அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 10 அக்டோபர், 2019

விடுதலைப் புலிகளைப் புதுபிப்பதற்கு நடவடிக்கை; கைது வேட்டை தொடரும்!

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தது , அவர்களின் நிதி திரட்டும் செயல்களுக்கு உதவியது, தூண்டியது, அந்த இயக்கம் தொடர்பான பொருட்களை வைத்திருந்தது, உட்பட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருந்ததாக நம்பப்படும் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவர் டத்தோ அயூப் கான் தெரிவித்தார்.


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலாக்காவில் நடைப்பெற்ற மாவீரர் தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றியது, விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான வெளியீடுகளை விநியோகித்தது, அந்த இயக்கத்திற்கு ஆதரவு அளித்தது போன்ற நடவடிக்கைகளுக்காக மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன் மற்றும் நெகிரி செம்பிலான் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் உட்பட ரவாங்கைச் சேர்ந்த 28 வயது மறு சுழற்சி பொருள் விற்பனையாளர், 28 வயதுடைய காப்புறுதி முகவர், பேராக் சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த 37 வயது டாக்சி ஓட்டுனர், கூலிம் கெடாவைச் சேர்ந்த தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் சுங்கை பூலோவைச் சேர்ந்த 57 வயது உணவுக் கடை நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக இன்று புக்கிட் அமானில் நடைப்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அயூப்கான் கூறினார். இவர்கள் அனைவரும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிக்குள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட ரவாங்கைச் சேர்ந்த 28 வயதுடைய மறு சுழற்சி பொருள் விற்பனையாளர் இதற்கு முன்பு இலங்கை தூதரை தாக்கியதற்காக குற்றஞ்சாட்டப்பட்டு 10,000 வெள்ளி அபராதம் தொகை விதிக்கப்பட்ட வேளை கைது செய்யப்பட்ட காப்புறுதி முகவர் அந்த தூதருக்கு எதிரான தாக்குதலை திட்டமிட்டவர் என ஆயுப் கான் கூறினார்,

தடைவிதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மலேசியாவில் புத்துயிர் ஊட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதின் தொடர்பில் இந்த எழுவரும் கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் தீவிரவாத இயக்கமென முத்திரை குத்தப்பட்டு அமெரிக்கா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சொஸ்மோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து போலீசார் அணுச்சமாக கண்காணித்து வந்ததாகவும் அவர்கள் 28 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளைச் சேர்ந்த குறிப்பிட்ட சில தரப்பினர் மலேசியாவை விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புபடுத்தி வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப்புலிகள் தொடர்பான நடவடிக்கைகள் இந்நாட்டில் விரிவுப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அயூப் கான் கூறினார்.

2009ஆம் ஆண்டு முதல் இந்நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் மொத்தம் 25 தனிப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர்களைத் தவிர மேலும் யாராவது இந்த இயக்கத்தில் தொடர்புள்ளதாகவும் அதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அவர்களும் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறிய ஆயுப் கான் மலேசியாவில் எந்த தனிப்பட்ட நபராவது தீவிரவாத அம்சங்களைக் கொண்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களின் பின்புலம் பாராது கைது செய்யப்படுவார்கள் என்று தெரித்தார்.

மலேசியாவில் தீவிரவாத செயல்கள் ஊடுறுவாமல் இருக்க மலேசிய காவல் துறை தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் ஆயுப் கான் குறிப்பிட்டார்.

வணக்கம் மலேசியா இணையம்

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக