அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 28 ஜூலை, 2013

மூன்று பிள்ளைகளின் தாய் குத்திக்கொலை

உயிரிழந்த விஜயகுமாரி மகனுடன்

சாதாரணமாக ஒரு ஈ, எறும்பைக்கூட கொல்லத்தயங்கிய காலமொன்று இருந்தது. ஆனால் இன்று சர்வசாதாரணமாக மனித படுகொலைகளை புரிகின்ற அளவுக்கு சமூகம் மாறியிருப்பதானது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். தாய், தந்தை, கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் என உறவுகளையே 

கொலை செய்யுமளவுக்கு இந்த கொலைப்படலம் வியாபித்துள்ளது.

நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்வாறான கொலைச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனவே தவிர குறைந்தபாடில்லை. ஆம் அண்மையில் தெமட்டகொட பகுதியிலும் இவ்வாறானதொரு படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது. மூன்று பிள்ளைகளின் தாயொருவர் அவரது கணவராலேயே குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவமே அது.

மூன்று பிள்ளைகளின் தாயான தெமட்டகொைட ஆராமய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய விஜயகுமாரி என்பவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு உள்ளாகி மிகவும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கழுத்து பகுதியில் கடுமையான காயங்களால் அதிக இரத்தம் வெளியேறியே இவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவமானது தெமட்டகொைட பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது. அதாவது விஜயகுமாரி தனது மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்து சரியாக 19ஆவது நாளிலேயே அவர் கணவனால் கத்திக்குத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இது போன்றதொரு கோரச்சம்பவம் எந்தத் தாய்க்கும் இடம்பெறக்கூடாது.

தெமட்டகொைட ஆராமய பிரதேசத்தைச் சேர்ந்த விஜயகுமாரியும் அவரை விட ஒரு வயது கூடிய கிஷோர் என்பவரும் காதலித்தே திருமணம் முடித்துள்ளனர். அவர்களின் காதலுக்கு சாட்சியாய் அழகிய மூன்று குழந்தைகளையும் விஜயகுமாரி பெற்றெடுத்தாள். காதலித்து திருமணம் முடித்த போதும் இவர்கள் வாழ்வில் நிம்மதி இருக்கவில்லை. தினந்தோறும் சண்டை சச்சரவுகளுடனேயே இவர்களது வாழ்க்கை நகர்ந்தது.

விஜயகுமாரிக்கு நான்கு வயதில் ஒரு மகனும் இரண்டு வயதில் ஒரு மகனும் ஒரு குழந்தையுமாக மூன்று பிள்ளைகளே இருந்தனர்.

விஜயகுமாரி திருமணம் முடித்ததும் தெமட்டகொடை ஆராமய பகுதியில் உள்ள தனது பெற்றோரின் பலகையால் செய்யப்பட்ட சிறிய வீட்டில் ஒரு பெண் பகுதியிலேயே கணவருடன் தங்கியிருந்தார். கணவரான கிஷோர் தெமட்டகொைட மேம்பாலத்துக்கு அருகில் உள்ள மதுபானசாலையிலேயே வேலை செய்து வந்தார்.

வேலை முடித்து விட்டு வீடு வரும் கிஷோர் தினமும் மது போதையில் வீடு வருவதாகவும், பின்னர் மனைவியுடன் சண்டையிடுவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் விஜயகுமாரியின் பெற்றோரும் மிகுந்த அதிருப்தியில் இருந்துள்ளனர். அதாவது ஒரே வீட்டிலேயே இவர்கள் அனைவரும் இருந்தமையால் விஜயகுமாரி மற்றும் கிஷோர் தம்பதியினரின் சச்சரவுகளானது மற்றவர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்துள்ளது.

வீட்டின் ஒரு பகுதியில் விஜயகுமாரியும் கணவர் கிஷோரும் இருக்க மற்றப் பகுதியில் விஜயகுமாரியின் தாய், தந்தை, இளைய சகோதரி மற்றும் சகோதரனும் இருந்துள்ளனர். தினந்தோறும் போதையில் வரும் கிஷோர் மனைவியுடன் சண்டையிடும் போது விஜயகுமாரியின் பெற்றோர் அவர்களை சமாதானப்படுத்தச் சென்றால் அவர்களை கடுமையாக திட்டி விரட்டிவிடுவாராம் கிஷோர். இவ்வாறான நிலையிலேயே விஜயகுமாரி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு வழமை போல வேலை முடிந்து மது போதையில் வீடு வந்துள்ளார் கிசோர். அன்றிரவு 8.30 மணியளவில் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். அதிக போதையில் இருந்த கிஷோர் சத்தமாக பேசிக் கொண்டிருக்கையில் விஜயகுமாரியின் பெற்றோர் உள்ளே சென்று கிஷோரை பேசியுள்ளனர்.

தினந்தோறும் குடித்து விட்டு வந்து இப்படி சண்டையிட்டுக் கொண்டிருந்தால் நாங்கள் எப்படி இருப்பது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் உறங்குகின்றார்கள். பேசாமல் போய் உறங்குமாறு கூறியுள்ளார்கள். ஆனால் அதற்கு கிஷோர் செவிமடுக்கவில்லை. தொடர்ந்தும் சண்டையிட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் விஜயகுமாரியின் மூத்த சகோதரி அங்கு வந்துள்ளார்.

பெற்றோரை சத்தமிட வேண்டாம் என்று கூறிய அவள் கிஷோரிடம் சென்று, ‘நீங்கள் மூன்று பிள்ளைகளின் தந்தையல்லவா. ஏன் இப்படி தினமும் சண்டை போடுகிறீர்கள். பிள்ளைகள் பாவம் இல்லையா? கைக்குழந்தையொன்று இருக்கும் வீட்டில் இப்படி சத்தமிடுவது சரியில்லை’ என்று கூறியுள்ளார். அதற்கும் கிஷோர் செவி சாய்க்காமல் சத்தமிட்டுள்ளார். எனவே இளைய சகோதரியின் அருகில் சென்ற அவள் கிஷோர் சத்தமிட்டால் பரவாயில்லை. நீயொன்றும் சொல்லப் போகாமல் பிள்ளைகளுடன் உறங்கு என்று கூறிவிட்டு சகோதரி புறப்பட்டார்.

விஜயகுமாரியின் மூத்த சகோதரியின் வீடும் அவர்கள் வசித்து வந்த பகுதியிலேயே இருந்தது. அதாவது விஜயகுமாரியின் வீட்டிலிருந்து சுமார் இரண்டு மூன்று வீட்டிற்கு அப்பால்தான் அவரின் வீடு இருந்தது. இவ்வாறு கிஷோரின் சத்தம் ஓரளவு ஓய்ந்ததால் விஜயகுமாரியின் பெற்றோர் அருகிலிருந்த உறவினர் ஒருவருடைய வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்வொன்றிற்காக சென்றனர்.

இவ்வாறு விஜயகுமாரியின் பெற்றோர் பிறந்தநாள் நிகழ்வுக்குச் சென்ற சொற்ப நேரத்தில் மீண்டும் கிஷோர் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார்.எனவே, இந்த சத்தம் கேட்ட விஜயகுமாரியின் மூத்த சகோதரி ஓடிவந்து பார்த்த போது தங்கையின் கழுத்தில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டதுடன் தங்கை துடிதுடித்துக் கொண்டிருந்துள்ளார். எனவே, உடனடியாக முச்சக்கர வண்டியொன்றில் விஜயகுமாரியை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி இரவு 10.30 மணியளவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அது தொடர்பாக தகவல் அறிந்த தெமட்டகொைட பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து விஜயகுமாரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தமையினால் பொலிஸார் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர்.

பொலிஸார் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்ற போது கத்தி குத்துக்குள்ளான விஜயகுமாரி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டி ருந்தார். எனவே, அவரிடம் எதுவித வாக்கு மூலங்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் விஜயகுமாரியின் சகோதரி சம்பவம் பற்றி பொலிஸாரிடம் தெளிவாக கூறியுள்ளார். எனவே பொலிஸார் கிஷோரை கைது செய்வதற்கு மீண்டும் தெமட்டகொடவிற்கு சென்றனர். ஆனால் கிசோர் அப்போது அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

சந்தேக நபரான கிஷோரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு கொண்டிருந்த வேளையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகுமாரி உயிரிழந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதாவது கத்திக்குத்துக்குள்ளான அதே தினத்திலேயே விஜயகுமாரி உயிரிழந்துள்ளார்.

கொலைச்சம்பவம் இடம்பெற்ற அடுத்த நாளான கடந்த 17ஆம் திகதி புதன்கிழமை அதிகாலையில் தெமட்டகொைட புகையிரத நிலையத்துக்கு அருகில் வைத்து சந்தேக நபரான கிஷோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இரத்தக் கறைபடிந்த ஆடையுடன் இருந்த வேளையிலேயே சந்தேக நபர் பொலிஸாரிடம் பிடிபட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் மனைவியான விஜயகுமாரி இறந்து போன விடயத்தை சந்தேக நபர் அறிந்திருக்கவில்லை.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் கொலை சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்ட கத்தியினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கொலைச்சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸார் அக்கத்தியினை மீட்டுள்ளனர்.

விஜயகுமாரியின் பெற்றோர் தன்னை விரட்டி விட்டு முழு வீட்டையும் தமதாக்கிக்கொள்ள முயன்றமையே இந்த பிரச்சினைக்கு மூல காரணம் என சந்தேக நபர் பொலிஸில் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். ஆனால் அது எந்தளவுக்கு நியாயமானது என்பது புரியவில்லை.

அதாவது சந்தேக நபர் தங்கியிருந்த வீடு விஜயகுமாரியின் பெற்றோருடையது. அத்தோடு அவ்வீட்டிலேயே விஜயகுமாரியின் பெற்றோரும் இருந்தனர். எனவே சந்தேக நபரை விரட்டி விட்டு வீட்டை தமதாக்க வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.

சம்பவத்தை கூர்ந்து அவதானித்துப் பார்க்கையில் மது போதையே இந்த கொலைக்கு காரணம் என்பதை அறிய முடிகிறது. கணவன் – மனைவியரிடையே பிரச்சினைகள் இருந்தால் அதை பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும்.

அதை விடுத்து இவ்வாறான மூர்க்கத்தனமான முடிவெடுப்பதானது எந்த வகையிலும் பிரச்சினைக்கு தீர்வாக அமையப் போவதில்லை.

பிரச்சினை இல்லாத குடும்பங்களே இல்லை. எல்லா குடும்பங்களிலும் ஏதோவொரு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. அவற்றை கூடுமானவரை பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும். முடியாத கட்டத்தில் வேண்டுமென்றால் சட்ட ரீதியான தீர்வொன்றினை பெற்றுக்கொள்ளலாம் அதுதான் சிறந்தது. மாறாக இவ்வாறான முயற்சியில் இறங்குவதால் எந்த பாவமும் அறியாத பிஞ்சுகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகிறது.

விசேடமாக வாழ்க்கைத் துணையை தேடும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். பொருத்தமற்ற துணையால் தொடர் பிரச்சினைகளும் கடைசியில் இது போன்ற அசம்பாவிதங்களையுமே சந்திக்க நேரிடும். ஆகையால் இது போன்ற சம்பவங்களை பாடமாக கொண்டு வாழ்க்கைப் பயணத்தை செப்பனிட வேண்டியது அவசியமாகும்.

ஒரு தந்தையின் தவறான முடிவால் இன்று மூன்று குழந்தைகள் தாயின் அரவணைப்பையும் தந்தையையும் இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். இந்த சின்னஞ்சிறுசுகள் என்ன பாவம் செய்தார்கள்? இப்படியான தண்டனையினை அனுபவிப்பதற்கு. எனவே, குடும்ப தகராறுகள் ஏற்படும் போது பெற்றோர் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கொஞ்சம் சிந்தித்தால் கூடுமானவரை இவ்வாறான பாரிய பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

மூன்று பிள்ளைகளின் தாயான விஜயகுமாரியின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் இரத்தம் படிந்த ஆடை மற்றும் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட கத்தி போன்ற தடயங்களை பெற்றுக்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதுடன் சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தெமட்டகொைட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் அபேசேகரவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வீரகேசரி
Share |
   
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக