தன் மனமே தனக்குத் திட்டிக் கொள்ள, எழுத்தாளர் ஏகாம்பரத்தார் நடந்து கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பார்த்திராத விதத்தில் அவருக்குத் தெரிந்த நண்பர் நமச்சிவாயம் எதிர்ப்பட்டார் கல்லும், தேங்காயும் மோதின மாதிரி.
“நாம பேசிற மொழியில எல்லாருக்கும் விளங்கிற மாதிரி எழுதிற தெண்டா அது நீங்கதானய்யா! இப்ப கிட்டடியிலயும் உங்கட கதையொண்டப் பாத்தன். ச்சா! தத்ரூபமா எழுதியிருந்தீங்க! எண்டாலும் உங்கட படைப்புகள, உங்கள நம்மடசனம் இன்னும் முறையாகக் கவனிக்கல்லய்யா! நீங்க இந்தியாவில புறந்திருந்தா உங்கட கணக்கு வேற!”
என்று ஏற்கனவே சொன்னவரும் இந்த நமச்சிவாயம் தான். அப்போது இவர் பேச்சைக் கேட்டுத் தன்னையே மறந்து போன எழுத்தாளர் ஏகாம்பரத்தார் இப்படிச் சொல்லியிருந்தார்.
“நம் நாட்டு எழுத்தாளர்களை மதிக்கின்ற, கெளரவிக்க வேணுமென்று நினைக்கிற உங்களைப் பார்த்தால் எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கு. உங்களைப் போன்ற, ரசிகர்களை மலைபோல நம்பித்தான் வாரா வாரம் என்னுடைய நூலொன்றை வெளியிடத் தீர்மானித்திருக்கிறன். அந்த விழாவுக்கான அழைப்பிதழ் உங்களுக்கு வந்து சேரும். கண்டிப்பாக விழாவுக்கு வாருங்கள்!”
“ஓமய்யா! எனக்கு என்ன வேல இருந்தாலும் அதை யெல்லாம் ஒரு பக்கம் போட்டு விட்டு, கண்டிப்பாக உங்கட நூல் வெளியீட்டு விழாவுக்கு வருவன்!”
ஆனாலும் இப்படிச் சொன்ன நமச்சிவாயம் நூல் வெளியீட்டு விழாவுக்கு வரவேயில்லை.
வெளியீட்டு விழா முடிந்து ஒரு வாரம் கழிந்த பின்பு இப்போது நேருக்கு நேராக ஏகாம்பரம், நமச்சிவாயத்தைச் சந்திக்கிறார்.
முகமெல்லாம் பற்களாய்த் தெரியச் சிரித்தபடி நமச்சிவாயம் சைக்கிளிலிருந்து துள்ளிப்பாய்ந்து இறங்கிக் கொண்டார்.
“என்ன சைக்கிளுக்கு பிறேக் இல்லப் போல?”
“ஓமய்யா மழை நாள் தானே! பிறேக் பழுதாப் போச்சு கால உதைச்சித்தான் நிப்பாட்ட வேண்டியிருக்க. ஐயா அண்டைக்கு உங்கட நூல் வெளியீட்டு விழாவில கலந்து கொள்ள வேணு மெண்டு எவ்வளவோ ஆசையோட இருந்தன். சேட், றவுசர அயன்பண்ணி றெடியாக வச்சிருந்தன். ஆனாலும் மறந்து போனன். எனக்குப் பெரிய கவல ஐயா. தயவு செய்து மன்னிச்சிக் கொள்ளுங்கய்யா!”
“சரி. அதுக்கென்ன பரவாயில்ல. ஆனாலும் உங்களுக்காக ஒரு நூல் வச்சிருக்கன்!”
“அப்படியா! தாருங்கய்யா!”
தப்பினேன் பிழைத்தேன் என்று எண்ணியபடி நவச்சிவாயம் போய்விட்டார். ஆனாலும் அன்று பிற்பகலே எழுத்தாளர் ஏகாம்பரத்தார் புத்தகமொன்றை எடுத்துக் கொண்டு நண்பரைச் சந்தித்து நூலைக் கையளித்தார். நூலை வாங்கிக் கொண்ட நமச்சிவாயம் எழுத்தாளரை அமர வைத்து தேநீர் கொடுத்து உபசரித்து விட்டு, “ஐயா, இந்த நூலுக்கு எவ்வளவு நான் தரவேண்டும்?” என்று கேட்டார்.
“பிரதி முந்நூறு ரூபா. ஆனாலும் நீங்க உங்கட விருப்பம் போல தாங்களன்!”
“சரியய்யா, நாளைக்குக் காலையில நானே கொண்டு வந்து தாறன்!”
“சரி” என்று சொல்லிவிட்டு எழுத்தாளர் விடை பெற்றுக் கொண்டார்.
“இன்று மட்டும் கடன் இல்லை” என்ற வாசகம் கடைகளில் தொங்கினால் அந்த வாசகம் ஒவ்வொரு நாளைக்கும் பொருத்தமாக இருப்பது போல நமச்சிவாயம் சொன்ன, “நாளைக்குத் தருகிறேன்!” என்ற வார்த்தை எல்லாக் காலத்துக்கும் பொருத்தமாக இருப்பதைப் போலவே எழுத்தாளர் ஏகாம்பரத்துக்குத் தெரிந்தது. விழா முடிவடைந்து ஒரு மாதத்திற்கும் மேலாகப் போய்விட்டது. இன்னும் நமச்சிவாயம் நூலுக்கான பணத்தைத் தருவதாக இல்லை. ஒரு வாரம் வரை எழுத்தாளர், நமச்சிவாயத்தின் வீட்டுக்கு நடந்து நடந்து “பிறசர்” வருத்தம் சற்றுக் குறைந்து போனது அவ்வளவு தான். இதற்கிடையில், “நூல் வெளியீடு முடிந்ததும் கொடுக்காமல் விட்ட மிகுதிப் பணத்தைத் தருவேன்” என்று அச்சகத்தாரிடம் சொன்ன சொல்லுக்கு நான் என்ன பதிலைச் சொல்லப் போகிறேன்? என்று எழுத்தாளர் குழம்பிப் போயிருக்கிறார்.
நமச்சிவாயத்தைப் போலவே இன்னும் பலர் எழுத்தாளரைக் கண்டால் கள்ளக் களவில் சாராயம் விற்கும் கிழவி இராசம்மா பொலிஸ்காரனைக் கண்டதும் ஓடி ஒளிப்பதைப் போல ஒளிந்து திரிகிறார்கள்.
ஆனாலும் எழுத்தாளர், இவர்களிடம் பணம் கேட்டுப் போவதை முற்று முழுதாகவே நிறுத்திக் கொண்டதை வெளியே சொன்னால் தான் நூல் வாங்கியவர்கள் உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். இந்தச் செய்தியை மிக விரைவில் பத்திரிகைகளில் வெளியிட அவர் திட்டம் போட்டிருக்கிறார் என்று கேள்வி.
அமிர்தகழியான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக