அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

உளவியல் தாக்கத்தினால் செஞ்சோலை மாணவி ஒருவர் மரணம்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி ஒருவர் தமது தற்போதைய நிலையினை எண்ணியதால் ஏற்பட்ட உளவியல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். செஞ்சோலை மாணவி இரவீந்திரன் புஸ்மலர்ஜெயந்தி (சாளினி) என்பவரே உயிரிழந்தவராவார்.

மூன்று வயதாக இருக்கும் போது 1994ஆம் ஆண்டு செஞ்சோலையில் இணைந்து கொண்ட சாளினி தனது இறுதிக்காலம் வரையில் செஞ்சோலையிலேயே வாழ்ந்துவந்தார்.
செஞ்சோலை மாணவிகளிடையே கல்வி, கலை மற்றும் விளையாட்டில் சாளினி முன்னணியில் விளங்கி வந்தார்.

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குறித்த மாணவி போர் மற்றும் அதன் பின்னான நெருக்கடிகள் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா ரம்பைக்குளத்தில் உள்ள டொன்பொஸ்கோ பெண்கள் சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்ற அவர் போரின் பின்னர் தான் மீண்டும் அனாதையாக்கப்பட்டதாக சக மாணவர்களிடம் மிகுந்த கவலை வெளியிட்டதாக அவருடன் பராமரிக்கப்பட்டு வருகின்ற மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

போரின் பின்னர் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச் சோலையில் பராமரிக்கப்பட்டுவந்த குழந்தைகள் முதல் மாணவர்கள் வரையான நூற்றுக்கணக்கான மாணவர்கள் சரியான பராமரிப்பின்மை, உரிய கவனிப்பின்மை உட்பட்ட நெருக்கடிகளால் மிகுந்த உளவியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

தமது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தம்மை ஆற்றுப்படுத்த யாராவது முன்வருவார்களா? என்ற ஏக்கம் அந்த மாணவர்களிடம் அதிகரித்துள்ளமையை சாளினியின் பிரிவு வெளிப்படுத்துகின்றது என்று காந்தரூபன் அறிவுச் சோலையின் மூத்த மாணவன் ஒருவர் தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக