அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 1 நவம்பர், 2012

ஒரே ஒரு தீக்குச்சியால் பிரபாகரனை கதி கலங்க வைத்த அன்ரன் பாலசிங்கம்!

1980 களில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இயக்கங்கள் பலவும் ஈடுபட்டு இருந்தன. இவற்றுள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ புரட்சிகர அமைப்பு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியன மிக முக்கியம் ஆனவை.

ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழப் புரட்சிகர அமைப்பு ஆகிய மூன்றும் 1984 ஆம் ஆண்டு கூட்டுச் சேர்ந்து இயங்கத் தொடங்கின. இவர்களின் கூட்டமைப்புக்கு ஈழ தேசிய விடுதலை முன்னணி என்று பெயரிடப்பட்டது. பின்னர் இக்கூட்டமைப்பில் புலிகள் இயக்கமும் சேர்ந்து கொண்டது. இதற்காக நான்கு இயக்கங்களினதும் தலைவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஓய்வு விடுதி மண்டபம் ஒன்றில் ஏப்ரல் மாத நடுப் பகுதியில் சந்தித்து கூட்டு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டனர். தொடர்ந்து இவர்கள் தமிழ்நாட்டில் அடிக்கடி ஒன்றாக சந்தித்து மந்திராலோசனை கூட்டங்களை நடத்தியும் வந்திருக்கின்றனர்.

பத்மநாபா, சிறீ சபாரத்தினம், பாலகுமார், பிரபாகரன் ஆகிய நால்வருடன் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் இம்மந்திராலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று வந்து இருக்கின்றார்.

இவர்கள் ஒரு நாள் இரவு அவசரமாக சந்தித்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. அறையில் ஒரே கும்மிருட்டு.

அன்ரன் பாலசிங்கம் சுருட்டு பிடிக்கும் பழக்கம் உடையவர். எனவே எப்போதும் கூடவே தீப்பெட்டி வைத்திருப்பார். இவர் தீக்குச்சியை பற்ற வைத்து அறையில் வெளிச்சத்தை உருவாக்கினார்.

மிக பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் அமர்ந்து இருந்து பேசிக் கொண்டிருந்த அறையில் பிரபாகரனை காணவில்லை. ஏனையோர் காணப்பட்டனர்.

பிரபாகரன் எங்கே போய் இருப்பார்? என்று பாலா உட்பட அனைவர் முகத்திலும் திகைப்புக் குறி. இவர்களின் திகைப்புக் குறி மறைகின்றமைக்கு முன்பாகவே மறைவிடம் ஒன்றில் இருந்து பிரபாகரனின் அவசர குரல் கேட்டது.

அண்ணர்.... தீக்குச்சியை அணையுங்கள்... அணையுங்கள் என்று மிகவும் பதற்றம் கலந்த குரலில் பிரபாகரன் கத்தினார். எல்லோரும் அத்திசையில் பார்த்தனர். ஆளை மட்டும் காண முடியவில்லை.

காரணம் தெரியாமலேயே, புரியாமலேயே தீக்குச்சியை அணைத்தார் பாலா. மின்சாரம் மீண்டும் வருகின்ற வரை மர்மம் நீடித்தது.

மின் குமிழ்கள் ஒளிரத் தொடங்கின. எதுவுமே நடக்கவில்லை என்பது போல எங்கிருந்தோ வெளிப்பட்டு வந்து ஆசனத்தில் அமர்ந்து கொண்டார் பிரபா.

அன்ரன் பாலசிங்கத்துக்கு பொறுமை இல்லை.

“ ஏன் இப்படி மர்மமாக மறைந்தீர்கள்? ”

பிரபாகரனிடம் வினவினார்.

“ பிறகு சொல்கின்றேன். ”

மந்திராலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்தார்.

பின் பிரபாவும், அன்ரனும் ஒன்றாக வாகனத்தில் கிளம்பினர்.

“ மின்சாரம் திடீரென்று நின்றதும் நான் முன்னெச்சரிக்கை ஆகி விட்டேன். யாரேனும் எதிரிகள் வந்து விட்டார்களோ? என்று சந்தேகம் எழுந்தது. வெளிச்சத்தில் எங்கள் முகங்களை அவதானித்து விட்டு.... மின்சாரத்தை நிறுத்தி விட்டு.... எதிரி சுடத் தயாராகி விட்டானோ..? என்று மனதில் பயம் எழுந்தது. ஆகவேதான் உஷாராகி, ஓடி ஒளிந்து மறைந்தேன். ”

இவ்வாறு அன்ரனுக்கு விளக்கம் கொடுத்தார் பிரபாகரன்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் தீக்குச்சியை கொளுத்தி வெளிச்சத்தை உருவாக்க வேண்டாம் என்று அன்புக் கட்டளையும் பிறப்பித்தார்.

பிரபாகரன் மின்வெட்டு நேரத்தில் எங்கே சென்று இருந்தார்? என்பது ஏனைய தலைவர்களையும் குடைந்து கொண்டிருந்த கேள்வியாக இருந்தது. இவர்களில் ஒரு தலைவர் அன்ரன் பாலசிங்கத்திடம் நாசுக்காக வினவி விடயத்தை மெல்லத் தெரிந்து கொண்டார். பின் எல்லோருக்குமே விடயம் மெல்ல மெல்ல கசிந்து விட்டது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக