அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 16 ஜூலை, 2013

குடும்ப சூழ்நிலையால் இலங்கையில் பிரிந்த உறவுகள் 47 ஆண்டுகளின் பின்னர் சந்திப்பு

மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்

புதூர் : குடும்ப சூழ்நிலையால் இலங்கையிலிருந்து பிரிந்த சகோதர சகோத­ரிகள், சுமார் 47 ஆண்டுகளின் பின்னர் மதுரையில் மீண்டும் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை உணர்ச்சி பூர்வமாக பகிர்ந்து கொண்டனர்.

இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் பெரும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கண்ணையா. இவரது மனைவி குருவம்மாள். இந்த தம்பதியின் மூத்த மகள் வள்ளி. இவர் 2 வயது குழந்தையாக இருந்தபோது, 1942 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் இலங்கைக்கு வேலை தேடி சென்றார் கண்ணையா.

கொழும்பு நகராட்சியில் கூலித் தொழிலாளியாக வேலை கிடைத்ததும், அங்கேயே தங்கி விட்டார். இந்நிலையில், அவருக்கு 9 குழந்தைகள் பிறந்தன. இதில், 2 பேர் இறந்த நிலையில், 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் இருந்தனர்.

மூத்த மகள் வள்ளிக்கு, இலங்கையில் சுப்பையா என்ற கூலித் தொழிலாளியுடன் திருமணம் இடம்பெற்றது.

1966 ஆம் ஆண்டில் கண்ணையா உயிரிழக்க செய்வதறியாமல் தவித்த குருவம்மாள், குடும்ப சூழ்நிலை காரணமாக வள்ளியை தவிர்த்து, மற்ற பிள்ளைகளுடன் மீண்டும் இந்தியா திரும்பினார். காலப்போக்கில், வாரிசுகள் திருமணம் செய்துகொண்டு தூத்துக்குடி மற்றும் நெல்லை பகுதிகளில் குடியேறினர். இதனிடையே, மகள் வள்ளியின் ஞாபகத்தால் தவித்து வந்த குருவம்மாள், பண வசதி இல்லாததால் அவரை பார்க்க வேண்டும் ஆசையுடனேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், இலங்கையை சேர்ந்த சரஸ்வதி என்பவர் பாளையங்கோட்டையில் இருக்கும் தனது உறவினரை சந்திக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வந்திருந்தார். இங்கு தான் வள்ளியின் சகோதரிகளில் ஒருவரான கிருஷ்ணம்மாள் இருக்கிறார்.

நாளடைவில் சரஸ்வதியுடன் நட்பை வளர்த்து கொண்ட கிருஷ்ணம்மாள், ஒருநாள் இலங்கையில், தனது சகோதரி வள்ளியை பிரிந்த சம்பவத்தை கூறினார். இதனால் வருத்தமடைந்த சரஸ்வதி, `இலங்கை சென்று வள்ளியை தேடி உங்களுடன் சேர்த்து வைக்கிறேன்’ என நம்பிக்கையூட்டிச் சென்றார்.

இதனையடுத்து, இலங்கை சென்று சரஸ்வதி ஒருவாறு வள்ளியை கண்டுபிடித்து கிருஷ்ணம்மாளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால், பெரும் மகிழ்ச்சியடைந்த கிருஷ்ணம்மாள் தனது சகோதரியை பார்க்க ஆவல் கொண்டார். அதேபோன்று, சுமார் 47 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கிடைத்த சொந்தங்களை பார்க்க துடித்த வள்ளி, விமானம் மூலம் நேற்று முன்தினம் மதியம் மதுரை வந்தார்.

இதனையடுத்து, ஆத்திக்குளத்தில் உள்ள சகோதரி கிருஷ்ணம்மாளின் மகளின் வீட்டில் தனது சகோதர, சகோதரிகளை சந்தித்தார் வள்ளி. இதில் பெரும் மகிழ்ச்சியடைந்த அவர், கண்ணீர் மல்கியது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

இதுகுறித்து வள்ளி கூறுகையில், `வாழ்க்கையில் எனது தங்கை, தம்பிகளை பார்ப்பேன் என கனவில் கூட நினைக்க வில்லை. எங்கள் குடும்பத்தில் பேரன், பேத்தி உட்பட மொத்தம் 65 பேர் இரத்த பந்தங்கள். அனைவரையும் பார்த்தபிறகே, இலங்கை திரும்ப முடிவு செய்துள்ளேன்'' என்றார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக