அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 26 ஜனவரி, 2013

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 18

விடுதலைப் புலிகளிடம் அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக விடுதலைப் புலிகளின் தேவைப்பட்டியல் உள்ளடங்கிய பட்டியலுடன் நோர்வேக் குழுவினர் உடனடியாகவே தென்பகுதிக்கு விசேட உலங்குவானூர்தியில் விரைந்து சென்றனர். இவ்வாறு சென்ற நோர்வேக் குழுவினர் அரசமட்டத்தில் பேச்சுவார்த்தைக் குழுவின் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.

இவ்வாறு அரச தரப்பிற்கும் நோர்வேக் குழுவினரிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் விடுதலைப் புலிகள் கோரியுள்ள விபரப் பட்டியலில் அடங்கியுள்ள பொருட்களை வழங்குவது எதிர்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தலாம் என அரச தரப்பில் நோர்வே குழுவிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட நோர்வே குழுவினர், இருந்தபோதிலும் சமாதான முயற்சிகளில் இருதரப்பும் சில விட்டுக் கொடுப்புகளை செய்தால்தான் பேச்சுவார்த்தையை முன்னோக்கி நகர்த்த முடியும். நீங்கள் இதற்கு உடன்பட மறுத்தால் இதனையே ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகிவிடுவார்கள். எனவே இராஜதந்திர ரீதியாக அரசாங்கம் இவ்விடயத்தை அணுகவேண்டும்.நீங்கள் இதற்கு உடன்படுவீர்களானால் புலிகள் ஏதோ ஒரு கட்டத்தில் முரண்டு பிடித்தால் அரசாங்கம் சில விட்டுக் கொடுப்புகளை ஏற்கனவே செய்துள்ளது இவ்வாறு நீங்களும் செய்யவேண்டும் என புலிகளிடம் நாங்கள் அழுத்தமாக கூறமுடியும். இதைவிட புலிகள் கோரியுள்ள தொடர்பு சாதனத்தை நோர்வே வழங்குகின்ற போதிலும் அதனை பயங்கர வாதத்திற்கு துணைபோகின்ற விதத்தில் பயன்படுத்துவதற்கு நோர்வே அரசாங்கம் ஒருபோதுமே அனுமதிக்காது. இவ்விடயத்தில் புலிகளும் எங்களுடன் உடன்பாட்டை எட்டியுள்ளார்கள். எனவே நீங்கள் கலக்கமடையாமல் அல்லது தயக்கமடையாமல் நாங்கள் உதவுவதற்கு அனுமதிக்க வேண்டுமென இலங்கை அரசிடம் நோர்வே குழுவினர் கேட்டுக்கொண்டனர்.

இதனை அடுத்து புலிகளிற்கு நவீன வானொலி உபகரணங்கள் தொடர்பு சாதனங்கள் என்பன வன்னிப் பகுதிக்கு எடுத்துச் செல்வதற்கு அரச தரப்பும் அனுமதி வழங்கினர். அதைத் தொடர்ந்து வலுமிகுந்த வானொலிக் கருவிகள் நோர்வேயால் எடுத்துச் செல்லப்பட்டு வன்னியில் விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்டன. விடுதலைப் புலிகள் இந்தக் கருவிகளை பெற்றதுடன் திருப்தியடையவில்லை. இதைவிட வலுவான வானொலி கருவிகளையும், தொடர்பாடல் சாதனங்களையும் வன்னிப் பகுதிக்கு எடுத்துவரவேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். இதற்கென பதுமன் என்ற போராளியை விடுதலைப் புலிகள் வெளிநாட்டு சுற்றுலாவிற்கென அனுப்புவது போன்று முடிவெடுத்தனர்.

இவரது மேற்பார்வையில் ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள தொலைத் தொடர்பு சாதனங்களின் வானொலி செயற்பாடுகளின் நுணுக்கங்கள் பற்றி ஆராய்கின்ற பொறிமுறை ஒன்றை வகுக்கும் நோக்குடன் புலிகளால் விரிவான திட்டம் வகுக்கப்பட்ட போதிலும் இத்திட்டம் இடையில் பிசுபிசுத்துப் போன காரணத்தால் கடைசி வரைக்கும் நிறைவு பெறவில்லை.

விடுதலைப் புலிகள் தங்களது வானொலிக்குரிய உபகரணங்களை கொள்வனவு செய்தது போன்று தங்களது பத்திரிகைக்கும் நவீன ஓவ்செற் மெசின் ஒன்றை சிங்கப்பூரில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தனர். இத்திட்டமும் கைகூடாமல், இறுதியில் ஜேர்மனியில் இருந்து ஒரு ஓவ்செற் மெசின் இறக்குமதி செய்யப்பட்டு வன்னிப் பகுதிக்கு எடுத்து வரப்பட்டது. இந்த மெசினைக் கொண்டுவருகையில், ஓமந்தையில் படையினர் தடைவிதித்த போதும் நோர்வேயின் அனுசரணையுடன் அது தடையின்றிக் கொண்டுவரப்பட்டது.

இந்த ஓவ்செற் மெசின் ஈழநாதம் பத்திரிகைக்கெனவே எடுத்துவரப்பட்ட போதிலும், ஈழநாதத்திற்கு அது வழங்கப்படாமல் நேரடியாக புதுக்குடியிருப்பில் இருந்த பிரபாகரனின் தனிப்பட்ட பிரத்தியேக அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு வைத்து புலிகளின் பிரச்சார சுவரொட்டிகள் அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.
இதே வேளை புலிகளின் தேவைப் பட்டியல் நோர்வேயிடம் கையளிக்கப்பட்ட விடயத்தை அன்ரன் பாலசிங்கத்தின் ஊடாக யாழிலுள்ள வித்தியாசமான பத்திரிகையின் வித்தியாசமான ஆசிரியரும் அறிந்துகொண்டார்.

இதனை அடுத்து அவரிற்கு தோன்றிய நப்பாசையின் வெளிப்பாடாக யாழ்ப்பாணத்தில் ஒரு வானொலியை இயங்க வைப்பதற்கும் அதற்குரிய உதவிகளையும், அனுமதியையும் புலிகளிடம் பெறுவதற்கும் அனுமதி கோரியிருந்தார். இவரின் கோரிக்கையை தான் தலைவரிடம் எடுத்து விளக்குவதாகவும் எப்படியும் அனுமதியை பெற்றுத் தருவேன் எனவும், அன்ரன் பாலசிங்கம் யாழ்ப்பாணத்தில் முன்னணி பத்திரிகை என்று கூறும் பத்திரிகையின் வித்தியாசமான ஆசிரியரிடம் உறுதியளிதிருந்தார்.

இவ்விடயம் தமிழ்ச் செல்வனிடம் கூறப்பட்ட போது தலைவர் இதற்கு ஒருபோதும் உடன்பட மாட்டார். சில வேளைகளில் தலைவர் உடன்பட்டாலும் பொட்டம்மான், ஒரு போதுமே தலைவரை உடன்படுவதற்கு விடமாட்டார். எனவே இவ்விடயம் தொடர்பில் கதைப்பதில் பிரயோசனம் இருக்கப் போவதில்லை என எடுத்துக் கூறினார்.

தமிழ்ச் செல்வனிற்கும் அன்ரன் பாலசிங்கத்திற்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடலிலேயே தமிழ்ச்செல்வன் இதனைச் சொன்னார். எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத அன்ரன் பாலசிங்கம் நீர் கதையும் நான் தலைவருடன் கதைத்து உடன்பட வைப்பேன். இன்னுமொரு வானொலி எங்களிற்கு சார்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வருவது நல்லது தானே, ஐசே நீர் ஏன் பயப்படுகிறீர்? நீர் கதையும் தலைவருடன் நானும் கதைப்பேன் என்று கூறிவிட்டு தொடர்பை பாலசிங்கம் துண்டித்து விட்டார்.

இதன்பின் தமிழ்ச்செல்வன் பிரபாகரனிடம் நேரில் இந்த விடயம் தொடர்பாகக் கூறியபோது கடும் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் ஏற்கனவே இயக்கத்தை விற்கின்ற நடவடிக்கையில் குறித்த பத்திரிகை ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் அவர்களுக்கு வானொலியையும், இயக்குவதற்கு அனுமதி அளித்துவிட்டால் ஒட்டு மொத்த இயக்கத்தையுமே அந்த வித்தியாசமான ஊடகவியலாளர் விற்றுவிடுவார் என்று தமிழ்ச் செல்வனிடம் கோபத்தோடு கூறினார். மேலும், இந்த விடயம் தொடர்பில் நீங்கள் என்னுடன் இனிமேல் கதைக்கக் கூடாது. பொட்டம்மானுடன் கதைத்து அவர் அனுமதியை பெறுமாறு பாலா அங்கிளிடம் கூறுங்கள் எனவும் பிரபாகரன் மிகக் கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

இந்த விடயத்தை தமிழ்ச் செல்வன் பாலசிங்கத்திற்கு கூறியதை அடுத்து முதலில் கடுப்படைந்த பாலசிங்கம் பின்னர் தமிழ்ச்செல்வன் கூறியதை ஏற்றுக்கொண்டார். இதேவேளை புலிகளுக்கு நோர்வேயிடமிருந்து வானொலிக்காக கிடைத்திருந்த நவீன சாதனங்கள் பொருத்தப்பட்ட வானொலிச் சேவை ஆரம்பிக்கப்பட்டபோது இச்சேவை வன்னி உட்பட தமிழ்நாடு வரையும் விஸ்தரிப்புப் பெற்றது. இந்த விஸ்தரிப்பானது விடுதலைப் புலிகளை அழிக்கும் செயற்பாட்டில் எந்தளவு தூரம் பங்கு வகித்தது? தமிழ் ஊடகங்கள் விடுதலைப் புலிகளை அழித்தமை எவ்வாறு என்பது தொடர்பில் தொடர்ந்து பார்ப்போம்.

(வே. அர்ச்சுணன்)
(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக