அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 22 ஜனவரி, 2013

ரிசானாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை இஸ்லாமிய ஷரியா சட்டப் பிரகாரமா? திட்டமிடப்பட்ட படுகொலையா?



ரிசானா நபீக்கைப் பற்றி விசேஷமாக எதுவும் சொல்லத் தேவையில்லை.

நமது இணைய வாசகர்களுக்கு நண்பர்களுக்கு அவரையும் அவருக்கு நிகழ்ந்த கொடூரமும் அதன் வேதனையும் வலிகளும் நன்கு தெரியும்.

ரிசானா நபீக்குக்கு இஸ்லாத்தின் பெயரால் வழங்கப்பட்ட தண்டனை சரியானதா? இஸ்லாமிய ‘ஷரியா’ சட்டப் பிரகாரம் அவரது நிலை என்ன?

இஸ்லாமிய ஷரியா சட்டம் மக்களை மனிதர்களாகவும், மனிதர்களை புனிதர்களாகவும் உருவாக்க அல்லாஹ்வினால் அருளப்பட்டதாக முஸ்லிம் அறிஞர்கள் சொல்கிறார்கள். உண்மையும் அதுதான்.

அப்படி என்றால் மனித குலத்தை ஒரு கணம் ஸ்தம்பிக்க செய்த ரிசானா நபீக்கின் மரண தண்டனை சட்டத் தீர்ப்பு சொல்லும் இஸ்லாமிய ஷரியா செய்தி என்ன?

சவூதி அரசாங்கத்துக்கு இஸ்லாமிய ‘ஷரியா’ சட்டத்தை அமுல் நடாத்தும் அருகதை அல்லது தகுதி இல்லை என்று இஸ்லாமிய ‘ஷரியா’ சட்டம் சொல்கிறது.

அதெப்படி..?இஸ்லாமிய ஷரியா சட்டம் அனுமதிக்கும் குற்றவியல் தண்டனையை அமுல் நடாத்தும் தகுதி அல்குர்ஆனை தனது அரசியல் யாப்பாக ஏற்று அதன் பிரகாரம் மறுமை வாழ்வின் வெற்றியைக் கருத்தில் கொண்டு இவ்வுலகில் நீதியையும் நேர்மையையும் அடக்கு முறைக்கு எதிரான கொள்கையையும் கொண்டிருக்கும் ஓர் இஸ்லாமிய அரசினால் மட்டுமே முடியும்.

ஆனால், சவூதி அரசோ இந்த தகுதிக்கு கொஞ்சமும் தகுந்த நிலையில் இல்லை என்பதே சவூதி அரசிடம் பணம் பெற்றுக்கொள்ளாத அனைத்து இஸ்லாமிய அறிஞர்களினதும் ஏக முடிவாகும்.

யாராவது ஓர் இஸ்லாமிய அறிஞர் சவூதியில் இருக்கும் சட்டம் இஸ்லாமிய ஷரியா சட்டம் என்று வாதிட்டால் கொஞ்சமும் சந்தேகம் இல்லாமல் அவ்வாறு அவர் பேசுவதற்காக அவருக்கு சவூதி ரியால்கள் கூலியாக வருவதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். அல்லது, அந்த அறிஞருக்கு இஸ்லாமிய ஷரியா சட்டம் சம்பந்தமான அறிவு போதாது என்று அர்த்தம்.

ஏனெனில், ரிசானா நபீக்குக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை சவூதியில் வாழும் அரபு மக்களின் இறைமையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டே நிறைவேற்றப் பட்டதாக சவூதியின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு உறுதி செய்திருக்கிறது.

அதாவது, சவூதி சட்டம் உலக மக்களுக்கு அல்லது முஸ்லிம்களுக்கு சொந்தமானது அல்ல.

சவூதியில் வாழ்கின்ற ஐரோப்பிய மக்களை பிரித்தானிய நாட்டு சட்டமும், அமெரிக்க மக்களை அமெரிக்க நாட்டு சட்டமும், அராபிய குடிமக்களை அங்கே வாழ்கின்ற பூர்வீகக் கோத்திரக் குடிகளின் கோத்திர செல்வாக்கு தீர்மானித்திருக்கும் கோத்திர சட்ட விதிகளும், அரபி அல்லாத மக்களை அமெரிக்க – சவூதி அரசுகள் இணைந்து நிர்ணயித்து கட்டுப்படுத்தும் அரசியல் சட்டமும் மக்களைக் கட்டுப்படுத்தி அமுலில் இருக்கின்றன.

இந்நிலையில் சவூதியில் பலவானுக்கு ஒரு சட்டமும் பலவீனமான ஆண்டிக்கு இன்னுமொரு சட்டமும் என்ற நிலையிலேயே தீர்ப்புகள் எழுதப்படுகின்றன.

இந்த நீதிதவறிய நீதி இஸ்லாமிய ‘ஷரியா’ சொல்லும் நீதிக்கு முரணானது. ஆகவே, சவூதியில் ரிசானா நபீக்குக்கு வழங்கப்பட்ட தண்டனை இஸ்லாமிய ஷரியா சட்டத்துக்கு முரணானது.

இஸ்லாமிய ஷரியா சட்டம் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்ற குற்றவாளிக்கு அவன் பக்க நியாயங்களை எடுத்து சொல்லுவதற்கு போதிய சந்தர்ப்பங்களை வழங்குமாறு வேண்டி நிற்கின்றது.

ரிசானா நபீக்குக்கு அவரது பக்க நியாயங்களை வெளிப்படுத்துவதற்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ரிசானாவுக்கு அவ்வாறான வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே, ரிசானா நபீக்குக்கு நிறைவேற்றப்பட்ட தண்டனை இஸ்லாமிய ‘ஷரியா’ சட்டத்துக்கு முரணானது.

இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கின்ற எந்த செய்கையையும் இஸ்லாமிய ஷரியா சட்டம் அனுமதிப்பதில்லை.

ரிசானா நபீக்கின் தண்டனையை இஸ்லாமிய ஷரியா சட்டங்களை அமுல்படுத்துகிறோம் என்ற ரீதியில் நிறைவேற்றி அந்தத் தவறுக்கு நியாயம் தேடும் முயற்சியில் இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகின்றது.

ஆகவே, ரிசானா நபீக்குக்கு நிறைவேற்றப்பட்ட சட்டம் இஸ்லாமிய ஷரியா சட்டத்துக்கு முரணானதாகும்.

இஸ்லாமிய ஷரியா சட்டம் தனது சட்ட தீர்ப்பாளர்களை குற்றம் சுமத்தப்பட்டவர் – தான் அந்தக் குற்றத்தை செய்யவில்லை என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சத்தியம் செய்தால் அந்த சத்தியத்தை ஏற்று அந்தக் குற்றவாளியை மன்னித்து விடுமாறு சட்ட செயல்படுத்துனர்களை வேண்டி நிற்கின்றது.

அவ்வாறான உயர்தர மன்னிப்பில் அல்லாஹ்வின் மீது அல்லாஹ்வின் சட்டத்தை அமுல் நடாத்தும் மக்கள் வைத்திருக்கும் விசுவாசம், கண்ணியம் வெளிப்படுகின்ற செயல் விளைவுகள் பொதிந்திருக்கின்றன.

ஒரு வாதத்துக்கு குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்ற ஒருவன் இஸ்லாமிய அமைப்பில் நம்பிக்கை வைத்திருக்கும் நீதித்துறையை ஏமாற்றும் நய வஞ்சக நோக்கில் பொய் சத்தியம் செய்ததாக வைத்துக் கொள்வோம். அவ்வாறான நிலை என்றாலும் இஸ்லாமிய ஷரியா சட்டம் அந்தக் குற்றவாளியை மன்னித்துவிடுமாறு அதன் நீதித்துறைக்கு பரிந்துரை செய்கிறது.

ஏனெனில், மனிதனின் உள்ளத்தின் ரகசியங்களை மனிதர்களால் அறிந்துகொள்ள முடியாது என்பது இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் வாதமாகும்.

ரிசானா நபீக் பலமுறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தும், இறுதியாக வாளின் பயங்கரமான வெட்டு வீச்சுக்கு சில நிமிடங்களுக்கு முன்னரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தனது பக்க நியாயத்தை நிரூபிக்க தனது சத்தியத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்டும் அவரது அபாக்கிய துரதிர்ஷ்ட நிலையை இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுல் நடாத்துகிறோம் என்று வாதிட்ட சவூதி நீதித்துறை அலட்சியப்படுத்தி இருக்கிறது.

அல்லாஹ்வின் பெயரை அற்பமாகக் கருதி நடந்துகொள்ள எக்காரணம் கொண்டும் இஸ்லாமிய ஷரியா யாரையும் அனுமதிப்பதில்லை.

இந்நிலையில் அல்லாஹ்வின் பெயர் கூறி செய்யப்பட்ட சத்தியத்தை அலட்சியப்படுத்திய செய்கையும், அல்லாஹ்வை கௌரவிக்காத செய்கைகளும் இஸ்லாமிய ஷரியா சட்டத்துக்கு முரணாகும்.

ஆகவே, சவூதி நிறைவேற்றிய மரண தண்டனையானது இஸ்லாமிய ஷரியா சட்டப் பிரகாரம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பு சொன்ன நீதிபதிக்கும் மரண தண்டனையை வேண்டி நிற்கும் செயல் விளைவை உருவாக்கி இருப்பதை மிக நுணுக்கமாக அவதானிக்கும் ஒருவரால் இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.

இந்நிலையில் ரிசானா நபீக்குக்கு எதிரான அனைவரையும் மரண தண்டனை அல்லது அவதூறுக்கான தண்டனை அல்லது தவறுக்கு துணைபோன செயலுக்கான தண்டனை என்ற குற்றவியல் விளிம்பில் இஸ்லாமிய ஷரியா சட்டம் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

இஸ்லாமிய ஷரியா சட்டப்பிரகாரம் குற்றத்தின் தன்மை ஆழ்ந்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்றொரு சட்டமிருக்கிறது.

ஒரு கொலை நடந்திருந்தால் அது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா அல்லது தற்செயலான விபத்தா என்று பரிசீலிக்குமாறு அது நீதித் துறையை பரிந்துரை செய்கிறது.

கொலைக்கான காரணம் சரியாக அனுமானிக்கப்பட்டதன் பின்னர்தான் அது தீர்ப்பை சொல்லுமாறு அறிவுறுத்துகிறது.

தற்செயல் விபத்துக்கு ஒருபோதும் மரண தண்டனையை இறுதித் தீர்ப்பாக இஸ்லாமிய ஷரியா சட்டம் தீர்ப்பளிப்பதில்லை. அத்தகைய தற்செயல் விபத்துக்கு இழப்பீட்டுத் தொகையை கொடுத்து மன்னிப்பை பெற்றுக்கொள்ளுமாறு அது குற்றவாளிக்கு அறிவுறுத்துகிறது.

இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு வசதிகள் இல்லாத நிலையில் அக் குற்றவாளி இருந்தால் அவனது பொறுப்பு அவனது குடும்பத்தினர் வசம் பொறுப்பு சாட்டப்படுகிறது. அக் குடும்பத்தினரால் அப் பொறுப்பை ஏற்க முடியாத நிலையில் அந்த இழப்பீட்டுத் தொகைக்கான பொறுப்பு இஸ்லாமிய அரசுடைய பொறுப்பில் கடமையாக்கப்படுகிறது.

ரிசானா நபீக்கின் நிலையில் இந்த செய்கைகள் அனைத்தும் திட்டமிட்ட முறையில் முற்றிலும் அலட்சியப் படுத்தப்பட்டிருக்கின்றன.

இஸ்லாமிய ஷரியா சட்டம் இத்தகைய அலட்சியங்களை குற்றவாளிக்கு சார்பான விதிகளாகக் கொண்டு குற்றம் சுமத்தப்பட்டவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கும்.

ஆனால், சவூதி செயல்படுத்திய இஸ்லாமிய ஷரியா இத் தவறுகளை அனுமதித்து ரிசானா நபீக்குக்கு எதிராக தீர்ப்பளித்தது.

இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் பிரகாரம் இது தண்டனையை வேண்டி நிற்கும் இன்னுமொரு தவறாகும்.

இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் பிரகாரம் கொலை செய்தவர் தான் கொலை செய்ததை தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் ஒப்புக்கொள்ள வேண்டும். அல்லது, பருவம் அடைந்த இரண்டு சாட்சிகள் மூலமாக அந்தத் தவறு கட்டாயமாக நிரூபிக்கப்படல் வேண்டும் என்கின்ற கடுமையான நிபந்தனை இருக்கின்றது. அது மட்டுமன்றி, அந்த சாட்சிகள் எக்காரணம் கொண்டும் கொலையுண்டவரின் நெருங்கிய உறவினர்களாக இருக்கக் கூடாது என்றும் அது வலியுறுத்துகிறது.

ரிசானா நபீக் – தான் கொலை செய்ததை இறுதிவரை ஒப்புக்கொள்ளவில்லை.

அவருக்கு எதிரான சாட்சிகள் அனைவரும் தற்செயல் விபத்தில் இறந்த குழந்தையின் பெற்றோர் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் பிரகாரம் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைக்குத் தான் குற்றம் செய்தவரைக் கொலைக்குப் பதிலாக கொலை செய்ய அனுமதி இருக்கிறது.

ரிசானா நபீக்கின் விடயத்தில் கொலைக் குற்றமே நடக்கவில்லையே…!!!

இனியெப்படி மரணதண்டனை?

இந்நிலையில் நாம் அவதானித்த இஸ்லாமிய ஷரியா சட்ட விதிகளின் பிரகாரம் சவூதி அரசினால் ரிசானாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையானது அத் தண்டனையை செயல்படுத்துவதற்கு தீர்ப்பளித்தவர்கள்… அதனை நியாயப் படுத்துபவர்கள் அனைவருக்கும் தண்டனையையும், மரண தண்டனையையும் நிறைவேற்ற பரிந்துரை செய்யும் திட்டமிடப்பட்ட படுகொலையாகும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

-ஜே.எஸ்.அப்துல் ரஸ்ஸாக்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக