“போடியார்! வெசயம் தெரியுமா? ஒங்கிட தங்கச்சி மகளுக்கு கேட்ட மாப்புள போன கெழம லண்டனில இருந்து வந்து ஆருக்கும் தெரியாம அவனோட லண்டினில இரிந்த ஒரு சிங்கிளப் புள்ளய, கொழும்பில கலியாணம் முடிச்சிற்றானாம். இஞ்ச அவன்ட உம்மா வாப்பாவெல்லாம் கொளறி மாயிறாக. நேத்து லாவு கொழும்பில இரிந்து வந்த, நம்முட கொழுக்கட்டப் பொட்டிர மகன் காதர் மாஸ்ரர் எங்கிட ஊட்ட வந்தவரு சென்னாரு” என்று முளையைக் காலாத்திக் கொண்டிருந்த வயற்காரன் சொல்லிவிட்டு, பிரித்துப் போட்ட நெல்லுச் சாக்குகளை உதறி எடுக்கிறான்.
வாழ்க்கை¨யில் தன் தங்கச்சிக்கும் மகளுக்கும் ஏற்பட்ட பரிதாப நிலையை ஜீரணிக்க முடியாமல் வேதனையில் போடியார் அனல் போன்ற பெருமூச்சை விடுகிறார். லண்டன் மாப்பிளை ஆசை எவளவு கேவலத்தை உண்டாக்கிவிட்டது!
“நீங்க கேட்ட மாதிரி, நம்முட தம்பி நசிறப் பண்ணிரிந்தா ஒங்கிட தங்கச்சிக்கும் மகளுக்கும் இந்தக் கேவலம் வந்திரிக்கிமா...? எல்லாத்திக்கும் காரணம், ஒங்கிட மருமகப் புள்ளட வாய்க்கொழும்புத்தான். நம்முட தம்பி நசிற எவளவு கேவலமாப் பேசினா. என்ர மொகத்தி நம்முட தம்பிய கறுப்புனா எண்டு சென்னா.. இதன் கேட்டு எனக்கு எவளவு கோவம் வந்திக்கு தெரியுமா...? நம்முட தம்பிக்கு என்ன கொற இரிக்கி? படிப்புக்கு படிப்பிரிக்கி.
பணத்திக்கு பணமிருக்கு, அவர்ர கொணத்திக்கு கிட்ட, இந்த லண்டன் மாப்பிளயெல்லாம் நெகரா நிக்கேலுமா...? இந்த லண்டனுக்கு போறாக்களெல்லாம் அங்க, வெள்ளக்காரண்ட கக்கூசிதானாம் கழுவுற... இஞ்ச, படிக்கப் போறெண்டுதான் பேரு... இவக செய்யிற வேலயெள அங்க போனாத்தான் தெரியிம். காசிக்காக வெள்ளக்காரண்ட கக்கூசக் கழுவலாமா? பாவம்! இந்தக் கழிசறய நம்பி ரெண்டேக்கர் காணியயும் வித்து பத்துலெட்சம் காசயிம் குடத்திட்டா...” என்று வயற்காரன் சொல்லி முடிப்பதற்கு இடையில் போடியார் வேதனையில் கண்களைக் கசக்கி மீண்டும் பெருமூச்சு விடுகின்றார்.
“மம்மது! என்ர தங்கச்சி ஒருநாள் கூட கண் கலங்கினத நான் பாக்கெல்ல... எங்கு வாப்பா உம்மா அவவ அப்படித்தான் வளத்த உள்ளதுமொரு பொம்புளப் புள்ளெண்டு ஒரு கொறயிம் இல்லாமத்தான் வளத்த. என்ர தங்கச்சிக்கு இப்படியொரு நெல வந்தத நெனச்சா என்ற நெஞ்செல்லாம் வெடிச்சிரும் போல கெடக்கு.... எனக்கு வாற கோவத்திக்கு அவள்ள மகளப் போலப் புடிச்சி கொல செய்யணும் போல கெடக்கு. எல்லாம் அவட மகள் படுத்தின பாடுதான்.... வாப்பா உம்மாட செல்ல ஒழுங்காக் கேட்டிருந்தா இப்பிடி ஒரு தலகுனிவு இந்தக் குடும்பத்திக்கு வந்திரிக்கிமா? லண்டன் மாப்புள கேட்டதால, இப்ப வந்த சீரழிவபாத்தியா...? கையில இரிந்த காசி பணமும் போய், மானம் மரியாதயிம் நல்லாய் பெயித்து.. அவனுக்கென்ன காவாலி வழிசல்... அவன்ட குடும்பமும் சொணபறந்த குடும்பம். நாம அப்படியா? கவரிமான் சாதி... இந்த ஊரு, ஒலகம் லண்டன் மாப்புளயள நம்பி, நல்லா ஏமாந்து கெட்டுப் போச்சி.
கக்கூசி கழுவிற நாய்கள நம்பி, இந்த ஊரான் அழகான பொம்புளப் புள்ளயளயிம் குடுத்து, பணம் காசயிம் விணாச் செலவழிக்கானுகள். இந்த ஊரில பணத்திக்கு அவால் புடிச்ச கொஞ்சப் பிச்சக்காற நாய்கள், புள்ளயள வெள்ளக்காரண்ட கக்கூசி கழுவ அனுப்புறானுகளே...! பணம் வந்தாய் போல எல்லாம் வந்திருமா...? நாயிர சூத்தில தேன் வெச்சா நாய்தான் அத நக்கணும். எங்கிட குடும்பம் பத்தினாலும் முறுக்கொடயாத குடும்பம்...” என்று போடியார் தன்னுடைய சகோதரிக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி அழாக் குறையாகப் பேசிக் கொண்டிருக்கிறார். போடியாரின் மனைவி வந்து தேத்தண்ணியை அவரின் கையில் கொடுத்துவிட்டு மம்மது, இதென்ன ஒலகம்டா தம்பி....! கொஞ்ச நாளைக்கு முதல்ல, ஒங்கிட போடியார் அவர்ர தங்கச்சிக்கும் மச்சானுக்கும் ஏசின ஏச்சிம், பேசின பேச்சும்... யாஅல்லாஹ்! நெனச்சாலே மனம் கூசிது... இதுக்குள்ள இன்னா கதைக்கிற கதயப் பாத்தியா...? இப்ப பாத்தா, தங்கச்சிர மகளுக்கு ராவைக்கே மகனக் கொண்டு போய் காவின் எழுதிப் போட்டுறுவாரு போல கெடக்கு.... இவகள நம்பி நாம ஒரு கதயிம் கதச்சிரப் போடா... பாத்தியா! தானாடாட்டியிம் தன்ர சத ஆர்றத....” என்று கூறிக்கொண்டு மீண்டும் அடுப்படிக்கு போகிறாள், பூனை அவளைத் தொடர்ந்து கத்திக் கொண்டு போகிறது.
போடியாரின் நாய் பொட்டு, வாசலில் நிற்கும் வாழைப்பாத்திக்குள், கால்களை முன்னுக்கு, நீட்டி படுத்துக் கிடக்கிறது. சுமார் பத்து வருடங்களுக்கு முன், பால்குடி மாறாத குட்டியாக போடியாரின் வீட்டில் வந்து சேர்ந்த பொட்டு, இன்று வரை ஒரு பிள்ளையைப் போன்று போடியாரின் குடும்பத்தோடு ஒட்டிக் கிடக்கிறது.
“பொம்புறப் புள்ளயளுக்கு அளவுக்கு மிஞ்சின எளக்காரம் கொடுத்ததாலே வந்த வினதான். இப்ப, என்ர தங்கச்சிக்கும் புரிசனுக்கும் வந்திரிக்கிற அவமானம். பேப் பொடிச்சிர செல்லுக்கு ஆடின ஆட்டத்தால, இப்ப கத எங்க பெயித்து பாத்தியா. படிக்கிற புள்ளயளுக்கு, காதுக்க வெக்கிற டெலிபோன வாங்கிக் குடுத்து படிப்பெல்லாம் லண்டனாப் பெயித்து முதல்ல எங்கு மச்சானுக்கு அடிக்கணு செருப்பால.... இந்த நெல வாறத்திக்கு முதக் காரணம் அந்தாள்தான். மகள் சென்ன படியெல்லாம் ஆடினத்தாலதான், இந்தச் சீரழிவு குடும்பத்திக்கு வந்த.... இதுக்குத்தான் செல்ற, பொம்புளப் புள்ளையளுக்கு ஓரமா எடம் குடுக்கக் கூடாதெண்டு, ஆரா, இரிந்தாலும் பொம்புளப் புள்ளயள கணக்கோட வெச்சிரிக்கணும்...” என்று போடியார் தன் மனைவிக்கு சொல்லி விட்டு “அஞ்ச..... இந்தப் பொட்டுக்கு என்னயிம் கெடந்தா கொண்டு வந்து போடு... ஆட்டின வால உடாம ஆட்டிக்கு இரிக்கி. ரி!யிஷிu ஒரு மாதிரி அளகொளப்பபாக இருக்கி. இன்னா உள்ளற வெட்டா¡, ரெண்டு மூணு நாளைக்கு இப்படியே இரிந்திட்டா, வயல ஒருமாதிரி வெதச்சிக்கு கரயேறிக்கெலாம்.... எல்லாத்திக்கும் அந்த அல்லாததான் ஒதவி செய்யணும்...” என்று சொல்லிக் கொண்டு கிணற்றடிக்கு போகிறார்.
“கீர பொன்னங்கணி, வள்ளல், கூனி இரிக்கோ....! புள்ளேய் வேணுமாகா? விடியச்சாமத்தில ஆஞ்ச வள்ளல் இரிக்கி, கூனி போட்டுக் கடஞ்சா ரெண்டாகப்ப சோறு கூடத் திங்கலாம்.... வேணுமென்டாப் பொட்டிய எடுத்துக்காக... என்ன வேணுமா...?” பொந்தெண்ட சிவத்தாள் போடியாரின் கதவடியில் நின்று, கூப்பிடுகிறாள். இவளின் சப்தம் கேட்டு போடியாரின் பெண்சாதி, பெட்டியோடு, கதவடிக்கு போகும் போது, வாசலில் படுத்துக்கிடந்த பொட்டும் பின் தொடர்ந்து போகிறது. போடியாருக்கு பொன்னங்கணி எலக்கெறி என்டா உசிரு. நல்ல எலக்கெறியா ரெண்டு கட்டுத்தா...
“கந்து கவரப் போடாம நல்லதாப் பாத்துப் போடு.... அந்தக் கூனிலையிம் காக்கொத்து தா.... இன்னா... காசி.... “ காசைக் கொடுத்து விட்டு, எலக்கறியையும் கூனியையும் வாங்கிக் கொண்டு போடியாரின் பெண்சாதி. வரும் போது, பொட்டும் பின் தொடர்ந்து வருகிறது. போடியாரின் பெண்சாதி வரும் வழியில் பூத்துக் குலுங்கி நிற்கும் கறுத்தக் கொழும்பான் மாமரத்தில் இரண்டு காகங்கள் மூச்சுப் பிடித்துக் கத்திக் கொண்டிருக்கின்றன. கத்துகின்ற காகங்களுக்கு கல்லொன்றை எடுத்து வீசிவிட்டு “சீ... நாசமத்துப் போன காகங்கள், என்னத்திக்கு இப்பிடிக் கத்திதோ....? விடிஞ்சாப் போதும்.... ஆட்டுத்தோலுக்கு பறயன் பதறாப் போல வந்து கத்தத் தொடங்கியிருங்கள்... சூய்...! விடியல்ல என்ன வரப் போகிதோ? நேத்து லாவு அவன் கத்தக் காம்புட செலயிமானையிம் பொலிசி புடிச்சிக்கு பெயித்தானுகள்.... இவன் புள்ள போன கெழம பள்ளிக் கொடத்திக்கு போனவன்ட செய்தி ஒன்டயிம் காணெல்ல... நம்முட ஊருக்கு ஒரு மாற்றத்த எடுக்கவும் ஏலாமக் கெடக்கு.... “ என்று காகங்களை விரட்டி விட்டு வரும் போது போடியார் கிணற்றடியிலிருந்து வருகிறார்.
அப்பொழுது போடியாரின் றோட்டுக் கேற்றடியில் ஆட்டோ ஒன்று வந்து நிற்கிறது. ஆட்டோவையும் அதில் வந்த ஆட்களையும் கண்ட நாய் பொட்டு ஓடிப் போய் பாய்ந்து பாய்ந்து குரைத்துக் கொண்டு நிற்கிறது. நாய் தொடந்து குரைப்பதைக் கேட்டு வீட்டிற்குள் இருந்த போடியார் “தம்பி மம்மதோ அங்க ஆரோ வாறாப் போல கெடக்கு, நீ போய் பொட்ட வெரசிப் போட்டு , வாறாக்கள் கூட்டடிவா. கெதியாய் போ.... வந்தாக்கள் கேற்றடிய நிக்கிறாப் போல கெடக்கு” என்று கூறி விட்டு இருக்கிறார். கேற்றடிக்கு போன மம்மது பொட்டை விரசிவிட்டு, வந்தவர்களை அழைத்துக் கொண்டு வருகிறான். வந்தவர்களைக் கண்ட போடியாரரும் பெண்சாதியும் அவர்களின் கண்களையே நம்பாது திகைத்துப் போய் நிற்கின்றனர். கீரியும் பாம்புமாய் இருந்த போடியாரும் அவர் சகோதரியும், மச்சானும் கூனிக்குறுகி, வெட்கித் தலை குனிந்து நிற்கின்றனர். மறுகணம் போடியாரைக் கண்ட அவர் சகோதரி ஓவென்று அழுது அவரைக் கட்டிப் பிடித்து அழுவதைப் பார்த்த போடியாரின் பெண்சாதி திகைத்துப் போய் மதினியைக் கிட்ட அணைத்து தேற்றி ஆறுதல் கூறுவதைக் கண்டு வயற்காரன் மம்மது தன்னையே மறந்து நிற்கின்றான்.
சுமார் ஒரு வருடங்களுக்கு மேல் பிரிந்திரிந்த குடும்பம் இன்று ஒன்றாகி நிற்கிறது. எல்லாம் லண்டன் மாப்பிள்ளையால் வந்த வினை. வெள்ளை மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்ட மகளின் அறியாமையை எண்ணி போடியாரின் சகோதரியும் மச்சானும் உள்ளத்தால் புழுங்கி வடிவது, அணுகிக் கிடக்கும் போடியாரின் நாய் பொட்டுக்கு எங்கே புரியப் போகிறது. சகோதரி தன் பிழைக்காகவும் அறியாமைக்காகவும் விம்மி விம்மி அழுவதைப் பார்த்து போடியார் அவருடைய கண்களைக் கசக்கிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது பேடி¡யாரின் மனைவி “மதினி எவளவு நேரம் வாசல்ல நிற்கிற...? உள்ளுக்கு வாங்க... உள்ளுக்கு வந்து இரிங்க... வாங்க.... எல்லாத்தையும் இரிந்து பேசலாம்... ஒங்களக் கண்டதிலேயே எல்லாம் மறந்து பெயித்து.. வாங்க தேயில குடிச்சிப் போட்டு மற்றத்தையெல்லாம் ஆறுதாப் பேசலாம்.” என்று கூறி இருவரையம் அழைத்து வந்து வீட்டுக்குள் இருப்பாட்டி விட்டு, தேனீர் போட்டு வர அடுப்படிக்கு போகிறாள்.
போடியாரின் முகத்தில் என்றும் இல்லாத சந்தோஷம் பொங்கி வழிகிறது. சகொதரியும் மச்சாளும் அவர் வீட்டுக்கு வந்ததை அவரினால் கற்பனை கூடப் பண்ண முடியாமல் தடுமாறுகிறார். அவரின் கூடப் பிறந்த ஒரே ஒரு சகோதரி. லண்டன் மாப்பிளை விடயத்தில் இவர் களுக்கிடையில் பிரிவு ஏற்பட்டிருந்தாலும், இவர் தன் சகோதரியை நினைந்து பேசாத நாட்களே இல்லை. பாவம்! இந்த லண்டன் மாப்பிளை விடயத்தினால் அவருடைய சகோதரிக்கு ஏற்பட்ட காயத்தை அவரால் தாங்க முடியாமல் சதா வேதனைப் பட்டுக்கொண்டிருந்ததை அந்த இறைவன்தான் அறிவான். போடியார் அவர் வளவுக்குள் இன்று தங்கச்சியை கண்ட மகிழ்ச்சியில் பூமியில் நிற்காமல் துடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய குதுகலத்தில் அவருடைய நாய் போட்டும் சேர்ந்து குரைத்து குதுகலிக்கிறது. தறுகணம் “தம்பி மம்மதோ போய் நம்முட கோழிக் கூட்டுக்குள்ள கெடக்கிற அந்த வெள்ளச் சாவலையிம், அதோட கெடக்கிற கழுத்தறுத்தான் போட்டயிம் புடிச்சிக்குப் போய் றகுமானித் தைக்கா லெவ்வட்ட குடுத்து அறுத்திக்கு வா.. கெதியா வா... அவரு ஊட்ட போயிருந்தா, மூலோடு மோதினிக்கிட்ட குடுத்து அறுத்துக்கந்திரு... போகக்குள்ள நம்முட பிசாக்கத்தியையும் தீட்டி எடுத்திக்கு போ... பகலைக்கு புள்ளைக்கும் மச்சானுக்கும் சோறு குடுக்கணும், சட்டுப்பண்ணி வாடாம்பி... மார்க்கட்டும் போகணும்” என்று போடியார் சொல்லி விட்டு மனைவியிடம் சகோதரிக்கும் மச்சானுக்கும் சாப்பாடு சமைக்கும்படி கூறுகின்றார். போடியாரின் அவசரத்தையும், மகிழ்ச்சியையும் கண்ட மனைவி “இந்த ஒரு வரிச்சத்திக்கு தங்கச்சியை மறந்து எப்படித்தான் இரிந்தீங்களோ...?” என்று கூறிக் கொண்டு சிரிக்கும் போது பக்கத்தில் நின்ற வயற்காரன் மம்மது,
“புள்ளம்மா! அவருக்கென்ன ரெண்டு, மூன்று தங்கச்சிமாரா இருக்கு...? இரிக்கிறதே உள்ளதுமொரு புள்ள. அதுவும், அவகு உம்மா அல்லாஹ்ட்ட லாவு பகலா துவாக்கேட்டு பெத்த புள்ள. அதுவும், அவருக்கு பாசம் இரிக்காதா...? கொஞ்வ நாளா அவரு தங்கச்சோட பேசாமக் கதையாமப்பட்ட பாடு, அந்த அல்லாவுக்குத்தான் தெரியிம்... இதெல்லாம், நம்முடை தம்பி நசிர்ற கலியாணம் அலஞ்சதால வரல்ல எல்லாம் ஒரு கொடலுக்க கெடந்து வந்த பாசம்தான்...” என்று கூறிக் கொண்டு குடிச்சி முடிச்ச தேயிலைக் கிளாசிகளையெல்லாம் தூக்கிக் கொண்டு போவதைப் பார்த்து பக்கத்தில் நின்ற பூனை கத்துகிறது. இதுவரை எதுவுமே பேசாமல் மூக்கைச் சீறிச் சீறி சிணுங்கிக் கொண்டிருந்த போடியாரிக் தங்கச்சி “காக்கா ?!} ஒரு மடச்சி. நான் செஞ்ச பொழ எல்லாத்தையிம் பொறத்தது. அல்லாஹ்வுக்காக என்ன மன்னிச்சிரு... என்ர புள்ளட மானத்தையிம் என்ர குடும்ப மானத்தையிம் நீதான் காப்பாத்தணும் ஒனக்குத்தான் எல்லாம் தெரியிமே...! பொம்புளப் புத்தி பீ திங்கப் பெயித்து... இந்த மாப்புளோளிர மகன நம்பி, எல்லாம் சீரஞ்சி பெயித்து... ஒன்ட கால்ல உழுந்து கெஞ்சிறன்” என்று கொளறி போடியாரின் கால்களில் உழுந்து கெஞ்சுவதைப் பொறுக்க முடியாமல் போடியாரின் மனைவி சட்டென்று பாஞ்சி மதினியைத் தூக்கி அணைத்துக் கொள்வதைப் பார்த்து வயற்காரன் மம்மது கொடுப்புக்கால் சிரிக்கிறான்... இனி என்ன நாளைக்கு, மாட்டுபளை வயல் விதைத்ததும் அடுத்த கிழமை போடியார் வீட்டில் கலியாணம்தான்.
எஸ். முத்துமீரான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக