அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 17 மார்ச், 2013

தேசிய கூடைப் பந்து அணியில் பிரபாகரனின் மகன்!


தேசிய கூடைப் பந்தாட்ட அணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளில் ஒருவரான மிர்லன் அல்லது குணசிங்கம் கஜேந்திரன் என்பவர் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்.

இவர் ஏழு அடி மூன்று அங்குலம் உயரம் உடையவர். பொலனறுவை மாவட்டத்தில் கண்டக்காடு என்கிற இடத்தில் முன்னாள் புலிகளுக்கான புனர்வாழ்வு முகாம்ம் ஒன்று உள்ளது. இங்கு இவர் புனர்வாழ்வு பெற்று வருகின்றார்.

இவர் கூடைப் பந்தாட்டத்தில் பயங்கரமாக அசத்துகின்றமை அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டு உள்ளது.இவ்விடயம் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத் கமகேயின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
இவரை தேசிய அணியில் இணைக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

அத்துடன் இவரின் விடுதலைக்கும் ஆவன செய்து உள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் இன்னொரு மகன்தான் மிர்லன்.

அதிர்ச்சியாக இருக்கின்றதா?

கீழே உள்ள பதிவை படியுங்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினரான மர்லன் என்பவர்தான் இலங்கையில் மிக உயரமான மனிதனாக இருக்க வேண்டும். இவரது உயரம் ஏழு அடி, மூன்று அங்குலம். வெலிக்கந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வருகின்றார்.

இவரது உயரத்தைக் காட்டிலும் மிக அதிர்ச்சியான விடயம் என்னவென்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அப்பா என்று பாசத்தோடு சொல்லிக் கொள்கின்றார். கடவுளை காட்டிலும் மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்கின்றார்.

திவயின பத்திரிகையாளர்கள் சில நாட்களுக்கு முன்னர் இப்புனர்வாழ்வு நிலையத்துக்கு சென்று இருந்தனர். இவர்களை நோக்கி மிகவும் உயரமான நபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். இந்நபர் பொய்க் கால்கள் அணிந்து இருக்கின்றாரோ? என்று இவர்களுக்கு சந்தேகமே வந்தது. இந்நபர் அருகில் வந்தமையுடன் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டனர்.


இவரது உயரத்தில் எந்தவொரு நபரையும் இந்நாட்டில் இவர்கள் பார்த்து இருக்கவில்லை. புனர்வாழ்வு நிலையத்தில் நாட்டின் உயரமான நபர் இருப்பார் என்று இவர்கள் எதிர்பார்த்து இருக்கவே இல்லை.

மர்லன் சாரமும், ரி சேர்ட்டும் அணிந்து காணப்பட்டார். மைதானத்தில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் கரப் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் கிறிக்கெற் விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் இவ்விளையாட்டுக்களை இரசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவர் மைதானத்தில் இல்லை. இது பத்திரிகையாளர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இவர் மீது கேள்விக் கணைகளைத் தொடுத்தார்கள்.

பத்திரிகையாளர்கள் இவருடன் பேசத் தொடங்கினார்கள். இவரும் மிக பொறுமையாக பதில்கள் கொடுத்தார்.

கேள்வி: உங்கள் உயரம் என்ன?


பதில்: ஏழு அடியும் மூன்று அங்குலமும்.

கேள்வி: இளைஞர்கள் பலரும் விளையாடிக் கொண்டிருக்கின்றமையை நாம் காண்கின்றோம். ஏன் நீங்கள் அங்கு செல்லவில்லை? உங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இல்லையா?

பதில்: எனக்கு விளையாட்டு என்றால் பிடிக்கும். நான் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்தேன். எனக்கு பட் மின்ரன் விளையாட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் இப்போது என்னால் எதுவும் விளையாட முடியாது. நான் என்னை களைப்படைய செய்யக் கூடாது என ஆலோசனை சொல்லப்பட்டு உள்ளேன். நான் களைப்படைகின்றபோது சுவாசிக்கின்றமைக்கு சங்கடப்படுகின்றேன். எனக்கு இதயத்தில் ஒரு கோளாறு. ஆகவேதான் என்னை நான் களைப்படைய செய்யக் கூடாது என கேட்கப்பட்டு உள்ளேன்.

கேள்வி: உங்களுக்கு இதயத்தில் பிரச்சினை என்பது எப்போது தெரியும்?

பதில்: இராணுவத்திடம் சரண் அடைந்த பிற்பாடுதான்.

கேள்வி: புலிகள் இயக்கத்தில் இருந்தபோது தெரியாதா?

பதில்: இல்லை.

கேள்வி: புலிகள் இயக்கத்தில் இருந்தபோது கடின வேலைகளை செய்து இருக்கவில்லையா?

பதில்: நான் கடினமான வேலைகளை செய்திருக்கின்றேன். சில கஷ்டங்களை எதிர்கொண்டு இருந்தேன்தான். ஆனால் பொருட்படுத்தி இருக்கவில்லை.

கேள்வி: ஈழத்தை அடைகின்றமைக்காக நீங்கள் கடுமையாக உழைத்து இருக்கின்றீர்கள் என்று சொல்லலாமா?

பதில்: நான் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பிரிவினைக்காகத்தான் போராடினோம்.

கேள்வி: சிங்களவர்களும், தமிழர்களும் மனிதர்கள்தானே? எல்லோர் உடலிலும் சிவப்பு இரத்தம்தானே ஓடுகின்றது? ஏன் நீங்கள் பிரிவினைக்காக போராடினீர்கள்?

பதில்: எனது தந்தையால் முன்னெடுக்கப்பட்ட பாதையை நான் பின்பற்றினேன்.


கேள்வி: யார் உங்கள் தந்தை?

பதில்: பிரபாகரன்.

கேள்வி: எப்படி பிரபாகரன் உங்களுக்கு தந்தை ஆனார்?

பதில்: அது ஒரு பெரிய கதை.


கேள்வி: அக்கதையை நீங்கள் சொல்கின்ற பட்சத்தில் நாங்கள் கேட்க தயார்?

பதில்: நாங்கள் புதுக்குடியிருப்பில் வசித்து வந்தோம். நான் சின்ன பிள்ளையாக இருந்தபோது மலேரியா காய்ச்சலால் அப்பா இறந்து போனார். அப்பா இறந்து சில மாதங்களிலேயே அம்மா மறுமணம் செய்து கொண்டு எங்களை கை விட்டுப் போனார். எனது அம்மம்மாவின் பராமரிப்பில் நான் இருந்தேன். அவர் ரொம்பவே வயதானவர். ஆனால் என்னை உணவூட்டி மிக நன்றாக வளர்த்தார். எனக்கு நான்கு வயதாக இருந்தபோது அம்மா என்னை விட்டுப் போய் விட்டார் என ஒரு முறை அம்மம்மா எனக்கு சொன்னார்.

அம்மம்மா என்னை பாடசாலைக்கு அனுப்பினார். எனது மாமாவால் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த பணத்தில்தான் இருவரும் வாழ்ந்து கொண்டிருந்தோம். நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அம்மம்மா இறந்து போனார்.

கேள்வி: பின்னர் என்ன நடந்தது?

பதில்: நான் அநாதை ஆனேன். வீதிகளில் அலைந்து திரிந்தேன். கடைகளில் உணவு இரந்து பெற்று உண்டேன். கடை ஓரங்களில் படுத்தேன். மாற்றி உடுக்க உடுப்பு இல்லை. ஏதோ நான் வாழ்ந்தேன்.

ஒரு நாள் என்னை கடந்து சில வாகனங்கள் தொடராக சென்றன. நான் பயத்தில் ஓடிப் போய் வாய்க்கால் ஒன்றுக்குள் மறைந்து கொண்டேன். அவை சென்ற பிற்பாடு பழையபடி என் இடத்தில் வந்து அமர்ந்தேன். ஆனால் சுமார் ஒரு மணித்தியாலம் கழித்து ஒரு வான் வந்தது. எனக்கு அருகில் தரித்து நின்றது.

இரு மனிதர்கள் வானில் இருந்து இறங்கினர். எனது சொந்த விபரங்களைக் கேட்டார்கள். இவர்களின் கேள்விகள் எல்லாவற்றுக்கும் நான் பதில் கொடுத்தேன். வானில் ஏறும்படி ஒரு மனிதன் சொன்னார். எனக்கு பயம் இருக்கவில்லை. வானில் விரைந்து ஏறினேன். வான் புறப்பட்டு சென்றது. பெரிய வீடு ஒன்றை வந்தடைந்தது. இருட்டு நேரம்தான். ஆனால் எனக்கு பயம் இல்லை. நான் வீட்டுக்குள் நடந்தேன். என்னைப் போன்ற பல சிறுவர்களை அங்கு கண்டேன். எனக்கு இது ரொம்பவே மகிழ்ச்சியை கொடுத்தது. குளிக்கின்ற இடத்தை காண்பித்தார்கள். குளித்த எனக்கு புதிய உடுப்புக்கள் கொடுத்தார்கள். நல்ல சாப்பாடு கொடுத்தார்கள். எனக்கு அந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாள். இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிறுவர் இல்லம் என பின்பு அறிந்து கொண்டேன்.

நான் கண்ட தொடர் வாகனங்களில் ஒன்றுக்குள் பிரபாகரன் சென்றிருக்கின்றார். என்னை கண்டிருக்கின்றார். என்னைப் பற்றிய தகவல்களை பெறச் சொல்லி உத்தரவிட்டு இருக்கின்றார். இதுதான் நான் புலிகளின் சிறுவர் இல்லத்தில் சேர்ந்த கதை.

நாங்கள் சந்தோஷமாக இருக்கின்றோமா? என்பதை அறிய பிரபாகரன் ஒவ்வொரு மாதமும் தவறாமல் இல்லத்துக்கு வருவார். எங்களுக்கு இனிப்புக்கள், உடுப்புக்கள் வாங்கி வருவார். எனக்கு ஒரு விடயம் மாத்திரம் புரியவில்லை. அவருக்கு என் மீது தனிப் பிரியமும், விசேட கவனமும். என்னுடன் பேசுவார். என்னை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று விசேட கட்டளைகள் பிறப்பிப்பார்.

சிறுவர்கள் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட மாட்டோம். இல்லத்துக்கு வந்துதான் ஆசிரியர்கள் கற்பிப்பார்கள்.

கேள்வி: நீங்கள் சண்டைகளில் பங்கேற்க வேண்டி இருக்கவில்லையா?

பதில்: எனக்கு அப்படியான கட்டாயம் இருக்கவில்லை. ஆனால் யுத்தத்தின் இறுதி கட்டங்களில் நாங்களும் களத்தில் இறங்க வேண்டி ஏற்பட்டது. நானும் ஆயுதங்கள் ஏந்தினேன்.

கேள்வி: அதாவது இராணுவத்துடன் நீங்கள் சண்டையிட்டீர்கள்?

பதில்: ஆம். சில சந்தர்ப்பங்களில் சண்டையிட நேர்ந்தது.

கேள்வி: நீங்கள் காயப்படவில்லையா?

பதில்: அதிஷ்டவசமாக நான் காயப்படவில்லை.

கேள்வி: ஏன் நீங்கள் இராணுவத்திடம் சரண் அடைந்தீர்கள்?

பதில்: நான் மாத்திரம் அல்ல ஏராளமான போராளிகள் நிராயுதபாணியாக சரண் அடைந்தோம்.

கேள்வி: பிரபாகரனின் நிலை என்ன?

பதில்: தெரியாது.

கேள்வி: பிரபாகரனின் இழப்பு குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: கவலை தருகின்றது. தந்தையை இழந்த மகனின் தவிப்பு இது. பிரபாகரன் எனக்கு தகப்பன். நான் தகப்பன் இல்லாமல் இருந்தபோது எனக்கு தகப்பன் ஆனவர். என்னை ஒரு மனிதனாக வளர்த்தவர். பிரபாகரன் எனக்கு அடைக்கலம் கொடுத்து இருக்காவிட்டால் இன்று நான் உயிருடன் இருக்க மாட்டேன். என்னை அவரின் சொந்தப் பிள்ளைகளில் ஒருவராக நடத்தினார். அவரது இழப்பு எனக்கு பெரிய கவலைதான்.


கேள்வி: தங்குமிடம், உணவு ஆகியவற்றை தந்தமைக்கு அப்பால் பிரபாகரன் உங்களுக்கு செய்த வேறு விடயங்கள் என்ன?

பதில்: என்னை அவர் போர் முனைக்கு அனுப்பவில்லை. புலிகள் இயக்கத்தில் என்னை ஒரு விசேட நபராகவே நடத்தினார். 27 வயதில் நான் திருமணம் செய்கின்றமைக்கு அவரால் அனுமதி தரப்பட்டது. புலிகள் இயக்கத்தில் ஏனையோர் 30 வயதில்தான் திருமணம் செய்ய முடியும். எனக்கு ஒரு புதிய வீடும், மோட்டார் சைக்கிளும் கொடுத்தார்.

கேள்வி: நீங்கள் சொல்கின்றமையைப் பார்க்கின்றபோது அவர் அடிக்கடி கொள்கைகளை சுய விருப்பத்துக்கு ஏற்றபடி மாற்றுகின்ற தலைவர் போல தெரிகின்றதே?

பதில்: நான் அந்த அர்த்தத்தில் எதுவுமே சொல்லவில்லை. இயக்கத்தை சேர்ந்த இருவர் திருமண பந்தத்தில் இணைகின்றபோது அவர்களுக்கு புதிய வீடு வழங்கப்படும். நானும் திருமணம் செய்தேன். எங்களுக்கும் வீடு கிடைத்தது. ஒரே ஒரு வித்தியாசம். என்னை 27 வயதில் திருமணம் செய்ய அனுமதித்தார்.

கேள்வி: அதாவது உங்களை 27 வயதில் திருமணம் செய்ய அனுமதித்தமை மூலம் கொள்கையை மாற்றிக் கொண்டார்?

பதில்: நான் அப்படி நினைக்கவில்லை. அவர் எனக்கு அப்பா. அவரில் குறை காண என்னால் முடியாது.

கேள்வி: உங்கள் மனைவியின் பெயர் என்ன?

பதில்: செல்வராணி

கேள்வி: உங்கள் மனைவியும் ஒரு புலிப் போராளி என்றீர்கள். இயக்கத்தில் அவர் வகித்த பங்கு என்ன?

பதில்: புலிகளின் அரசியல் பிரிவைப் பலப்படுத்துகின்றமைக்காக உழைத்தார்.

கேள்வி: இராணுவத்திடம் சரண் அடைகின்ற வரை புலிகள் இயக்கத்துக்காக இருவரும் உழைத்தீர்கள்?

பதில்: ஆம்.

கேள்வி: ஏன் சரண் அடைந்தீர்கள்?

பதில்: நாங்கள் இறக்க விரும்பவில்லை. எங்களுக்கு ஒரு குஞ்சு மகன் இருக்கின்றான். அவனுக்கு இப்போது நான்கு வயது. அவனை பலி கொடுக்க நான் விரும்பவில்லை.

கேள்வி: இருவரும் புலி உறுப்பினர்களாக இருந்தும் படையினரிடம் சரண் அடைய அஞ்சவில்லையா?

பதில்: நாங்கள் பாதுகாக்கப்படுவோம் என்று நினைத்தோம். நினைத்தபடிதான் நடந்தது.

கேள்வி: உங்கள் மனைவிக்கு புனர்வாழ்வு வழங்கப்படவில்லையா?

பதில்: எமது பையன் காரணமாக விடுவிக்கப்பட்டார்.

கேள்வி: இப்போது எங்கே வசிக்கின்றார்கள்?

பதில்: புதுக்குடியிருப்பில்.

கேள்வி: புனர் வாழ்வைத் தொடர்ந்து என்ன செய்ய உத்தேசித்து உள்ளீர்கள்?

பதில்: நான் முகாமில் தச்சு வேலை பழகுகின்றேன். தச்சுத் தொழிலாளியாக வேலை செய்வேன் என்கிற நம்பிக்கை உள்ளது.

கேள்வி: புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற்றால் என்ன செய்வீர்கள்?

பதில்: அது சாத்தியப்படும் என்று நான் நினைக்கவில்லை.

கேள்வி: ஒரு வேளை அப்படி நடந்தால் என்ன செய்வீர்கள் என்பதுதான் கேள்வி?

பதில்: நான் இப்போது நிறையவே படித்து விட்டேன். மீண்டும் ஒரு போர் எனக்கு தேவை இல்லை. இந்நாட்டில் எம்மால் அமைதியாக வாழ முடியும். எனக்கு மனைவியும், குழந்தையும் இருக்கின்றார்கள். நான் மகிழ்ச்சியாக வாழ விரும்புகின்றேன். நான் விரைவில் குடும்பத்துடன் மீள் இணைவேனாக இருந்தால் அது எனக்கு மிக பெரிய மன நிறைவைத் தரும்.
Share |
Image Hosted by ImageShack.us


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக