“ “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், யாரோ ஒருவரால் காட்டிக் கொடுத்ததால் தோல்வியடையும் அளவுக்கு விவேகமற்றவர் அல்ல” என்று தெரிவித்துள்ளார், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் வெளியுறவு பொறுப்பாளர் கே.பத்மநாதன் (கே.பி.)
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னோடிகளில், இன்னமும் உயிருடன், ஆக்டிவ்வாக இருப்பவர் இவர் ஒருவர்தான்.
யுத்தத்தில் விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்காலில் தோல்வியடைந்ததற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில், கே.பி.-யின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பேட்டியில், “பிரபாகரன் என்னும் எனது உயிர் நண்பனுடன் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன். நானே அந்த இயக்கத்தை ஆரம்பித்து எனது வாழ்நாளில் 30 வருடத்திற்கும் மேலான காலத்தை அதற்காகச் செலவிட்டிருக்கிறேன்.
ஒரு ஆத்மரீதியான உறவு அந்தப் போராளிகளுக்கும், எனக்குமிடையில் இருந்தது. இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டைப் பார்த்தால் நான் எனது தாயைக் காட்டிக்கொடுத்தது போல் தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் எனது வாழ்க்கையில் சந்தித்த ஒரேயொரு உயிர் நண்பன் பிரபாகரன். அவரைக் காட்டிக் கொடுத்ததாக சொல்வது அப்பட்டமான பொய். தமிழர்களைப் பொறுத்தவரை போர் ஏன் தோற்றது என்பது புரியாத புதிராக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
இந்த ‘காட்டிக் கொடுத்தல்’ குற்றச்சாட்டு, யுத்தம் முடிவுக்கு வந்த நாளில் இருந்தே உள்ளது. விடுதலைப் புலிகளின் திடீர் தோல்விக்கு காரணம் தேடுபவர்களில் சிலர், “அடடா, யாரோ காட்டிக் கொடுத்ததால்தான் பிரபாகரன் தோல்வியுற்றார்” என்று ‘கணக்கை வேறு இடத்தில் பாலன்ஸ் பண்ணிக் கொள்வது’ வழக்கம்.
காட்டிக் கொடுப்பு பட்டியல் மிக நீளமானது.
கே.பி. காட்டிக் கொடுத்தார், கருணா காட்டிக் கொடுத்தார், எரிக் சோல்ஹேம் (நார்வே) காட்டிக் கொடுத்தார், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் காட்டிக் கொடுத்தார், வைகோவும் நெடுமாறனும் தவறான தகவல்களை கூறி சிக்க வைத்தார்கள்… என்று, பெரிய பட்டியலே உள்ளது.
அவர்கள் பதிவு பண்ண விரும்புவது இரண்டு விஷயங்களை. முதலாவது, பிரபாகரன் சொந்தமாக தோல்வி அடைவதற்கு சான்சே இல்லை. இரண்டாவது, யார் மீது சேறு தெளிக்க வேண்டுமோ, “பிரபாகரனைக் காட்டிக் கொடுத்தார்” என்று கணக்கை அவரது புக்கில் பதிந்து விடலாம்.
முப்பது வருடத்துக்கு மேலாக ஒரு இயக்கத்தை நடத்திய ஒருவரை… இலங்கை அரசு 30 வருடங்களாக வீழ்த்த முடியாமல் திணறிய ஒருவரை… தனக்கு அருகே இருந்தவர்கள்கூட (உதாரணம், புலிகளின் துணைத் தலைவராக இருந்த மாத்தையா) துரோகம் செய்தால் கண்டுபிடித்து, அழித்துவிடும் திறமை படைத்தவர் என்று கூறப்பட்ட ஒருவரை…
மிக சிம்பிளாக யாரோ ஒருவரால் காட்டிக் கொடுத்து அழிக்க முடியுமானால், இவர்கள் கூறும் நபர் எவ்வளவு திறமைசாலியாக இருக்க வேண்டும் என்று ஒரு அர்த்தமும் வருகிறது. கடைசி நிமிடம் வரை அந்த நபரின் நோக்கத்தை அறியாமல் இருந்த பிரபாகரனின் திறமை மீதும் களங்கமும் வருகிறது.
பிரபாகரன் பற்றி இன்னமும் சிலாகித்துக் கூறப்படும் விஷயங்களைப் பாருங்கள்:
1) பிரபாகரன், இந்திய அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்பதை முன்கூட்டியே ஊகித்து, இந்திய அமைதிப்படை மீது யுத்தம் புரிந்தார் என்கிறார்கள்…
2) நார்வேயும் அமெரிக்காவும் விடுதலைப் போராட்டத்தை நசுக்க திட்டமிடுகிறது என்பதை முன்கூட்டியே ஊகித்து, அவர்களிடமிருந்து விலகிக் கொண்டார் என்கிறார்கள்…
3) சக இயக்கத் தலைவர்களான சிறி சபாரத்தினம், பத்மநாபா ஆகியோர் அன்னிய சக்திகளுக்கு துணை போவதை சாதுரியமாகப் புரிந்துகொண்டு அவர்களை அழித்தார் என்கிறார்கள்…
4) தன்னுடன் ஒன்றாக இருந்த துணைத் தலைவர் மாத்தையா இந்திய உளவுத்துறையுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று தெரிந்துகொண்டு, அவரை மேலே அனுப்பினார் என்று இன்னமும் சொல்கிறார்கள்.
இந்தியா, அமெரிக்கா உட்பட யார் தவறான மூவ் எடுத்தாலும் கண்டுபிடித்து விடக்கூடிய திறமைசாலியையே, சிம்பிளாக கவிழ்த்து விட்டார் என்று கே.பி.க்கும் வேறு சிலருக்கும் கிரெடிட் கொடுக்கிறார்கள்.
இதைவிட மோசமாக பிரபாகரனை, சுலபமாக ஏமாற்றப்படக்கூடிய ஒரு ‘எடுப்பார் கைப்பிள்ளை’ போல காட்ட முடியுமா? அருமையாக திட்டமிடப்பட்ட பிரசாரமாக அல்லவா இது இருக்கிறது!
இதற்கு கே.பி. என்ன சொல்கிறார்?
“நான் ஒரு மரக் கிளையில் இருந்து கொண்டு அந்தக் கிளையை நானே வெட்டுவேனா?” என்கிறார்.
“நான் மலேசியாவில் ஒரு அறைக்குள் தனியே இருந்தேன். பிரபாகரன் யுத்த முனையில் எத்தனை தளபதிகள், எத்தனை ஆயுதங்கள் எத்தனை தாங்கிகளுடன் நின்றிருந்தார். நான் மலேசியாவிலிருந்து காட்டிகொடுத்து அவர் போரில் தோற்றார் என்பது நிஜம் தமாஷாக இல்லையா? யதார்த்தமாக நீங்கள் சிந்தியுங்கள்.
இதே குற்றச்சாட்டை முன்வைக்கும் அரசியல்வாதிகள்தான், பிரபாகரன் மீண்டும் வருவார் என்கின்றனர். அதாவது, நான் காட்டிக் கொடுத்து அழித்து விட்டதாக கூறப்படும் அதே பிரபாகரன், மீண்டும் வருவார், போர் வெடிக்கும் என்றும் அதே அரசியல்வாதிகள் கூறுகிறார்கள்” என்கிறார் கே.பி.
பிரபாகரனை யாரோ காட்டிக் கொடுத்து அழித்தது நிஜம் என்றால், அவர் உயிருடன் வருவதற்கு சாத்தியம் இல்லை. பிரபாகரன் உயிருடன் இருப்பது நிஜம் என்றால், யாரும் அவரை அழித்திருப்பதற்கும் சாத்தியம் இல்லை. அப்படியிருந்தும் ஒரே ஆட்கள் இந்த இரு கதைகளையும் எப்படி அடுத்தடுத்த வாக்கியங்களில் தைரியமாகக் கூறுகிறார்கள்?
கதையில் லாஜிக் இல்லாமல், “அதையெல்லாம் யாரும் கவனிக்க மாட்டார்கள்” என்று தைரியமாக படம் எடுக்கும் டைரக்டர்கள் இல்லையா? சில சந்தர்ப்பங்களில் படங்களும் ஓடுவதில்லையா? அதுபோலதான் இதுவும். ”

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக