அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 15 ஏப்ரல், 2013

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் (பகுதி 33)


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவப் பலத்தின் மதிப்பீட்டினை மேற்கொண்டு வந்த பல வெளிநாட்டு ஊடகங்களும், உள்நாட்டு ஊடகங்களும், தங்களால் மதிப்பீடு செய்ய முடியாது எனவும் அந்தளவு தூரத்திற்கு புலிகளின் இராணுவ ரீதியிலான பலம் என்பது மதிப்பிட முடியாத அளவிற்கு மர்மமான முறையில் இருப்பதாகவும் பல ஆய்வாளர்களும் பத்தி எழுத்தாளர்களும் ஊடகங்களும் எழுதிக் கொண்டிருந்த போதிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்ததைத் தொடர்ந்து ஏற்படத் தொடங்கிய இராணுவரீதியிலான பலவீனம் பால்ராஜின் இழப்பினைத் தொடர்ந்து பெரியளவிலான பலவீனமாக மாற்றம் கண்டிருந்தது.

பால்ராஜின் இழப்பினை ஊடகங்கள் பெரியளவில் கண்டுகொள்ளாமல் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் பலமாக இருப்பதாகவும் பால்ராஜின் இழப்பும், ஒரு சாதாரண இழப்புப் போன்றதே எனவும் பால்ராஜ் போன்று இன்னும் பல பால்ராஜ்கள் உருவாகுவார்கள் என விடுதலைப் புலிகளும் பிரச்சாரங்களை முடுக்கி விட்ட போதிலும் களமுனையில் இருந்த ஒவ்வொரு போராளியும், தளபதியும் பால்ராஜ் போன்று சண்டையை வேறு தளபதிகளால் வழிநடத்த முடியாது என்பதனை அனுபவ ரீதியாகவும் நடந்துகொண்டிருந்த சண்டைகளின் பட்டறிவைக் கொண்டும் உணரத் தொடங்கினர்.

பால்ராஜின் இழப்புக்குப் பின்னர் புலிகள் இயக்கம் மரபு வழி தாக்குதல் எதிலுமே வெற்றிபெறவில்லை என்பது இங்கு முக்கியமான விடயமாகும். அதாவது மரபு வழித் தாக்குதலாக இருந்தாலும் சரி அல்லது முறையடிப்புத் தாக்குதலாக இருந்தாலும் சரி அல்லது வலிந்த தாக்குதலாக இருந்தாலும் சரி பால்ராஜிற்கு நிகராக எந்தவொரு தளபதியும் தாக்குப் பிடிக்கவும் முடியாது களமுனையை வழிநடத்தவும் முடியாது என்பதை பால்ராஜின் அணியின் கீழ் கடமையாற்றிய போராளிகள் தொடக்கம் ஏனைய தளபதிகளும் உணரத் தொடங்கினர். இதனால் உளவியல் ரீதியாக இந்தப் போராளிகளும், தளபதிகளும் பெரும் நெருக்கடிகளை அல்லது உளவியல் தாக்கங்களை சந்தித்துக் கொண்டிருந்தனர்.

இருந்த போதிலும் தமிழ் ஊடகங்கள் இந்த விடயங்கள் எதையுமே கவனத்திற் கொள்ளாமல் தங்களது எண்ணம் போலவும் தங்களது கற்பனைத் திறனுக்கு ஏற்பவும் எழுதிக் கொண்டிருந்தனர். ஆனால் களமுனைகளில் நின்ற புலிப்போராளிகளுக்கு மட்டும்தான் சண்டையின் வலியும், அதன் சாதக பாதகங்களும் தெரியத்தொடங்கியது. இவ்வாறு அனைத்து வழிகளிலும் புலிகள் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது. அதாவது கிளிநொச்சி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கத்தை இயக்கம் இழந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்ச்செல்வன், பால்ராஜ், கருணா என புலிகள் இயக்கத்தின் பிரதான தளபதிகளின் பிரிவும், இழப்பும் புலிகளிற்கு சகல வழிகளிலும் நெருக்கடிகளை கொடுத்துக்கொண்டிருந்தது.

அன்ரன் பாலசிங்கத்தின் இழப்பு தொடர்பில் தகவல் அறிந்ததும் பிரபாகரன் கண்ணீர் விட்டு கதறி அழுதபோது அவரை சமாதானப்படுத்த பொட்டம்மானும், தமிழ்ச்செல்வனும் படாதபாடு பட்டனர். அந்தளவிற்கு புலிகள் இயக்கம் நெருக்கடிகளை சந்தித்த போதெல்லாம் அரசியல் ரீதியாகவும், சர்வதேச அணுகுமுறைகளையும் அவதானித்து பாலசிங்கம் நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றி இருக்கின்றார். பல சமயங்களில் பிரபாகரனுடன் முரண்பட்டுக்கொண்டு ஒதுங்கியும் இருந்திருக்கின்றார். இவ்வாறு கடைசிக் கால கட்டத்திலும் பிரபாகரனுடன் முரண்பட்ட போதிலும் இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு என்பது பெரிய இடைவெளி உடைய உறவாக இருந்தது கிடையாது. அதாவது கணவன் மனைவிக்குள் ஏற்படுகின்ற சண்டை போன்று ஒரு கட்டத்தில் கோபித்துவிட்டு மீண்டும் உறவாடுவதே இவர்களின் பாணியாக இருந்தது.

இதைவிட பாலசிங்கம் இல்லாமல் பிரபாகரனால் சர்வதேச அரசியலை முன்னெடுக்க முடியாத நிலைமையே இருந்து வந்தது. இதை நடைமுறையில் பின்நாட்களில் புலிகள் இயக்கமும், உணர்ந்து கொண்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மதுப்பழக்கம், புகையிலை பாவித்தல், சிகரெட் பாவித்தல் போன்றவை முற்றாக தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் பாலசிங்கத்திற்கு மட்டும் பிரபாகரனால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பாலசிங்கம் தனது மனதில் பட்டதை வெளிப்படையாகவே கூறிவிடுவார். ஒரு தடவை பிரபாகரன், பொட்டம்மான், சூசை, தமிழ்ச்செல்வன் போன்றோருடன் உரையாடிக்கொண்டிருந்த பாலசிங்கம் தனக்கு உடனடியாக ஒருபனைக் கள்ளு வேண்டுமென்று அடம்பிடிக்கத் தொடங்கினார். இதனால் பிரபாகரன், பொட்டம்மான் போன்றோர் எரிச்சல்
அடைந்தபோதிலும் பாலசிங்கம் அவர்களின் எரிச்சலைப் பொருட்படுத்தாமல் உங்களால் முடியாவிட்டால் நான் வெளிப்படையாகவே போய் தவறணையில் வாங்கிவந்துவிடுவேன் என்று நகைச்சுவை கலந்த தொனியில் கூறிவிட்டார்.

எதற்குமே சிரித்தமுகத்துடன் காட்சிதரும் தமிழ்ச்செல்வன் இதற்கும் சிரித்துக்கொண்டு நின்றபோது பிரபாகரன் தமிழ்ச்செல்வனை முறாய்த்துப் பார்த்துவிட்டு பொட்டம்மானிடம் ஏற்பாடு செய்யுமாறு பணித்துவிடுகிறார். இதனை அடுத்து வட்டக்கச்சியில் உள்ள புலிகளின் உதவியாளர் ஒருவர் மூலமாக பாலசிங்கத்திற்கு ஒருபனைக்கள் எடுத்துவரப்படுகிறது. கள்ளைக் கண்டவுடன் பாலசிங்கம் இவர்களுக்கு காலமைக்கு சந்திப்போம் என்று கூறிவிட்டு அவர்களின் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் எழுந்து சென்று வட்டக்கச்சியில் உள்ள புலிகளின் பண்ணை முகாம் ஒன்றில் பெரிய மாமர நிழலில் இருந்து பனங்கள்ளை குடித்துக்கொண்டிருந்த பொழுது நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் பாலசிங்கத்துடன் பேசுவதற்காக தொலைபேசித் தொடர்பிற்கு வந்தார்.

பாலசிங்கம் நிதானமாக பேசி புலிகள் பிரதிநிதிகளுக்கும் நோர்வே தூதுக் குழுவினரிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்கிறார். இந்த சம்பவங்கள் அரசாங்கத்திற்கும், புலிகள் இயக்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் பாலசிங்கம் வன்னிக்கு வந்த ஒரு சந்தர்ப்பத்திலேயே இடம்பெற்றது. இதன்பின்னர்தான் பாலசிங்கத்திற்கும் பிரபாகரனிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு பாலசிங்கம் நோய்வாய்ப்பட்டு இறக்கவும் நேரிட்டது. இவ்வாறு பாலசிங்கம் பிரபாகரனுடன் முரண்பட்டுக்கொண்டிருந்த போதிலும் புலிகள் இயக்கத்திற்கு இராஜதந்திர ரீதியிலான நெருக்கடிகள் வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த நெருக்கடிகளை களைவதிலும், அந்த நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்கான முனைப்புகளையும் பாலசிங்கம் இறுதிவரைக்கும் மேற்கொண்டே வந்தார்.

ஆனால் பாலசிங்கம் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் கடுப்புடனேயே இருந்து வந்தனர். ஏனெனில் பாலசிங்கம் நக்கலாக வெளிப்படையாக இவர்களை ஒவ்வொரு சந்திப்பின்போதும் பேசிக்கொள்வது இவர்களுக்கு பிடிக்காத ஒரு விடயமாகவே இருந்துவந்தது. இதைவிட கூட்டமைப்பின் பிரதிநிதிகளை லண்டனில் இருந்தவாறு தொலைபேசியில் தொடர்புகொள்ளும் பாலசிங்கம் நக்கல் நையாண்டி கலந்த தொனியிலேயே இவர்களுடன் உரையாடி வந்தார். ஒருதடவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தனை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிக்கொண்டிருந்த பாலசிங்கம் திடீரென சம்பந்தனிடம் உங்கட ஆள் என்ன செய்கிறா இப்ப? இப்பவும் தொடர்பில் இருக்கிறீர்களா என்று கேட்டபொழுது சம்பந்தன் திக்குமுக்காடிவிட்டார்.

சம்பந்தனின் அந்த ஆள்யார்? அந்த குறித்த பெண்ணிற்கும் சம்பந்தனிற்கும் என்ன தொடர்பு? அதை தமிழ் ஊடகங்கள் தெரிந்து கொண்டனவா? அந்த விடயத்தை ஏன் பாலசிங்கம் சம்பந்தனிடம் நக்கலாக கேட்டார்? என்பதை தொடர்ந்து பார்ப்போம்..

(வே. அர்ச்சுணன்)

(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக