அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

இயேக பிறந்தார்

மதியம் மூன்று மணி. பகல் பொழுதுவரை காற்றில் கலந்திருந்த குளிர்ச்சி இப்போது நீங்கி, கிசுகிசுப்பான உஷ்ணம் பரவியிருந்தது. ஜுலியாவுக்கு அயர்ச்சியாக இருந்தது. வாங்கி வந்திருந்த கிரிக்கெட் மட்டையை திருப்பிக் கொடுக்கும் சாக்கில் மூத்தவன் தன் நண்பன் ராஜாவின் வீட்டுக்கு சென்றிருந்தான். இளையவள் செல்வியா தூங்கிக் கொண்டிருந்தாள். இரண்டாவது மகன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

ஜுலியா முன்னறையில் போடப்பட்டிருந்த சாய்வு இருக்கையில் தன் உடம்பை சாய்த்துக் கொண்டாள். ஸ்டூலை இழுத்து தன் கடுத்து கால்களை அதன் மீது வைத்துக் கொண்ட போது அப்பாடா என்றிருந்தது.

ஜுலியா ஒரு பள்ளி ஆசிரியை, வயது முப்பத்தைந்தைத் தண்டியிருந்தது. அவள் கணவன் கிறிஸ்தோபர் மருந்துக் கம்பனி ஒன்றில் விற்பனைப் பிரதிநிதி. ஓயாத ஓட்டம். வானில் வெளியே சென்றால் ‘டுவர்’ அடித்தவிட்டு வீடு வருவதற்கு ஒரு வாரமும் செல்லலாம். நான்கு நாள்களுக்கு முன்னர் வெளியே கிளம்பு முன்னர் ஜுலியாவிடம் சொல்லியிருந்தான்.

“23ம் திகதி இரவுதான் வரக் கிடைக்கும். கிறிஸ்மஸ் வேலைகளை செய்யவோ உனக்கு உதவவோ என்னால் ஆகாது. நீயே மெல்ல மெல்ல ஆயத்தங்களைச் செய். லாச்சியில் பணம் வைத்திருக்கிறேன். எடுத்துக் கொள்”

ஜுலியாவுக்கு மனசில்லை. பணம் என்ன பணம்! கிறிஸ்துமஸ் நேரத்தில் கிறிஸ்தோபர் பக்கத்தில் இருக்க வேண்டாமா! கூட மாட ஒத்தாசையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவள் சிறு பிள்ளையாக இருந்த போது அப்பா அடிக்கடி சொல்வார்.

25ம் திகதி நத்தார் கொண்டாடுறது பெரிய விஷயம் இல்லை தாயி.... அதுக்கு இரண்டு கிழமைக்கு முன்னேயிருந்து அதுக்கான ஏற்பாடுகள் முழுக் குடும்பமும் செய்யறது இல்லையா.... அந்தக் கூட்டாக வேலை செய்யறதுல இருக்கிற சுகம்தான் பெரிய விஷயம்” என்பார் அப்பா. அந்த இன்பத்தை, நிறைவை இந்த முறை இழக்க நேரிட்டு விட்டதே என்பதை நினைக்கும் போதுதான் ஜுலியாவுக்கு வருத்தமாக இருந்தது.

செல்லதுரையின் மகனை வைத்துக்கொண்டு வீட்டுக்கு வர்ணம் பூசி முடித்தாகிவிட்டது. அது நோனா வீட்டு வாசலில் முற்றிக் கிடந்த வாழைக் குலையை வெட்டி எடுத்து வரவேண்டும். குழி தோண்டிப் புதைத்து வாழைத்தாருக்கு புகைவிட வேண்டும். துவைக்க வேண்டிய துணிகள் ஏராளம். சமையலறையை சுத்தமாக்கி அடுக்கி வைக்கணும். கேக்குக்கான பொருட்களை இன்னும் வாங்கவில்லை... தரையை பொலிஷ் பண்ண வேண்டும்.... கொக்கிஸ், மா உருண்டை, வடை எல்லாம் பண்ண வேண்டும்”

அடுக்கடுக்காய் சிந்தனைகள்.. ஜுலியாவுக்கு தளர்ச்சி மேலும் அதிகமாக கண்ணை மூடிக் கொண்டாள்.

மப்பும் மந்தாரமுமாக இருந்த தூக்கம் திடீரெனக் கலைந்தது. வாசலில் கூச்சல். அம்மா! அம்மா! என்று சத்தம். மகனின் குரல்.

எழுந்து வாசலுக்குச் சென்றாள். மூத்தவன் தன் தம்பியை தரையில் போட்டு புரட்டிக் கொண்டிருந்தான். அவர்களுக்குள் ஏதோ தகராறு. சண்டையை விலக்கிவிட்டு சமையல் அறைக்குள் புகுந்த ஜுலியா, பீங்கான், கோப்பைகளை கழுவிக் கொண்டிருந்த போது அவளுக்குள் அந்த யோசனை எழுந்தது.

நத்தார் வருடா வருடம் வருகிறது. போகிறது. நாமும் கொண்டாடுகிறோம். கோவிலுக்கும் போகிறோம். குடி, ஆடல் பாடல் என்று பொழுது போகிறது. புத்தாடை மின் விளக்கு என்று ஏராளமான ஏற்பாடுகளைச் செய்கிறோமே. இங்கே எங்கேயாவது பாலயேசுவை நாம் காண்கிறோமா?

ஜுலியா வத்தளை கன்னியர் மடத்தில் படித்துக் கொண்டிருந்த போதும் சிஸ்டர் ரோசி ஒரு முறை சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இயேசுவை கோவில்களில் சிலைகளாக வைத்திருக்கக் கூடாது. அவர் ஜீவனுள்ளவர். அவரை நீங்கள் உங்களுக்குள் வைத்திருக்க வேண்டும். உங்கள் சொல்களில் அவர் வெளிப்பட வேண்டும் என்று சிஸ்டர் ரோஸி ஒரு ஆண்டு விழாவின் போது தங்களிடம் கூறியது ஜுலியாவுக்கு நினைவுக்கு வந்தது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!

ஜுலியாவுக்கு இந்த நினைவு சுசீ சென்றது. இவ்வளவு செலவு செய்கிறோமே. எந்த இடத்திலாவது பாலயேசுவுக்கு இடம் கொடுத்திருக்கிறோமா?

அன்றிரவு தன் மூன்று குழந்தைகளையும் அழைத்தாள் ஜுலியா.

“பெட்டியைத் திறந்து சீலைகளை எடுங்கள். மாட்டுக் கொட்டிலை அமைப்போம்”

“இக் கிறிஸ்மஸ¤க்கு இன்னும் ஐந்து நாள் இருக்கிறதே அம்மா” மூத்தவன் ஆச்சரியத்துடன்.

“24ம் திகதி தானே கொட்டிலை அமைப்போம். இப்போதேவா அம்மா?” மகளின் கேள்வி.

“இல்லம்மா இன்னிக்கே குடிலை நம் முன் அறையில் செய்வோம்... சரி, டெகரெஷன்களை எடுத்து வாருங்கள்”

மளமளவென வேலை நடந்தது. கொட்டில் அமைத்து அலங்காரம் செய்து முடித்து வீட்டார்கள் பிள்ளைகள் குட்டிச் சிலைகளையும் வைத்து விட்டார்கள். இப்போது வைக்கோல் பெட்டியில் பால இயேசுவை வளர்த்த வேண்டும்

“அதை மட்டும் விட்டு விடுங்கள்”

“ஏனம்மா?” வைக்கோலை கையில் எடுத்த சின்னவள் கேட்டாள்.

“வைக்கோல் பெட்டியை அப்படியே விடுங்க. தினமும் நீங்கள் நல்ல காரியங்களை செய்துட்டு இந்தப் பெட்டிக்குள் ரெண்டு வைக்கோலை வையுங்க. உங்கள் நல்ல காரியங்களால் இந்த வைக்கோல் பெட்டி நிரம்பட்டும். 24ம் திகதி இரவு அந்த வைக்கோல் மேல் பாலயேசுவை வளர்த்துவோம். உங்கள் நல்ல செயல்கள், அன்பான எண்ணங்களின் மேல் இயேசுவை கிடத்துவோம். என்ன சரியா?”

சரியென தலையாட்டினார்கள் மூவரும்.

அதற்கு அடுத்த நாளில் இருந்து மூவரிலும் மாறுதல்களைக் காண ஆரம்பித்தாள் ஜுலியா. காலையில் றி குடித்துவிட்டு கோப்பைகளை அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். சாப்பிட்டால் பீங்கான்களை கழுவ மாட்டார்கள். வீட்டைப் பெருக்கச் சொல்லி கத்தினால்தான் காரியம் ஆகும். இவை அனைத்தும் சொல்லாமலேயே நடைபெற்றன. பீங்கான் கோப்பைகளை கழுவி வைத்தார்கள். பெரியவன் உடுப்புகளை துவைத்துப் போட்டான். தம்பியை வம்புக்கு இழுப்பது நின்று போனது. சமைக்கும் போது வெங்காயம் உரித்துத்தரவா? என்று கேட்டான். இரண்டாம் மகன். ஜுலியாவுக்கு இந்த மாறுதல்கள் மகிழ்ச்சியைத் தந்தன.

தினமும் இரவு ஜெபத்தின் பின்னர் தொழுவப் பெட்டியைப் பார்க்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக பெட்டியில் வைக்கோல் நிறையத் தொடங்கி இருந்ததைக் கண்டாள் ஜுலியா.

24ம் திகதி கணவர் கிறிஸ்தோபர் வந்ததுமே தனது ‘ஐடியா’ வேலை செய்திருப்பதை ஜுலியா சொன்னபோது அவன் மகிழ்ந்து போனான். வாஞ்சைபோல பார்த்த அவள் முகத்தை வருடி விட்டான்.

இரவு குடும்ப ஆராதனையின் பின்னர் வைக்கோல் நிரம்பியிருந்த வைக்கோல் பெட்டியின் மீது பிள்ளைகள் மூவரும் சேர்ந்து பாலயோசுவை வளர்த்தினார்கள். ஜுலியாவின் கண்களில் துளிர்ந்த கண்ணீர் கூப்பிய அவள் கைகளுள் பட்டுத் தெரித்தது.

ஷோபனா சக்தி
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக