அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 22 ஜனவரி, 2013

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 20

விடுதலை புலிகளின் ஆயுத கப்பல்கள் நின்ற இடங்கள் பற்றிய விபரம் கிடைத்த விதம்!

அத்தியாயம் 20

காலை 10 மணி. நான்கு அமெரிக்கர்கள் கொண்ட டீம் ஒன்று இலங்கை கடற்படை தலைமைச் செயலகத்தில் போய் இறங்கினார்கள். அவர்களுக்கு தலைமை தாங்கியவர் ஒரு பெண்; அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வை சேர்ந்தவர்.

அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் அந்த சி.ஐ.ஏ. பெண் அதிகாரி, “விடுதலைப்புலிகளின் ஆயுத கடத்தல் ஆபரேஷன் பற்றி உங்கள் உளவுத்துறைக்கு என்ன தெரியும் என்பதை முதலில் சொல்லுங்கள். சி.ஐ.ஏ.வுக்கு என்ன தெரியும் என்று நாங்கள் சொல்கிறோம்” என்றார்.

இலங்கை கடற்படையின் உளவுப் பிரிவினரும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். தமக்கு உளவுத் தகவல் கிடைத்து, தாம் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் இரண்டை மூழ்கடித்தது பற்றி அவர்கள் விளக்கமாக சொன்னார்கள். இந்த சந்திப்பு 2006-ம் ஆண்டு செப்டெம்பர் இறுதியில் நடைபெற்றது. சந்திப்பு நடப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்புதான், 2006-ம் ஆண்டு செப்டெம்பர் 17-ம் தேதி, புலிகளின் கப்பல் ஒன்றை மூழ்கடித்திருந்தார்கள்.

இலங்கை மட்டக்களப்பில் இருந்து கிழக்கே 240 கி.மீ. தொலைவில், கடலில் வைத்து புலிகளின் இந்த ஆயுதக் கப்பல் இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் சட்டலைட் போன் உரையாடலை ஒட்டுக் கேட்டு, இந்தக் கப்பல் வருவதை தெரிந்துகொண்டு தாம் தாக்கியதாக, கடற்படை உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் அமெரிக்கர்களிடம் தெரிவித்தார்.

இவர்கள் கூறுவதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அமெரிக்க பெண் அதிகாரி, இலங்கை கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை பார்த்து, “நீங்கள் தாக்கி அழித்தது, விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால், அது பிரதான கப்பல் அல்ல” என்றார்.

“முதலில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல் ஆபரேஷனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எங்களிடம் (சி.ஐ.ஏ.-விடம்) முழுமையான தகவல்கள் உள்ளன” என்றவர் அதை விளக்கினார்.

விடுதலைப் புலிகளின் ஆயுத கடத்தல் ஆபரேஷன், மூன்று பிரிவுகளாக நடைபெறுகிறது. முதலில் ஆயுதங்கள் வாங்கப்பட்டு, புலிகளுக்கு சொந்தமான கார்கோ கப்பல்களில் ஏற்றப்படும். இந்த கார்கோ கப்பல்கள், இந்து சமுத்திரத்தில் ஈகுவேட்டர் கோட்டோடு நின்றுவிடும்.

இந்து சமுத்திரத்தில் ஈகுவேட்டர் கோட்டில், கடலில் வைத்து ஆயுதங்கள், புலிகளின் டேங்கர் கப்பல்களுக்கு மாற்றப்படும். இந்த டேங்கர் கப்பல்கள், இலங்கை கிழக்கு கடற்கரையில் இருந்து சுமார் 300 கடல் மைல்கள் வரை வந்து நின்றுகொள்ளும். அதன்பின், மல்ட்டி-டே மீன்பிடி ட்ரோலர்கள் டேங்கர் கப்பல்களை அணுகும். ஆயுதங்கள் இந்த மீன்பிடி ட்ரோலர்களில் ஏற்றப்பட்டு முல்லைத்தீவு கடலை சென்றடையும்.

இப்படித்தான் புலிகளை ஆயுதங்கள் சென்றடைகின்றன” என்று விளக்கிய அமெரிக்க உளவுத்துறை பெண் அதிகாரி, இலங்கை கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை பார்த்து, கேட்டார், “இப்போது நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் இரண்டு வாரங்களுக்கு முன் விடுதலைப் புலிகளின் கப்பலை தாக்கி மூழ்கடித்ததாக சொன்னீர்கள். அதற்குமுன், 2003-ம் ஆண்டிலும், மூழ்கடித்துள்ளீர்கள் அல்லவா… இப்போது சொல்லுங்கள், நீங்கள் தாக்கி அழித்தவை என்ன வகை கப்பல்கள்?”

அட்மிரல் வசந்த கரன்னகொட, “இரண்டுமே டேங்கர் வகை கப்பல்கள்” என்றார்.

“இதிலிருந்து என்ன புரிகிறது? நீங்கள் தாக்கியவை புலிகளின் கார்கோ கப்பல்கள் அல்ல. இடையே நடமாடிய டேங்கர் கப்பல்கள். இவற்றை அழித்தால், அதில் உள்ள சிங்கிள் லோட் ஆயுதங்கள்தான் கடலுக்கு கீழே போகும். புலிகள் சுலபமாக மற்றொரு டேங்கர் கப்பல் வாங்கி மீண்டும் வருவார்கள். இதை முற்றாக நிறுத்த வேண்டும் என்றால், புலிகளின் பிரதான ஆயுத சப்ளை கார்கோ கப்பல்களை அழிக்க வேண்டும்” என்று சொல்லிக் கொடுத்தார் சி.ஐ.ஏ. அதிகாரி.

“இந்து சமுத்திரத்தில் ஈகுவேட்டர் கோடு எமது கடல் எல்லையில் இருந்து தொலைவில் உள்ளது. அங்கே, விடுதலைப் புலிகளின் கப்பல்கள் எங்கே நிற்கின்றன என்பதை தெரிந்து கொள்ளும் வசதிகள் ஏதும் எமக்கு கிடையாதே” என்றார், வசந்த கரன்னகொட

இதற்கு சி.ஐ.ஏ. அதிகாரி, “எங்களால் ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். மறுநாளே அவர் இலங்கையை விட்டு வெளியேறியும் விட்டார்.

அடுத்த ஒரு வாரத்தின்பின், கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து மற்றொரு அழைப்பு. அமெரிக்க தூதரகத்தில் உள்ள ராணுவ தொடர்பு அதிகாரி (The embassy’s military attaché) தொடர்புகொண்டு, மறுநாள் நேரில் வந்து வசந்த கரன்னகொடவை சந்திப்பதாக கூறினார். அவர் வந்தபோது, கையில் முக்கிய பொருள் ஒன்றைக் கொண்டு வந்தார்.

கொழும்பு அமெரிக்க தூதரக military attaché கைகளில் கொண்டுவந்த பொருள், சுமார் 4 அடி நீளமான கருப்பு-வெள்ளை சட்டலைட் இமேஜ் பிரின்ட் அவுட். இந்து சமுத்திரத்தில் ஈகுவேட்டர் கோடு பகுதி கடலிலை சட்டலைட்டில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது. கடலில் தென்படும் கப்பல்கள் வெள்ளை நிற புள்ளிகளாக தெரிந்தன.

இந்த சட்டலைட் இமேஜில் நகர்ந்து கொண்டிருக்கும் கப்பல்கள், வெள்ளை புள்ளியில் மேல் ஒரு டெயில் மார்க் போடப்பட்டு இருந்தன. அசையாமல் நிற்கும் கப்பல்கள், வெள்ளைப் புள்ளிகளாக காணப்பட்டன.

இந்த வெள்ளைப் புள்ளிகளில் சிலவற்றை சுட்டிக் காட்டிய அமெரிக்க அதிகாரி, “இவைதான் நீங்கள் குறிவைக்க வேண்டிய கப்பல்கள்” என்றார். (இந்த சட்டலைட் இமேஜ் பிரின்ட் அவுட், தற்போதும் இலங்கை கடற்படை தலைமையகத்தில் உள்ளது. ராணுவ கல்வி பயில்பவர்கள், தமது ராணுவ கல்லூரி வேண்டுகோள் கடிதத்துடன் சென்று, இலங்கை பாதுகாப்பு அமைச்சின் சிறப்பு அனுமதி பெற்று பார்வையிடலாம்)

“இந்தக் கப்பல்கள் இப்போது, அந்தந்த இடங்களில் அசையாமல் நிற்கின்றன. அவை அசைந்தால்கூட நாம் மானிட்டர் பண்ணிக்கொண்டு இருப்போம். கப்பல்கள் கடலை விட்டு எங்கேயும் சென்றுவிட முடியாது அல்லவா?” என்றும் சொன்னார் அவர்.

விடுதலைப் புலிகளின் அனைத்துக் கப்பல்களும் நின்றிருந்த இடங்களில் லொகேஷன், வரைபடத்தில் தெளிவாக இருந்தன. அதாவது, இந்து சமுத்திரத்தில் ஈகுவேட்டர் கோட்டில் இருந்து எத்தனை டிகிரி கோணத்தில், எவ்வளவு கடல் மைல் தொலைவில் என்ற விபரம்.

அட்மிரல் வசந்த கரன்னகொட, “எமது கடற்படை தாக்குதல் படகுகள் இவ்வளவு தொலைவு வரை செல்லும் திறனற்றவை. விடுதலைப் புலிகளின் கப்பல்களை தாக்குவதற்கு நீங்கள் உதவி செய்ய முடியுமா? குறைந்தபட்சம், போக்குவரத்து வசதி செய்து கொடுத்தால், தாக்குதலை நாம் பார்த்துக் கொள்வோம்” என்று கேட்டுப் பார்த்தார்.

“இல்லை. அமெரிக்காவால் அதிகபட்சம் செய்யக்கூடியது இவ்வளவுதான். விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தரித்து நிற்கும் இடங்களை காட்டியிருக்கிறோம். அவை நகர்ந்தால், தகவல் தருவோம். இதற்குமேல், நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார் அமெரிக்க அதிகாரி.

விறுவிறுப்பு.காமுக்காக, ரிஷி.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக