அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 26 ஜனவரி, 2013

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்! பகுதி 19

இந்தியாவின் தமிழ்நாடு வரையும் விடுதலைப் புலிகளின் புலிகளின் குரல் வானொலிச் சேவை விஸ்தரிப்புப் பெற்றிருந்த போதிலும் இந்த விஸ்தரிப்பானது நீண்டநாட்களுக்கு நிலைத்திருக்கவில்லை. விடுதலைப் புலிகளால் நோர்வே அனுசரணையுடன் கொள்வனவு செய்யப்பட்டிருந்த நவீன வானொலிக் கருவியானது மீண்டும் விடுதலைப் புலிகளுக்கும் அரசபடைகளுக்கும் இடையில் போர் மூண்டதைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தங்கள் வானொலிச் சேவையை விடுதலைப் புலிகள் மட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

இதற்கு பிரதான காரணமாக இரண்டு விடயங்கள் அமைந்திருந்தன. ஓன்று நீண்ட தூரத்திற்கு அதாவது தமிழ்நாடு வரைக்கும் ஒலிபரப்பை விஸ்தரிக்கக் கூடியதாக இருந்த நவீன கருவியில் பொருத்தப்பட்டிருந்த ஒரு சொவ்ற்வெயார் (மென்பொருள்) பழுதடைந்துவிட்டது. இந்த மென்பொருளை யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுது விடுதலைப் புலிகள் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டுவந்து சேர்ப்பது பெரும் சிரமமாக இருந்தது.

தமிழ்ச்செல்வன் நோர்வேயுடன் தொடர்பை ஏற்படுத்தி வடக்குக்கு வருகின்ற ஐ.நா. நிறுவனம் ஒன்றின் ஊடாக இதனை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டுவருவது தொடர்பில் இரகசியப் பேச்சுவார்த்தை ஒன்றை எரிக்சொல்ஹெய்முடன் தொலைபேசியில் மேற்கொண்டிருந்தார். இதற்கு சொல்ஹெம் உடனடியாகவே மறுப்புத் தெரிவித்துவி;ட்டார். நாங்கள் அனுசரணையாளர்களாக மட்டுமே செயற்பட்டு வருகிறோம்.அதுவும் தற்போது பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் உங்களுக்கு வானொலிக் கருவிக்குரிய உபகரணத்தை அரசாங்கத்திற்குத் தெரியாமல் நாங்கள் எப்படி உங்களுக்குத் தர முடியும்? நாங்கள் உங்களைப் போன்று செயற்படமுடியாது. இறைமையுள்ள இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் மட்டுமே இதனைக் கொண்டுவர முடியும். நீங்கள் விரும்பினால் உங்கள் கோரிக்கையாக இதை நாங்கள் அரசாங்கத்திடம் முன்வைக்கலாம்.

அரசாங்கம் சிலவேளைகளில் தனது அரசியல் பரப்புரைகளுக்காக உடன்படலாம். அல்லது யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் ஏதாவது நிபந்தனைகளை முன்வைக்கலாம். இதற்கு உங்களால் உடன்படமுடியுமாக இருந்தால் நாங்கள் அரசாங்கத்துடன் இது தொடர்பில் பேசிப் பார்க்கலாம் எனக் கூறியபோது தமிழ்ச்செல்வன் எங்களுக்கு வானொலிக்கருவி தேவையில்லை. அரசிடம் நீங்கள் இத்தகைய கோரிக்கையை விடவும் வேண்டாம். நாங்கள் அரசாங்கத்திடம் மண்டியிடமாட்டோம். உங்களிடம் மட்டுமே உதவி கேட்டோம். உங்களால் முடியாவிட்டால் இவ்விடயத்தை கைவிடுவோம் நன்றி வணக்கம் எனக்கூறி சொல்ஹெய்முடனான உரையாடலை நிறுத்திவிட்டார்.

இதைவிட விடுதலைப் புலிகள் தமது புலிகளின் குரல் சேவையை பெரியளவில் விஸ்தரிக்க முடியாமல் போனதிற்கான இரண்டாவது காரணம். புலிகளின் குரல் சேவை கிளிநொச்சியில் நடத்தப்பட்டு அது அரசாங்கத்தின் விமானத் தாக்குதலிற்கு இலக்காகியதைத் தொடர்ந்து விசுவமடுப் பகுதிக்கு மாற்றப்பட்டது. அங்கு அது மறைமுகமாகவே இயங்கிவந்தது. வெளிப்படையாக இதனை இயக்குவதாக இருந்தால் நவீனகருவிகளைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக நோர்வே ஊடாக ஏற்கனவே பெற்றுக்கொள்ளப் பட்ட நவீனகருவியைப் பயன்படுத்தி இச் சேவையை நடத்தியிருந்தால் அது அரசாங்கத்தின் ராடார் திரையில் இலகுவில் தென்பட்டுவிடும். இதனால் தங்களது ஒலிபரப்பு நிலையம் இருக்கும் இடத்திற்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் புலிகள் இச்சேவையை மட்டுப்படுத்திக் கொண்டனர்.

புலிகளின் குரல் வானொலிச் சேவை தமிழ்நாட்டிற்கு விஸ்தரிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் கடும் மகிழ்ச்சியிலும் ஆனந்தத்திலும் கூத்தாடிய தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் சிலர் இச்சேவை மட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடும் கவலை அடைந்தனர். உடனடியாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த நடேசனுடன் தொடர்புகொண்டு இச்சேவையை தமிழ்நாடு வரையும் விஸ்தரியுங்கள் இச்சேவையை நீங்கள் நிறுத்தியுள்ளமையால் நாங்கள் இங்கு அரசியல் செய்யமுடியாத சூழல் உருவாகப் போகிறது என சீமான்,வை.கோபாலசாமி, திருமாவளவன் போன்றவர்கள் நடேசனிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்குப் பதில் அளித்த நடேசன் நாங்கள் தற்போது நடத்துகின்ற சேவைகூட நிரந்தரமானதல்ல ஏனென்றால் நாங்கள் கடுமையான நெருக்கடிகளுக்குள் இருக்கிறோம். அடுத்தகட்டம் தொடர்பில் முடிவெடுக்க முடியாத அளவிற்கு நாங்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். உங்களது நிலைமைகள் எங்களிற்கு விளங்குகிறது. ஆனால் எங்களால் எதுவும் செய்யமுடியாது நீங்கள்தான் மக்களை விழிப்படையவைத்து எங்களுக்கு ஆதரவாக போராட்டங்களில் தமிழ்நாட்டு மக்களை ஈடுபட வைக்கவேண்டும் என நடேசன் அவர்களுக்குச் சொன்னார்.

புலிகளை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் நடத்தும் சீமான், வை.கோபாலசாமி, திருமாவளவன் போன்றவர்களுக்கு புலிகளின் குரல் சேவை நிறுத்தப்பட்டமை பாதிப்பை ஏற்படுத்திய போதிலும் தொடர்ந்தும் தமிழ்நாட்டு மக்களை உசுப்பேற்றுவதை அவர்கள் விடவில்லை. தொடர்ந்தும், மக்களை உசுப்பேற்றும் செயற்பாட்டில் தீவிரமாகவே செயற்பட்டு வந்தனர். இவர்களின் சுயலாப அரசியல் நோக்கத்தை ஓரளவிற்கு தெரிந்துகொண்ட தமிழ்நாட்டுமக்கள் இவர்களது செயற்பாடுகளுக்கு இறுதிநாட்களில் ஒத்துழைப்பு வழங்க மறுத்தனர். ஆனால் முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னர் கூட தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயற்பாட்டில் இருந்து இவர்கள் பின்வாங்கவே இல்லை.

தமிழ்நாட்டு அரசியலின் நிலவரங்களைப் பார்ப்பதை நிறுத்திக்கொண்டு விடுதலைப் புலிகளை அழித்த தமிழ் ஊடகங்களின் வரிசையில் புலிகளின் குரல் நிறுவனத்தின் செயற்பாடுகளை நாம் பார்க்கலாம். புலிகளின் குரல் நிறுவனமானது குறிப்பாக அரசியல்துறை செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துவந்தது. அதையடுத்து யுத்தமுனை செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துவந்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் ஏனைய துறைகளின் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் ஏனைய துறைகளின் தளபதிகள் மற்றும் துறைசார் பொறுப்பாளர்கள் புலிகளின் குரல் நிறுவனத்தின் மீது கடுப்புடனேயே இருந்தனர். இவ்வாறு புலிகளின் குரல் நிறுவனம் தொடர்பில் தளபதிகள் யாராவது பிரபாகரனிடம் முறையிட்டால் பிரபாகரன் இவ்விடயம் தொடர்பில் தமிழ்ச்செல்வனிடம் முறையிடுங்கள் என பந்தை தமிழ்ச்செல்வன் பக்கம் அடித்துவிடுவார்.

தமிழ்ச்செல்வனிடம் தளபதிகள் யாராவது இவ்விடயம் தொடர்பில் முறையிட்டால் தமிழ்ச்செல்வன் இவ்விடயம் தொடர்பில் தமிழன்பனிடம் (ஜவான்) சொல்லுங்கள், உங்களது செய்திகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் தருவார்கள் எனக் குறிப்பிடுவார். இச்சூழ்நிலையில் தமது துறைகள் சார்ந்த அல்லது பொறுப்புகள் சார்ந்த செயற்பாடுகள் மக்களிற்கு தெரியவேண்டும் குறிப்பாக புலிகளின் குரல் ஊடகத்தில் வந்தால் தலைவர் தமது செயற்பாடுகளை பாராட்டுவார் என்ற ஆசையில் ஜவானிடம் சென்று தளபதிகள், பொறுப்பாளர்கள் முறையிடுவார்கள் ஆனால் ஜவான் இதற்கு நான் எதுவும் செய்யமுடியாது எமது நிறுவனத்தின் பிரதமஆசிரியர் தவபாலன் (இறைவன்) அவர்களிடம் நீங்கள் தெரியப்படுத்துங்கள் எனக் குறிப்பிடுவார். இறைவனிடம் தளபதிகள், துறைசார் பொறுப்பாளர்கள் சென்று கதைத்தால் இறைவன் எல்லாவற்றிற்கும் ஓம் என்று தலையாட்டுவார். ஆனால் நடைமுறையில் தான் நினைத்ததை மட்டும் செய்துகொண்டிருப்பார். இறைவனை கட்டுப்படுத்த தமிழ்ச்செல்வனாலும் முடியாது ஜவானாலும் முடியாது.

ஏனெனில் இறைவனே புலிகளின் குரல் நிறுவனத்தின் முக்கிய தூணாக விளங்கினார். பெயரளவில் ஜவான் பொறுப்பாளராக இருந்தபோதிலும் நடைமுறையில் இறைவன் எனப்படுகின்ற தவபாலனே இதன் முக்கிய பொறுப்பாளராக விளங்கினார். ஆரம்பத்தில் இவர் இந்த நிறுவனத்தில் 3000ரூபா சம்பளத்திற்கு பணியாளராக உள்வாங்கப்பட்டு பின்னர் 5000ரூபா சம்பளம் பெற்று அதன்பின்னர் 20000ரூபா வரை சம்பளம் பெற்றுவந்தார். ஆனால் ஒருகட்டத்தில் தன்னை முழுமையான போராளியாக இணைத்துக்கொண்டு தவபாலன் என்ற பெயரை இயக்க நடைமுறைகளுக்கு அமைவாக மாற்றி இறைவன் என்ற நாமத்தை சூடிக்கொண்டார். இறைவன் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டாரா? அல்லது ஆக்கப் பணியில் ஈடுபட்டாரா அல்லது அழித்தல் பணியில் ஈடுபட்டாரா? என்பதை தொடர்ந்து பார்ப்போம்…

(வே. அர்ச்சுணன்)

(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக