அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 10 பிப்ரவரி, 2018

பிட்காயின் சங்கதிகள்!

இணைய நாணயம், எண்ம நாணயம், டிஜிட்டல் நாணயம் எனப் பலவிதமாகக் குறிப்பிடப்படும் பிட்காயின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கின்றன. பிட்காயின் தொடர்பான விவாதம் இணைய உலகில் சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், கடந்த ஆண்டு தான் பிட்காயின் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் 1,000 டாலர் அளவில் இருந்த அதன் மதிப்பு, வருட இறுதியில் 20,000 டாலரை எட்டிப்பிடித்தது முதலீட்டு நோக்கிலும் பலரைக் கவர்ந்தது.



பிட்காயின் மதிப்பு ஏற்ற இறக்கத்துக்கு உள்ளானாலும், அதன் மீதான கவனம் அதிகரித்தவண்ணம் உள்ளது. எதிர்காலத்தில் பிட்காயின் மதிப்பு என்னவாக இருக்கும் என கருத்துகள் நிலவும் சூழலில் ஒரு தரப்பினர் பிட்காயினை எதிர்கால நாணயம் என்கின்றனர். இன்னொரு தரப்போ, இது எப்போது வேண்டுமானாலும் உடைய காத்திருக்கும் நீர்க்குமிழி என்கின்றனர். இவற்றுக்கு மத்தியில் பிட்காயின் போன்ற மற்ற டிஜிட்டல் நாணயங்களும் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளன. இணைய உலகின் தவிர்க்க இயலாத நுட்பங்களில் ஒன்றாக உருவாகி இருக்கும் பிட்காயின் தொடர்பாக நீங்களும் அப்டேட்டாக இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் குறிப்பிட்ட சில இணைய தளங்கள் உதவியாக இருக்கும்.

காயின் டெஸ்க்

பிட்காயின் உலகில் நிகழும் எல்லா விதமான செய்திகளையும் தகவல்களையும் அப்டேட்டாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், காயின் டெஸ்க் தளத்தை அவசியம் புக்மார்க் செய்துகொள்ளுங்கள். பிட்காயின் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளைச் செய்திகளாகத் தருவதோடு, பிட்காயின் நுட்பத்தை ஆழமாக விளக்கும் கட்டுரைகள், விவாதங்கள், வழிகாட்டிகள் என அனைத்து தகவல்களையும் அளிக்கிறது இந்தத் தளம்.

பிட்காயின் சந்தை நிலவரம், அதன் ஏற்ற இறக்கங்கள், அவற்றுக்கான காரணங்களையும் இந்தத் தளம் விளக்குகிறது. பிட்காயின் அடிப்படையாகக் கருதப்படும் ‘பிளாக்செயின்’ நுட்பம் பற்றிய விளக்கப் பகுதியும் இடம்பெற்றுள்ளது. தினமும் தங்கம், வெள்ளி விலை நிலவரம் பார்ப்பதுபோல இந்தத் தளத்தில் பிட்காயின் மதிப்பின் ஏற்ற இறக்கத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

பிட்காயினுக்கான தகவல் சுரங்கமாக விளங்கும் இந்தத் தளம், பிட்காயின் போன்ற இதர எண்ம நாணயங்கள் பற்றிய தகவல்களையும் அளிக்கிறது.

https://www.coindesk.com/

காயின் டெலிகிராப்

பிட்காயின் அபிமானிகளால் அதிகம் விரும்பப்படும் செய்தித் தளங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் வருகிறது காயின் டெலிகிராப். பிட்காயின், அதன் போட்டி எண்ம நாணயங்கள் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், அலசல்கள் உள்ளிட்டவற்றை இந்தத் தளம் வழங்குகிறது. வல்லுநர்களின் பார்வையை விளக்கும் பத்திகளும் இடம் பெறுகின்றன. எண்ம நாணயங்களின் எதிர்காலம் பற்றிய விவாதமும் முக்கிய அங்கம் வகிக்கிறது.
பிட்காயின் மேகசைன்

முழுக்க முழுக்க பிட்காயின் மீது கவனம் செலுத்தும் தளமாக பிட்காயின் மேகசைன் விளங்குகிறது. செய்திகள், வழிகாட்டிகள், விலை, தரவுகள் மற்றும் கருத்துகள் என ஐந்து பிரிவுகளின் கீழ் இந்தத் தளத்தில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு தலைப்பிலும் பல துணைத் தலைப்புகளின் கீழ் தகவல்கள் அடங்கியுள்ளன. தினமும் புதிய கட்டுரைகள் வெளியாகின்றன.

https://bitcoinmagazine.com/

தி மெர்க்லே

பிட்காயின் தொடர்பான செய்தித் தளங்களில் புதிய வரவு இந்தத் தளம். சில ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இந்தத் தளம் பிட்காயின் உள்ளிட்ட பலவிதமான எண்ம நாணயங்கள் தொடர்பான செய்திகள், கட்டுரைகளை வெளியிடுகிறது. இந்த நாணயங்களை மாற்ற உதவும் பரிவர்த்தனை மையங்கள் தொடர்பான செய்திகளையும் தெரிந்துகொள்ளலாம். பிட்காயின் வாலெட்கள் பற்றிய தகவல் களையும் வாசிக்கலாம்.

https://themerkle.com/

சி.சி.என்.

சி.சி.என். எனக் குறிப்பிடப்படும் கிரிப்டோ காயின்ஸ் நியூஸ் தளம் பிட்காயின் தொடர்பான செய்திகளை முழுவீச்சில் அளித்துதுவருகிறது. அதன் மீதான விமர்சனக் கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. மாற்று பிட்காயின்கள் தொடர்பான செய்திகளும் அதிகம் இடம்பெறுகின்றன. பிட்காயின் அடிப்படைகளைக் கற்றுத்தரும் பகுதியும் இருக்கிறது. பிட்காயின் விலைப் போக்கையும் அறியலாம்.

https://www.ccn.com/

பிட்காயின் வலை

பிட்காயினை நிர்வகிக்கும் இணைய சமூகத்தின் அதிகாரபூர்வத் தளமான பிட்காயின்.ஆர்க் தளத்தின் வலைப்பதிவுப் பகுதியிலும் பிட்காயின் தொடர்பான அண்மைத் தகவல்களை அறியலாம். எளிமையான வடிவமைப்பில் கட்டுரைகள் வரிசையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. பிட்காயின் செயல்படும் விதம் தொடர்பான அடிப்படைத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. பிட்காயின் சமூகம், பிட்காயின் தொடர்பான பிரத்யேகச் சொற்கள் என மேலும் பல பகுதிகள் உள்ளன.

https://bitcoin.org/en/blog

பிற தளங்கள்

தவிர பிட்காயின்.காம் தளமும் (https://news.bitcoin.com/) பிட்காயின் தொடர்பான செய்திகளை வழங்குகிறது. பிட்காயின் என்றால் என்ன எனத் தொடங்கி அதன் முக்கிய அம்சங்களை எளிதாக விளக்கும் பிட்காயின் அகாடமி பகுதியும் இருக்கிறது. பிட்காயின் தொடர்பான இலவச இணைய வகுப்பில் சேர்ந்து பயிலும் வாய்ப்பையும் அளிக்கிறது. புதிய பிட்காயின்களை உருவாக்குவதற்கான பிட்காயின் மைனிங் முறை பற்றிய விளக்கக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

பிட்காயின் தொடர்பாக செய்திகளைவிட அது தொடர்பான விவாதத்தில் ஆர்வம் அதிகம் எனில் பிட்காயின் டாக் (https://bitcointalk.org/) இணையதளத்தை நாடலாம்.

இதேபோல, இணைய உலகின் முகப்பு பக்கம் என வர்ணிக்கப்படும் ரெட்டிட் தளத்திலும் பிட்காயின் தொடர்பான செய்திகள், விவாதத்தைப் பின்தொடரலாம். பிட்காயின் தொடர்பான பல விவாதச் சரடுகளில் நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்தோடு கருத்து பகிர்வதைப் பார்க்கலாம்.

எல்லாம் சரி, பிட்காயின் என்றால் என்ன என்று இன்னமும் தெளிவாகப் புரியவில்லையா? அப்படியானால், மேக்யூஸ் ஆஃப் (goo.gl/YFhh1U) என்ற தளத்தில் பிட்காயின் வழிகாட்டியை நாடலாம். பிட்காயின் என்பது மையமில்லாத டிஜிட்டல் பணம், மின்னணு முறையில் உருவாக்கப்பட்டு, மின்னணு முறையில் பரிமாறிக்கொள்ளப்படும் டிஜிட்டல் நாணயம் எனத் தொடங்கி இதன் சூட்சமங்களைத் தகவல் வரைபடமாக இந்தப் பகுதி விளக்குகிறது.

பிட்காயினை எப்படி வாங்குவது, எப்படி வைத்திருப்பது, எப்படிச் செலவு செய்வது என்பது பற்றியும் எளிதாக விளக்குகிறது. பிட்காயின் உலகில் புதிதாக நுழைபவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது இந்தத் தளம்.

The Hindu
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக