அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

‘ரயில் பயணங்களில்’ பட ஹீரோ ஸ்ரீநாத் தற்கொலை!

ரயில் பயணங்களில் படத்தில் நாயகனாக நடித்த பிரபல நடிகர் ஸ்ரீநாத் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 50.

மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீநாத்.

தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கும் சிகார் என்ற பட ஷீட்டிங் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கோதமங்கலத்தில் நடந்து வருகிறது. இதில் நடிகர் ஸ்ரீநாத்தும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். இன்று காலை வெகு நேரமாகியும் அவர் தங்கியிருந்த அறைக் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அறையின் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர்.

அங்கு அவர் கைமணிக் கட்டின் ரத்த நாளத்தை கத்தியால் வெட்டி தற்கொலை செய்தபடி பிணமாகக் கிடந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோதமங்கலத்தில் உள்ள பேசெல்லியாஸ் மிஷன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

1980ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட ரயில் பயணங்களில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் ஸ்ரீநாத். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

பின்னர் மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். ஷாலினி என்டே கூட்டுக்காரி, ஏது நிஜங்களுடே கதா, ஒரு சி.பி.ஐ. டைரிக்குறிப்பு, கிரீடம் போன்ற பெரிய வெற்றிப் படங்களில் நடித்தார்.

மலையாளத்தில் கடைசியாக இவர் கேரள கேஃப் என்ற படத்தில் நடித்தார். சினிமா படங்களுடன் மலையாள டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார்.

தமிழில் பல வருடங்களுக்குப் பிறகு சில படங்களை ஒப்புக் கொண்டிருந்தார். விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ராணி மகாராணி என்ற தொடரிலும் நடித்து வந்தார்.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் சகோதரியான நடிகை சாந்தி கிருஷ்ணாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு பிறகு வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவின் ஆட்டிங்கள் தொகுதியில் சிவசேனா வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக