வாகனங்களில் இருக்கும் ஹார்ன் எனும் வஸ்துவை எதற்கெல்லாம் மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்றால் ஆச்சர்யமாக இருக்கும். ஹார்ன் அடிப்பதற்கு மட்டும்தான் ஹார்ன் பொத்தானை மக்கள் அழுத்துகிறார்கள் என்று நினைத்தால் நீங்கள் நகரத்து நெரிசலில் இன்னும் அவ்வளவாகச் சிக்காதவர் என்று அர்த்தம்.
நான் பார்த்தவரை சில வித்தியாசமான சப்தம் எழுப்பிகளைக் குறிப்பிட முடியும்.
ஹார்னை ஒரு வாத்தியக்கருவி போல வெவ்வேறு அழுத்தங்கள் கொடுத்தபடி பலர் ஓரிடத்தில் இருந்து இன்னோரு இடத்தை அடைகிறார்கள்.
சிலர் சிக்னலுக்கு சிக்னல் வண்டியை நிறுத்தும்போது ஹார்ன் அடிக்கிறார்கள். சிலர் பச்சை சிக்னல் கிடைத்ததும் ஹார்ன் அடிக்கிறார்கள். இது அருகில் வந்துகொண்டிருக்கும் வாகனங்களுக்கான எச்சரிக்கை.
ரொம்ப போர் அடித்தால், கொட்டாவி விடுவதுபோல அனிச்சையாக அவ்வப்போது அடிக்கிறார்கள்.
சிலருக்கு ஹார்ன் என்பது சைரன் போல. வண்டியைக் கிளப்பிய நொடியில் இருந்து போய்ச் சேருகிறவரை தொடர்ந்து அழுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
சிலருக்கு பைக்கின் டேங்க் மீது அமர்ந்துவரும் தங்கள் குழந்தைகளுக்கான விளையாட்டுக் கருவி அது. அப்பா வண்டி ஓட்டியபடி அம்மாவுடன் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பார். குழந்தை சுவாரஸ்யமாக ஹார்ன் அடித்துக்கொண்டு வரும்.
நகரத்தில் எல்லோரும் எருமை மாடுகள் போல இருப்பதாகக் குறைபட்டுக் கொண்டிருந்தார் என் நண்பர் ஒருவர். எவ்வளவுதான் ஹார்ன் அடித்தாலும் மக்கள் வழிவிடுவதே இல்லை என்ற வருத்தம் அவருக்கு. வழிவிடுவதற்கு வாய்ப்பு இல்லாமல் நெரிசல் அதிகரித்துவிட்டதை அவர் கவனத்தில் கொள்ளவில்லை. அதற்கு அவர் ஒரு திடுக்கிடும் காரியத்தைச் செய்தார். லாரிகளில் பொருத்துவதற்கானது போல அலறும் ஒரு சப்தக்கருவியை கண்டடைந்தார். சிறிய தெருக்களில் அவர் ஹார்ன் அடித்துக்கொண்டு சீறிப்பாயும்போது பலருக்கும் இதயத்தில் மைல்ட் அட்டாக் ஏற்படுவதைப் பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை. ரயில், கப்பல், ஏரோ பிளேன் போன்ற பெரிய வாகனங்களுக்கான ஒலிப்பான்கள் கிடைத்தாலும் அதை தங்கள் பைக்குகளில் பொருத்திக்கொள்ள விரும்பும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சில ஹார்ன்கள் திடீரென்று குழந்தை நடுரோட்டில் தவறி விழுந்துவிட்டதுபோல கதறும்.
சில எக்கோ டைப். திடுக்கிட வைக்கும் சப்தத்தை ஏற்படுத்திவிட்டு மெள்ள மெள்ள தேய்ந்து மறையும்.
ஆட்டோக்களுக்கு ஹார்ன் தேவையே இல்லை. அதில் ஏற்படும் விபரீத ஒலி அலைகள் தார்ச் சாலையைக் கிழித்தபடி ட்ராக்டர் ஒன்று உழுதுகொண்டு வருவதைப் போல இருக்கும். ஏன் இந்தக் கொலைவெறி?
மக்களை அச்சுறுத்தி வழி ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறவர்கள் ஒரு ரகம்.
லட்சம்பேர் செல்லுகிற சாலையில் தாங்கள் மட்டுமே முன்னேறிச் செல்ல வேண்டும் என்று விரும்புகிற இவர்களுக்கு சிக்னலில் தமக்கு முன்னால் நிற்கும் ஆயிரம் வாகனங்களைப் பற்றி அக்கறையே இருக்காது. கடைசியில் நின்றபடி தொடர்ந்து ஹார்ன் அடித்துக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் தேவையே இல்லாமல் பொறுமையாகப் போய்க் கொண்டிருப்பதாக அவர்களுக்கு ஓர் எண்ணம்.
சிலர் கடைசி நிமிடத்தில் கிளம்பி பத்து நிமிடத்தில் ரயிலைப்பிடிப்பவர்கள். இவர்கள் பத்து நிமிடம் முன்னாடி கிளம்பாததற்கு சாலையில் குறுக்கிடும் அத்தனை பேரும் சபிக்கப்படுவார்கள்.
என்னுடைய நண்பர் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக தன் வண்டியில் ஹார்ன் அடித்ததில்லை என்றார். தினமும் சென்னை அண்ணா சாலையில் இருந்து அண்ணா நகர் வரை சென்று வருபவர். நடுவில்தான் 'நெரிசல் மாணிக்கம் சாலை' என்று அன்போடு அழைக்கப்படும் நெல்சன் மாணிக்கம் சாலை இருக்கிறது.
எப்படி என்று கேட்டேன்.
பொதுவாகவே அவர் சப்த அலர்ஜி உள்ளவர். ஒருதரம் ஹார்ன் ரிப்பேர் ஆகி, அதை மாற்றுவதற்கு நேரம் தோதுபடாமல் அப்படியே ஒருவாரம் ஓட்டியிருக்கிறார். அது ஒரு பழக்கமாகவும் சவாலாகவும் மாறி விட்டது. அப்படியே விட்டுவிட்டார். வாகனத்தில் ஹார்ன் இல்லாமல் ஓட்டுவது சட்டப்படிக் குற்றமாக இருக்கக்கூடும். ஆனால் அதனால் ஒரு போதும் சட்ட ஒழுங்குக்குக் குந்தகமாக அவர் நடந்துகொள்ள நேர்ந்ததில்லை.
அமெரிக்காவில் வந்திருந்த நண்பர் ஒருவர், ஹார்ன் அடிக்காமல் ஒரு நாள் முழுவதும் வாகனத்தை ஓட்ட முடிவதை அங்கு நண்பர்களுக்குள் ஒரு போட்டி போல செயல்படுத்துவதாகக் கூறினார்.
''இன்று முழுக்க நான் ஒருதரமும் ஹார்ன் அடிக்கவில்லை தெரியுமா?'' பெருமையாகச் சொல்லுவார்.
நட்ட நடுரோட்டில் தேவைப்படாத நேரத்திலும் நம்மைச் சுற்றி எத்தனை பேர் சப்தம் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள். மனிதர்களா, மன நோயாளிகளா என்பது புரியும். அமைதியை எப்படியெல்லாம் காயப்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியும்.
'ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்' என்று சில லாரிகளின் பின்பக்கத்தில் எழுதியிருப்பார்கள். இப்போது இவர்கள் இப்படி தேவையில்லாமல் ஒலி கொடுத்தால் வலி தான் கிடைக்கிறது.
ஹார்ன் என்பது ஒலி எழுப்பும் கருவி மட்டுமல்ல; மனிதர்கள் பண்பட்டு வருகிறார்களா என்பதை அளக்கும் கருவியும்தான்.!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக