அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 27 செப்டம்பர், 2012

வைகோவின் பிரபாகரன் பாசம்?

மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஐயாவை கொழும்பில் சந்திக்க முடிந்தது. நீண்டகாலத்திற்குப்பின்னர் சந்தத்ததால் நீண்ட நேரம் போசவேண்டியிருந்தது. பேசிக்கொண்டிருந்தோம். அவரும் நானும் உரையாடிக்கொண்டிருந்தபோது, வைகோ மத்தியப் பிரதேசத்தில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக போராட்டம் நடாத்திக்கொண்டிருந்தார்.

ஐயா, ஈழத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இப்போது சந்திக்கின்ற முக்கிய பிரச்னைகளில் ஒன்று தமது இடிந்துபோன வீடுகளை மீண்டும் அமைத்துக்கொள்வதற்காக காத்திருப்பதுதான். இந்தியா கட்டித்தருவதாக சொன்ன ஐம்பதாயிரம் வீடுகளை துரிதகதியில் கட்டிக்கொடுத்தாலே இங்குள்ள மக்கள் தத்தமது வீடுகளிலாவது குடியேறிவிடுவார்கள். உங்கள் நண்பர் வைகோவிடம் சொல்லி அதற்காக அவரை போராட்டம் நடாத்தச் சொல்லுங்களேன் என்றேன்.

வைகோ போன்றவர்கள் ஈழத்தமிழர்களுக்காக எதையாவது செய்யவேண்டும் என்று விரும்பினால், முதலில் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு செய்வதாகச் சொன்ன உதவிகளை உடனே செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடாத்துவதான் அவர்கள் செய்யவேண்டிய உடனடி தேவை என்றேன் நான்.

வைகோ உள்ளிட்ட தமிழகத் தலைவர்களுக்கு மத்திய அரசில் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஈழத் தமிழர் சிக்கலில் செல்வாக்கு மிகக் குறைவு என்றார் சச்சிதானனந்தன்.

பிரபாகரனின் தாயார் ஒருதடவை சென்னைக்கு வைத்திய சிகிச்சைக்காக சென்றபோது விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார். அதனைக் கண்டித்து வைகோ விமானநிலையத்தில் போராட்டம் நடாத்தினார்.

இந்திய நடுவண் அரசை வைகோ மற்றும் தமிழகத் தலைவர்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதற்கு ஓர் நிகழ்ச்சியை எடுத்துக் கூறினார் மறவன்புலவு சச்சிதானந்தன்.

அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார். வாஜ்பாய் அரசில் வைகோவின் மதிமுக பங்காளிக்கட்சி. அவரது கட்சியைச்சேர்ந்த கண்ணப்பன் மத்திய அமைச்சர். அப்போது வைகோவின் மகனுக்கு திருமணம். சென்னை காமராசர் மண்டபத்தில் திருமண விழாவிற்கு சென்றிருந்த பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையும், தயரார் பார்வதியும், காசி ஆனந்தன், மறவன்புலவு சச்சிதானந்தன் ஆகிய நால்வரும் மேடைக்கு அழைத்துச்செல்லப்பட்டு முன்வரிசையில் அமரவைக்கப்பட்டனர்.

அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி அந்த திருமணவிழாவிற்கு வருகைதருவதாக செய்தி வந்ததும், இவர்கள் நால்வரும் அவசரம் அவசரமாக மேடையிலிருந்து இறக்கப்பட்டு, மண்டபத்திலுள்ள அறை ஒன்றில் வைத்துப் பூட்டப்படுகின்றனர். அத்வானி மண்டபத்திலிருந்து செல்லும்வரை இவர்கள் நால்வருக்கும் அந்த அறையில் சிறைவாசம்தான்.

மறவன்புலவு சச்சிதானந்தன் இவ்வாறு கூறிய செய்தியைக் கேட்டேன்.
இந்த வைகோதான் அப்போதும், இப்போதும் ஈழத்தமிழ் மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்றார்.

இந்தத் தகவலை சச்சிதானந்தம் ஐயா சொன்னபோது, அதற்குப் பின்னரும் வைகோ போன்றவர்களைப்பற்றி அவருடன் கதைப்பதே பயனற்றது என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது.

--குகநாதன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக