்கு முன்பு தனக்கு வந்தாக வேண்டும் என கோரிக்கை வைத்தான், அம்மன்னன். அதற்குரிய காப்புரிமையும் உரிமை ஊதியத்தையும் வழங்கினான்.

ஆனால், அந்த ஆதிக்க உணர்வுக்குச் சட்டவடிவம் தர முன்வந்த மகாராணி முதலாம் எலிசபெத் 1575-ஆம் ஆண்டில் அபூர்வமான இசை வடிவங்களை உருவாக்கிய தாமஸ் டெல்லிஸ் எனும் குருநாதனையும் அவருடைய சீடன் வில்லியம் பைட் (வயது 21) எனும் சீடனையும் அழைத்து, அவர்களுடைய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தம் கொண்டாடும் காப்புரிமையை வழங்கினார்.

அதற்குப் பின்வந்த ஆன் எனும் பட்டத்தரசி, அந்தக் காப்புரிமை 14 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும் எனும் நிபந்தனையை விதித்தாள். அந்தக் காப்புரிமையும் உரிமை ஊதியமும் இன்று வழக்கறிஞரின் வாசலுக்கு வந்துவிட்டன.

கலையும் கலை சார்ந்த கண்டுபிடிப்புகளும் வணிகத்தனம் இல்லாமல் பரிமளிக்கின்றபோதுதான், அவற்றினுடைய பிதாமகர்கள் சாகாவரம் பெற்று நிலைத்து நிற்பர். வாணியருளால் கிடைத்த இசை ஞானத்தை வணிகப்படுத்தினால், அது நாளடைவில் கூனிக்குறுகி காலாவதி ஆகிவிடும்.

மருத்துவ உலகில் பென்சிலின் எனும் மருந்தைக் கண்டுபிடித்தவர், அலெக்சாண்டர் பிளமிங். அம்மருந்தை அவர் கண்டுபிடித்தவுடன், மருந்து உற்பத்தியாளர்கள் அனைவரும் பிளமிங்கைத் தனித்தனியே சந்தித்து, தங்களிடம் மட்டும் அம்மருந்து உருவாக்கத்தைத் தந்தால், இலட்சம் இலட்சமாகத் தருவதாக வாக்களித்தனர். ஆனால், வியாபாரியாக மாறாமல், விஞ்ஞானியாகவே இருக்க ஆசைப்பட்ட அலெக்சாண்டர் பிளமிங், ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் இடத்தையும் சொல்லி, அங்கே வரும்படித் தெரிவித்தார்.

அவர் குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தியாளர்கள் குவிந்து இருந்தனர். ஒவ்வொருவரும் தங்களுக்கு மட்டுமே தெரிவிக்கப் போகிறார் என்று வந்திருந்தனர். நாணயத்தை எண்ணாமல், அறிவியல் ஞானத்தை எண்ணிய பிளமிங் அனைவருக்கும் முன்னர் தம்முடைய கண்டுபிடிப்பை எடுத்துரைத்தார். அதனால், அலெக்சாண்டர் பிளமிங், மருத்துவ உலகில் பேரோடும் புகழோடும் நிலைத்து நிற்கின்றார்.

ஆய கலைகள் அறுபத்து நான்கினுள் இசைக்கலை, கொஞ்சம் வித்தியாசமானது. அது தெய்வாம்சத்தோடு சம்பந்தப்பட்டது. அதனைப் போற்றி போற்றி வளர்த்தால்தான் வளருமே தவிர, பொத்திப் பொத்தி மூடினால் வளராது.

சங்கராபரணம் எனும் இராகத்தைப் பாடுவதில் ஜாம்பவானான சங்கராபரணம் நரசைய்யா எனும் ஒருவர் இருந்தார். அவருக்கு கலைமகளின் கடாட்சம் இருந்ததே தவிர, திருமகளின் கடாட்சம் இல்லை. அவர் வீட்டில் ஒரு மங்கல காரியம் நடக்க வேண்டிய நேரத்தில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால், மூப்பனார் வம்சத்தில் வந்த இராமபத்திர மூப்பனாரிடம் சென்று கடன் கேட்டார்.

அதற்கு அவர் விளையாட்டாக, 'உமக்குக் கடன் தரத்தயார் ஆனால் எந்த அடிப்படையில் உமக்குக் கடன் தருவது? ஈடாக எதை வைக்கப் போகிறாய்' எனக் கேட்டார். அதற்கு நரசைய்யா, தம்முடைய சங்கராபரணம் இராகத்தை அடகு வைப்பதாகவும், கடனை அடைக்கின்ற வரையில் எந்தக் கச்சேரியிலும் அதனைப் பாடுவதில்லை என்றும் வாக்களித்தார்.

ஒருமுறை ஒரு கல்யாணக் கச்சேரிக்கு ஒப்புக்கொண்ட சங்கராபரணம் நரசைய்யா, எல்லா இராகங்களிலும் கீர்த்தனைகளைப் பாடினார். சங்கராபரணத்தை மட்டும் பாடவில்லை. கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சங்கராபரணத்தைப் பாட வேண்டுமென சீட்டுக்கள் அனுப்பினர். அப்படியும் அவர் பாடவில்லை. பின்னர் எழுந்து சிலர் கூக்குரல் எழுப்பினர்.

கல்யாண வீட்டில் கலாட்டாவைத் தவிர்க்க நினைத்த கல்யாணக்காரர், ஒரு பக்கவாத்தியக்காரரைத் தனிமையில் அணுகி, காரணம் கேட்டபொழுது, அது அடகு வைக்கப்பட்டிருக்கும் செய்தியைக் காதோடு காதாக ஓதினார். கல்யாண வீட்டுக்காரர் உடனடியாகத் இராமபத்திர மூப்பனார் இல்லத்திற்கு ஓடி, தொகை முழுவதையும் தந்து சங்கராபரணத்தை மீட்டுத் தரும்படி வேண்டினார்.

அதற்கு அந்தப் பெருந்தகை மூப்பனார், 'ஐயோ நான் விளையாட்டாக அல்லவா சொன்னேன். அதை வினயமாகவா எடுத்துக்கொண்டார் நரசைய்யா' எனச் சொல்லி, கல்யாண வீட்டுக்காரர் கொடுத்த தொகையோடு தாமும் சரிசமமான தொகையை ஒரு முடிப்பில் போட்டு (பொற்கிழி போல) சங்கராபரணம் நரசைய்யாவிடம் ஒப்படைக்கும்படி வேண்டினார்.

கல்யாண வீட்டுக் கச்சேரியும், மீட்கப்பட்ட சங்கராபரணத்தோடு களை கட்டியது. இப்படி இசைவாணர்களாலும், புரவலர்களாலும் போற்றி வளர்க்கப்பட்ட இசைக்கலை, இன்று வழக்கறிஞர்களின் ஓலைகளால் இரத்தம் சொட்டச் சொட்ட நிற்கிறது.

இசைக்கலை ஏகாந்தத்தில் பிறந்தாலும், அது ஒய்யாரமாக வளர்ந்தது, அரண்மனைகளில்தான். செம்மங்குடி சீனிவாசய்யர் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்துவானாக இருந்தார். ஒரு நவராத்திரி விழாவின்போது வயலின் வித்துவான் செம்மங்குடி நாராயணசுவாமி அய்யரை அங்குக் கச்சேரிக்கு அழைத்தார்.

அவையில் முன்னவர்களாக மகாராஜா, மகாராணி, திவான் பகதூர் சர்.சி.பி. போன்றோர் வீற்றிருப்பதைப் பார்த்ததும், நாராயணசுவாமி அய்யர் வெகு உற்சாகத்தோடு காலம் போவது தெரியாமல் உச்சக்கட்டத்தில் ஸ்வரப்பரஸ்தாரம் செய்து கொண்டிருந்தார். கச்சேரியில் கானடா இராகம் தேனாறாகப் பாய்ந்தது. என்றாலும், நேரக்கழிவை நினைத்து, மகாராஜா, மகாராணி, திவான் பகதூர் மூவரும் எழுந்து நின்றனர்.

திகைத்துப் போன செம்மங்குடி சீனிவாசய்யர், சைகை காட்டி கச்சேரியை முடிக்கும்படி கூறினார். ஆனால், நாராயணசாமி அய்யர், 'உட்காருடா, கேளடா என் கானடாவை' என்றார். அனைவரும் உட்கார்ந்துவிட்டனர். அவரும் தம் வாசிப்பை உடன் நிறைவு செய்துவிட்டார்.

பதறிப்போன செம்மங்குடி சீனிவாசய்யர் மகாராஜாவை வழியனுப்ப பின் தொடர்ந்து, மன்னிப்புக் கேட்டார். ஆனால், மகாராணி, 'என்ன அற்புதமான சஞ்சாரம்! அவர்தான் உண்மையான கலைஞர். இதுபோன்ற ஒரு வாசிப்பைக் கேட்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவருக்குப் பேசிய தொகையைவிட இன்னொரு மடங்கு கொடுத்து, ஒரு மாதம் இங்கேயே தங்க வையுங்கள்' எனக்கூறிச் சென்றார்.

இப்படி வளர்ந்த இசைக்கலை, இன்று வழக்கறிஞரின் அம்புபட்ட மானாய்த் துடித்துக் கொண்டிருக்கிறது.

இசைஞானம் எல்லாருக்கும் வந்துவிடாது. பயிற்சியும் முயற்சியும் எட்டிய பலனைத் தருமே தவிர, எட்டாத பலனைத் தந்துவிடாது. கடப்பாரை விழுகின்ற இடத்தில் எல்லாம் நீர் சுரக்காது. எங்கு நீரோட்டம் இருக்கின்றதோ, அந்த இடத்தில்தான் நீர் சுரக்கும். அதுபோல இசைஞானமும் கொடுப்பினை உள்ளோர்க்கு மட்டுமே கிட்டும்.

இசை காற்று வடிவமானது. அது தரையில் கிடக்கும் கிழிந்த கந்தலைக் கொடிக்கம்பத்திற்கு உயர்த்தும். அதே காற்று ஏற்கெனவே பறந்து கொண்டிருந்த கொடியைக் கீழே தள்ளி கந்தலாக்கும்.

அமரர் எம்.கே. தியாகராஜ பாகவதரைப் போல் எவரெஸ்டின் உச்சத்திற்கே சென்றவர் யாருமில்லை. அவர் உலாவருவதை ஓர் அவதாரப் புருஷனாகவே இந்த நாட்டு மக்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். அவர் கார் சென்றபின் எழுந்த புழுதியைக் கையால் ஏந்திக் கண்களில் ஒத்திக் கொண்டனர்.

சென்னை மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்தர் ஹோப் திருச்சிக்குப் பயணித்தபோது, அங்கிருந்த தியாகராஜ பாகவதரின் மாளிகையைப் பார்த்து, 'ஒரு பாடகனுக்கு இவ்வளவு பெரிய பங்களாவா' என ஒரு நிமிடம் திகைத்து நின்றாராம்.

தெய்வப்பிறவியான அந்தத் தியாகராஜ பாகவதரின் அந்திமக் காலத்தை இன்றைய இசைவாணர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பிரகாரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து, அவர் மடப்பள்ளிக்கு எதிரே நின்றது நிகழ்காலத்தினருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

இந்நேரத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியை நினைத்துப் பார்க்க வேண்டும். 'சாவித்திரி' திரைப்படத்தில் நாரதராக நடித்ததற்காக அவருக்கு வழங்கப்பட்ட ரூ.50,000-ஐ 'கல்கி' பத்திரிகை தொடங்குவதற்காக அர்ப்பணித்தார்.

பாடிப்பாடி ஈட்டிய பொருளனைத்தையும் திருப்பதி தேவஸ்தானம், இராமகிருஷ்ணா மடம், ஓரிக்கை மணிமண்டபம், கஸ்தூரிபாய் அறக்கட்டளை போன்ற அமைப்புகளுக்கே வாரி வழங்கினார். அவருடைய இசையைக் கேட்ட ஹெலன் கெல்லர், 'எம்.எஸ். ஒரு மானிடப் பெண்ணல்லர், அவர் ஒரு தேவதை' என்றார்.

மாதா அமிர்தானந்தமயி, 'எம்.எஸ். இல்லத்திலேயே வசிக்க நான் ஆசைப்படுகிறேன். ஏனென்றால், அவர்தாம் எனக்கு மீரா' என்றார்.

இசைவாணர்கள் யாரையும் புண்படுத்தி வாழக்கூடாது, மற்றவரைப் பண்படுத்தி வாழ வேண்டும். 'தேவரீர் ஆதரித்தாற் போதும் அடியேனை. நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை' என மகாகவி பாரதியார் பாடியிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய நேரம் இது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக