எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழில் பாடகராக அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கு, கன்னடத்தில் பாடத் தொடங்கி விட்டார். சென்னையில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த அவர் இளையராஜாவின் பாவலர் சகோதரர்கள் குழுவில் இணைந்து மேடை கச்சேரிகளில் பாடி வந்தார். பின்னர் இளையராஜா திரைப்பட இசை அமைப்பாளர் ஆனதும் பாலூட்டி வளர்த்த கிளி என்ற படத்தில் "நான் பேச வந்தேன்... சொல்லத்தான் வார்த்தை இல்லை..." என்ற பாடலை முதன் முறையாக பாடினார்.
அதன்பிறகு இளையராஜாவின் இசையில் சுமார் 3500 பாடல்களை பாடினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு "இனி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எனது பாடல்களை மேடையில் பாடக்கூடாது மீறி பாடினால் ராயல்டி தரவேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்றார் இளையராஜா. இதனால் இருவரும் பிரிந்தனர். பின்னர் மீண்டும் இணைந்தனர். அப்படி இணைந்த பிறகு இளையராஜா இசையில் அவர் பாடிய முதல் பாடலே இருவருக்குமான கடைசி பாடலாக அமைந்தது.
விஜய் ஆண்டனி நடிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், பெப்சி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழரசன் படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை எஸ்.பி.பாலசுப்பிரணியம் பாடி உள்ளார்.
" நீதான் என் கனவு - மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான்பிறைதான் - மகனே
நாளை முழு நிலவு
மெதுவாய்... திடமாய்...
எழுவாய் என் மகனே.
என்று தொடங்கும் பாடல் அது. பாடல் இன்னும் வெளிவரவில்லை. ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் எஸ்.பி.பி., பாடியுள்ள பாடல்தான் அவர் பாடிய கடைசி பாடல். அதுவும் இன்னும் வெளிவரவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக