அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

ஷபா குட்டி

கடலை நம்பி வாழ்கிறோம்

கரையிலே வீடுகள்!

-கவிஞர் ‘கலைக்காதலன்’ சத்தார்


ஷபாக்குட்டிக்கு ரெண்டு வயசு. நல்ல வெள்ள. உம்மா, ஷபோ ஷபோன்னுதாங் கூப்பிடுவா. வெள்ளன சுபஹுக்கே எழும்பி பாலப்பஞ் சாப்பிடுவா. முழுப்பேரு வந்துக்கிட்டு ஆஷ்ரபா எரிச்சல் குணம் இல்லாதவ. எல்லாருஞ் ஷபாக் குட்டின்னுதான் கூப்பிடுற. தங்கச்சி இப்ப இருந்தான்னா ரெண்டு படிப்பா முஜா, கண்களைத் துடைத்துக் கொண்டார்.

‘ம் என்ன செய்ற முஜா எல்லாமே விதி ஷபாக் குட்டிட ஆயுசு அவ்ளோதான்னு இருந்திருக்கு

அழாதீங்க என்றேன்

சீறிப் பாய்ந்து வந்து கரையில் அடித்த அலைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் முஜா.

எங்கட சாச்சி ஒண்ணும் மெளத்தாப்போனாங்க

மிஸ்காத்ட உம்மா

ஆமா றம்ஜானி சாச்சி

இப்ப நெனச்சாலும் பயங்கரமா இருக்கு

இந்த இருபத்தாறோட அஞ்சு வருஷமாவுது

சுனாமி வந்துட்டுன்னு டீ.வியில காட்டுனப்போ ஒடனே ஒரு கவிதை எழுதினேன்.

பொங்கிய கடலே

முத்துப் போதாது என்றா

எங்களூர்க் குள்ளே வந்து

இத்தனை முத்தெடுத்தாய்?’

‘நான் பார்த்தேன். எங்கட ஷபாக்குட்டியும் முத்துத்தான் உம்மாட உசிரு. உசிரு போகும் வரைக்கும் மறக்காது ஷபோட முகம்.’

‘சுனாமி வந்த பிறகு.... பலருக்குச் சிறகு... சிலருக்கு விறகு...’

‘இதுவும் நீங்க எழுதினதுதானே... கவிதைக் களத்துல கேட்டிருக்கேன்.’

‘சரி இப்ப சொல்லுங்க முஜா... சுனாமி வந்த அன்னிக்கு நீங்க எங்க இருந்தீங்க?’

வீட்லதான். நான் நல்ல தூக்கம்... போம்ப வெடிச்சமாதிரி பெரிய சத்தம் ஒண்ணு கேட்டிச்சு... அந்த சத்தம் கேட்டுத்தான் முழிச்சேன்...’

‘எத்தனை மணி இருக்கும்?’

‘காலையில... சரியா 8.20’

அதுக்குப் பொறவு?’

கட்டில்லதான் படுத்திருந்த. ஒடனே காலக் கீழ வைச்சேன். தண்ணி. ஒரு நாப்பது செக்கனுக்குள்ள ஊடு முழுசா தாண்டிட்டுது.

‘நீங்க?’நான் தண்ணிக்குள்ள தத்தளிச்சுக்கிட்டிருந்தேன். ஒலகம் அழியப் போகுதுன்னுதான் நெனச்சேன். ஜெkமா சாச்சிட ஊட்டுக் கூரட கைமரத்தப் பிடிச்சிட்டுத் தண்ணியில மிதந்தேன். ஊடு கடலான மாதரித்தான் தெரிஞ்சிச்சு. அடியில இருந்து நீர்ச்சுணை மாதிரி நிறைய குமிழி குமிழியா வேகமா மேலே பாஞ்சிச்சு.

கன்னஞ்கரேல்னு ஊத்தத்தண்ணி கண்ணுல வந்து அடிச்சிது. கைமரம் ஒடஞ்சிது. நான் அடியில.

இங்கிலீஷ் படங்கள்ள வார மாதிரி...’

‘படம் என்னா படம்.. சுனாமில மாட்டியிருக்கணும்...’

‘ம்... சொல்லுங்க முஜா... பொறவு?’

ரவீனா சாச்சிட ஊட்டுக் கதவு ஒடஞ்சி அலையில மிதந்து வந்துச்சு... வளவுக்குள்ள நாலு ஊடுதான் இருந்த. எல்லாந் தரமட்டம்... தோணி மாதிரி அந்தக் கதவ அல்லா எனக்கு அனுப்பி வைச்சான்...

‘குர்ஆனக் கல்புல சுமக்கிற ஹாபிஸ் இல்லயா... உடுவானா?

கதவப் பிடிச்சிட்டேன். அதுக்கு மேலே படுத்தன். வேகமா வந்த அலையில கதவக் கொண்டு போய் ஒரு ‘போட்’ல அடிச்சிது. மீன்பிடிக்கப் போற போட். கதவு சரிஞ்சுது. நான் தண்ணிக் கடிக்குப் போய்ட்டேன். போட்டுக்குக் கீழ. மெதுவாக ஏறினன். வந்த அலை திரும்பிப் போவக்குள்ள ‘போட்டும் வலையுஞ் சேர்ந்து கடல் பக்கம் இழுபட்டுப் போனிச்சு கல் ஒண்ணு கெடந்துச்சு. அதைக் கட்டிப் பிடிச்சிட்டன். தண்ணியெல்லாம் போய் முடிஞ்ச பொறவு போட் கீழே போச்சுது. அல்லா காப்பாத்தினான். நான் உயிர் பிழைச்சன்’ என்று முஜா சொல்லி முடித்த போது, என் மனக் கண்ணில் மீண்டும் ஒரு தடவை சுனாமி வந்து போனது.

‘கிண்ணியாவில வாப்புராசா முதலாளி வாதத்துல கட்டில்ல படுத்திருந்தாரு. துறையடில கடலுக்குப் பக்கத்துல தான் அவர்ட கடயும் ஊடும் இருந்த முதலாவது அலை வந்துச்சாம்... பாங்கு சொல்லி ஊதி அடிச்சாராம் வந்த அலை அப்படியே வேற பக்கமாப் போனிச்சாம்... கட்டிலோட மிதந்து கரையொதுங்கினாராம். ஒரு சின்னக் கீறல் காயம் கூட வரல்ல மனுஷனுக்கு இப்ப கிட்டத்துலதான மெளத்தானாரு. முஜா, இதச் சொல்ல மறந்தேனே. ஊர்ல... சுனாமில மெளத்தானவங்கட பேரெல்லாம் தோனா பீச்ல ஒரு கல்லில எழுதியிருக்காங்க ஒருநாள் போனேன். அழகான ‘பார்க்’கெல்லாம் கட்டியிருக்காங்க. மனுஷி, பிள்ளேளோட போனேன். பிள்ளேள் பீச்சுல விளையாடிக்கிட்டு இருந்தாங்க. நான் பார்க்கில இருந்தன். ஒரு சின்னப்புள்ள ஒரு நாலரை வயசிருக்கும். பேர் எழுதின அந்த நினைவுத் தூபிக் கல்ல அடிக்கடி ஓடி வந்து தொட்டுத் தொட்டிட்டு ஓடினிச்சு. நான் அந்தப் பிள்ளயிட விளையாட்டயே பார்த்துட்டிருந்தேன். வருது தொடுது அப்புறம் ஓடுது. திரும்பவும். வருது தொடுது பார்த்துட்டே இருந்தன். இது என்ன புது ஜாதி விளையாட்டா இருக்கு. அப்ப அந்தப் புள்ளட தாத்தா வந்துச்சு அதுக்கிட்டக் கேட்டேன். அது யாருன்னு தங்கச்சின்டா... அது என்னா அந்தக் கல்லையே தொட்டுத் தொட்டு ஓடுதுன்னேன். அந்தப் புள்ள ஒருநிமிஷம் அப்படியே நின்டுச்சு அழுதுச்சு இந்தா கடைசில இருக்கிற பேரப் பாருங்க இது எங்கட தாத்தா சொல்லிட்டுப் புள்ள அழுதுக்கிட்டே ஓடிட்டு. நாங்க நெனக்கிற மாதிரி இல்ல முஜா....எத்தனை ஆயிரம் பேர்ட மனசுல எவ்வளவு பெரிய காயங்கள் ஏற்படுத்தியிருக்கு இந்தச் சுனாமி. சென்ரல் கோலேஜில அகதி முகாம்ல இருந்த ஒரு ஆள் சொன்னாரு மூணு பிள்ளேயும் இறுக்கிப் பிடிச்சுத் தூக்கிட்டு நின்டன் அலை வந்து நடுபுல இருந்த சின்னப் பொடியனப் பறிச்சிட்டுப் போயிட்டுதுன்னு சொல்லிச் சொல்லி நெஞ்சுல அடிச்சு அழுதாரு.

‘மருதமுனையில ஒரு சின்னப் பொம்புளப்பிள்ளை கடையில போய் டொபி’ வாங்கிட்டு ஓடி வந்துச்சாம்...சுனாமி வந்துட்டு. உம்மா வந்து பார்த்தாவாம் பிள்ளைட கைமட்டும்தான் தெரிஞ்சுதாம் அலை இழுத்துட்டுப் போயிடுச்சு. ஆறு மணியாவுது முஜா வீட்ட போவமா?

இரவைக்கு நிஸாம் நானா வீட்டலதான் சாப்பாடு.. நாளைக்கு அர்சுதீன் வீட்டுக்கு வரச் சொன்னாரு...’

சரி போவம்....பேசிட்டே நடப்போம்.. அங்க பாருங்கள் எவ்வளவு அமைதியா இருக்குன்னு.. என்று கடலைக் காட்டினேன்.

‘அலை வருதுதான்.. ஷபாக்குட்டி தான் வரல்ல..’

‘இதச் சொல்லலேயே ஒங்கட உம்மா தங்கச்சியெல்லாம் எங்க இருந்தாங்க...?’

‘சுனாமிட ஆட்டம் ஒரு நாலு நிமிஷம்தான் இருக்கும்..’ என்று முஜா கதையைத் தொடரத் தொடங்க, நான் இடைமறித்துச் சொன்னேன். முஜா சுனாமின்னு தலைப்புப் போட்டு இப்புடி எழுதலாம்.. சுனாமி நாலு நிமிஷ நீரோட்டம். ரெண்டு நிமிஷப் போராட்டம்

‘ஒங்களுக்கு ஒடனே கவிதை வந்துரும் எனா?’

‘கவிதை அப்படித்தான் கண்ணதாசன்சொல்ற மாதிரி கவிதை கொட்டாவி மாதிரி... எப்போதும் வராது. எப்போதோ வரும். ம்... சரி சொல்லுங்க முஜா’

தண்ணிய உட்டு எறங்கி உம்மா தங்கிச்சிய எல்லாந் தேடி அலைஞ்சன். இன்னிக்குக் கலியாணம் முடிஞ்சுதே சர்ஜுனா, அவவும் மத்தத் தங்கச்சி, ஜப்ரானாவும், உம்மாவும், நானும் ஷபாக்குட்டியும்தான் ஊட்ல இருந்த. நான் தூக்கமே. வாப்பா இடியப்பம் குடுக்கக் கல்முனைக்குப் போய் ரக்ஷானா புத்தகம் எடுத்துவர ஸ்கூலுக்குப் போய்.. சிப்னாஸ் ரஹ்மானிய்யா தைக்கா’க்கு ஓதப் போய்.. உம்மும்மா வீட்டுக்குள்ள நல்ல தூக்கம்.

உம்மாவையும் தங்கச்சியையும் தேடி அலைஞ்சு திரிஞ்சன் ஒரு ஊட்டுக்குள் இருந்தாங்க ரெண்டு தங்கச்சியும் உம்மாவைக் கட்டிப் பிடிச்சிட்டுப் பயந்துபோய் அழுதுட்டு நின்டாங்க.

என்ட பிள்ளயத் தேடாம ஓடிட்டேனேன்னு அழுதா. மகேன் ஷபாக் குட்டியத் தேடிட்டு வா மகேன்.. என்ட ஈரக்கொல என்ட உசிரு... அது எங்க போச்சோ....அல்லா... றஹ்மானே... என்ட சீதேவி... ஷபோ... என்ட தங்கம். ஷபோ... ஷபாக் குட்டி... ன்னு உம்மா அழுதா. எங்கே தேடியும் ஷபாக் குட்டி கிடைக்கவே இல்ல.’

‘சுனாமி வந்த நேரம் உம்மா என்ன செய்து கொண்டிருந்தாங்க?’

‘உம்மா....சொன்னாங்க. அதிசி கழுவிட்டிருந்தாங்களாம். ஷபாக்குட்டி சாச்சிட பிள்ளேளோட விளையாடிட்டு இருதாவாம். சர்ஜுனா பீங்கான் கோப்பை கழுவிட்டு இருந்தாவாம். ரக்ஷனா புக்ஸ் எடுக்கப் போய்ட்டாவாம். ஷிஹ்னாஸ் ஓதப் போட்டாவாம். நான் அசந்து நல்ல தூக்கமாம். வாப்பா கல்முனை டவுணுக்குப் போய்ட்டாராம். ஜப்ரானா வீட்டு முற்றத்த கூட்டிட்டிருந்தாவாம் உம்மா அழுதழுது சொன்னா.

‘எட்டு மணி இருக்கும் வாப்பா... ஷபாக் குட்டி கடலையே பார்த்துட்டிருந்துச்சு. கண்ணுல சும்மா வெறி பிடிச்ச மாதிரி....எதையோ கண்டு பயந்தாப் போல.. கண்ணிமைக்காமப் பார்த்துட்டே இருந்துச்சு முதலாவது அலை வந்துச்சு நான் ஒடனே ஷபாக் குட்டியத் தூக்கிட்டு சாச்சி வீட்டு ஒழுங்கைக்குள்ளால ஓடினேன். ரெண்டாவது அலை அடிச்சுருது. ஷபாக் குட்டியக் கையில இருந்து பறிச்சிட்டுப் போய்ட்டு மகன்... முன் ஊட்டு கேட்டுக் கம்பியப் பிடிச்சிட்டுத் தொங்கினேன் மகன்... ஷபாக் குட்டிய அலை கொண்டு போயிடுச்சே... சர்ஜுனாவும், ஜப்ரானாவும் முன் ஊட்ல தண்ணிக்குள்ள மூச்சுத் திணறிக்கிட்டிருந்தாங்க முஜா... முதலாவது அலை அடிச்ச ஒடனே நம்ம ஷபாக்குட்டிட கண் நீலம் பூத்திருந்துச்சு.... வாப்பாக்குக் கடைசியா ‘பாய்’ காட்டினாளே... என்ட உசிரு... என்ட ஷபோ... உம்மா... ஷபாக் குட்டி....’தந்தாத்தான் உடுவன் இல்லாட்டி உடமாட்டன். நான் அழுவன்’ சல்லி கேட்டு வாப்பாக்கிட்ட சண்டை புடிச்சி அழுவாளே... என்ட உசிரு... நீ போய்ட்டியே.... ஷபோ.... ஷபா... ஷபாக் குட்டி...’ இப்புடி உம்மா அழுத அந்த அழுகையை உசிரு போகும் வரைக்கும் மறக்க முடியாது நானா... என்றார் முஜா.

இன்று தங்கச்சி சர்ஜுனாவுக்குக் கலியாணம். நேற்று மாகோலையிலிருந்து என் தம்பி மிஸ்காத் மெளலவி, ஹபீழ் மெளலவி, ஸாத் மெளலவி, றிழ்வான் மெளலவி, இர்பான் மெளலவி, இவர்களோடு நானும், பானுவும் சின்னமகன் அப்துல் அkஸ¤ம் வேனில் வந்தோம் கல்முனைக் குடி முஜாஹித் மெளலவி வீட்டுக்கு.

வத்தளை மாபோலை இப்னு உமர் மத்ரஸாவுக்குப் பக்கத்தில் மரீனா கார்டனில்தான் நாங்கள் இருக்கிறோம். இந்த முஜா, தம்பி மிஸ்காத்தோடு வீட்டுக்கு வந்து இப்பொழுது எனது உடன் பிறவாத ஓர் தம்பியாகிய ஐந்து வருடமாகிறது- வருஷா வருஷ டிசம்பர் இருபத்தி ஆறாம் திகதிகளிலெல்லாம் ஷபாக்குட்டி என் ஞாபக விழி விளிம்பில் வந்து நின்று சிரிக்கிறாள்!

அவள்

சுவனப் பூங்காவனத்தில்

சந்தோஷ ஊஞ்சலாடுவதாகக்

கனவு வருகிறது!

கல்முனைக்குடி பீச் ரோட்டிலிருந்து முஜா வீட்டுக்குத் திரும்பி வரும் போது சொன்னேன்:

முஜா,

சுவையான ஆகாரம்

ஒரு கவளம்

குறைந்து விடுவதே

விதியாகி விடுகிறது....!

விதி,

யாரைத்தான் விடுகிறது?

தூரத்திலிருந்து கடலைப் பார்த்தேன்:

கரையினில் வந்தெம் காலடி தொட்டு

மன்னிப் பா நீ கேட்கின்றாய்? -

இல்லை

மறுபடி வரவா பார்க்கின்றாய்?

அமைதியாய் அலைகள் கரையினில்

தவழ...

அழகிய கடலே ஆணையிடு! -

எங்களை

அழிவுகள் இன்றி வாழவிடு!

(ஷபா வாழ்கிறாள்!)

கிண்ணியா
அமீர் அலி
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக