அந்த செல்போன் காட்பாடி தாலுகாவை சேர்ந்த ரவி என்பவரது பெயரில் வாங்கப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய அமைச்சர் இந்த பிரச்சனை குறித்து தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் இதுகுறித்து கவனஈர்ப்பு பிரச்சனையை எழுப்பினார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியிடம் வேலூர் சிறை அறையிலிருந்து செல்போன் கண்டு பிடிக்கப்பட்டது குறித்து நான் சில நாட்களுக்கு முன்பு இந்த அவையில் பிரச்சனை எழுப்பினேன். அதன் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுவரை அவர் கைது செய்யப்பட்டாரா? தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளரா? அல்லது வேறு சிறைக்கு மாற்றப்போகிறீர்களா? இந்த பிரச்சனையில் மேல் விவரம் என்ன? என்று அறிய விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.இதற்கு பதில் அளித்து சட்ட அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
இந்த பிரச்சனைக்கு ஏற்கனவே இந்த அவையில் நான் பதில் அளித்துள்ளேன். கடந்த 20ந் தேதி காலை 6 மணியளவில் வேலூர் மகளிர் சிறையில் அதிகாரிகள் வழக்கமான சோதனை செய்தபோது நளினியின் அறைக்கும் சென்றிருக்கிறார்கள். அதிகாரிகளைப் பார்த்ததும் நளினி வைத்திருந்த ஒரு துணிப்பையை எடுத்து வெளியே வீச முயன்றிருக்கிறார். அதை போலீசார் கைப்பற்றி பார்த்ததில் அதற்குள் ஒரு செல்போன் இருந்ததை கண்டு பிடித்தனர்.
உடனடியாக அந்த செல்போனை நளினி பறித்து அங்கேயிருந்த பக்கெட் தண்ணீரில் போட்டு டாய்லெட்டில் ஊற்றியிருக்கிறார். சிறை யின் துணை அதிகாரி டாய்லெட்டில் கையை விட்டு அந்த செல்போனை கைப்பற்றி கியூ பிரிவு போலீசுக்கு அனுப்பியிருப்பதாக அன்று அவையில் நான் தெரிவித்தேன்.
இதுதொடர்பாக அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, சிறையில் செல்போன் வைத்திருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் நளினியின் மீது சிறைத்துறை கண்காணிப்பாளர் வழக்குப்பதிவு செய்துள்ளார். அதை ஏற்றுக்கொண்டு கியூ பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
செல்போனை ஆய்வு செய்ததில் அந்த செல்போனுக்கு நான்கு எஸ்எம்எஸ் தகவல்கள் வந்திருந்தன. 12 எஸ்எம்எஸ் தகவல்கள் சென்றுள்ளது. 10 மிஸ்டு கால்கள் பதிவாகியிருந்தது. 8 ரிசீவ்டு கால்களும், 18 டயல்டு கால்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செல்போனிலிருந்து 8 முறை இங்கிலாந்துக்கும், ஒரு முறை இலங்கைக்கும் பேசப்பட்டுள்ளது.
இதுபோக 22 முறை தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு பேசியதாக பதிவாகியுள்ளது. அதில் ஐந்து முறை சென்னைக்கு தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. நளினியின் வக்கீலுக்கும் இந்த செல்போனிலிருந்து நளினி பேசியுள்ளார். இந்த செல்போன் காட்பாடி தாலுகா 4/26, கனகசமுத்திரம் என்ற முகவரியில் ரவி என்பவரது பெயரில் வாங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 13ந் தேதி இந்த செல்போன் ஆக்டிவேட் ஆகியிருக்கிறது. செல்போனின் எண் 9629988352 இந்த பிரச்சனையில் கியூ பிரிவுபோலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.நளினியின் அறைக்குள் செல்போனை வைத்து எடுத்ததாக அவரது வழக்கறிஞர் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த புகாரும் தரப்படவில்லை. இதுவரை இந்த தகவல்கள்தான் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக